அன்பானவர்களே, கிறிஸ்துமஸ் காலத்தை கொண்டாடுகிற நமக்கு "அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது" என்ற சத்தியம் கூறப்படுகிறது. வேதம், "தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவான் 4:8) என்றும், "அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது" என்றும் (7ம் வசனம்) கூறுகிறது. இந்த அன்பு, கிறிஸ்துமஸ் தினத்தன்று இயேசு என்ற மனித ரூபத்தில் வந்தது. இயேசு, தேவ அன்பின் வெளிப்பாடு என்றும், அன்பில் பூரணப்பட்டிருந்தார் என்றும் வேதத்தில் வாசிக்கிறோம் (யோவான் 3:16). தேவனுடைய அன்பை நமக்குத் தரும்படிக்கே இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்று வேதம் கூறுகிறது (1 யோவான் 4:9). அன்பு, மனித உருவத்தில் நம்மிடம் வந்தது. இந்த உலகம் வெறுப்பினால், பேராசையினால், சுயநலத்தினால் நிறைந்திருக்கிறது. ஆனால், உண்மையான அன்பான, தேவ அன்பில் நாம் மகிழும்படியே அன்பு இறங்கி வந்தது. "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23) என்று வேதம் கூறுகிறது. நம் பாவங்களுக்கு நிவாரணமான அன்பின் ஈவு, இயேசுவின் மூலம் வந்தது. வேதம், "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்" (ஏசாயா 53:5) என்று கூறுகிறது. நாம் மன்னிக்கப்படும்படி அன்பு சிலுவையில் அவரை தண்டித்தது.
வேதம், "அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது" (1 கொரிந்தியர் 13:4) என்று கூறுகிறது. ஆம், நம் பாவங்களை மன்னிக்கும்படியும், வெறுப்பு, இச்சை, சுயநலம் ஆகியவை நீங்கும்படி நம் இருதயங்களைச் சுத்தம்பண்ணும்படியும் இயேசு சிலுவையில் பாடனுபவித்தார். அன்பு குணமாக்குகிறது. இயேசுவாகிய இந்த அன்பிடம் வந்து, "ஆண்டவரே, என்னை மன்னித்தருளும். என்னை உம் இரத்தத்தினால் சுத்திகரியும்," என்று அர்ப்பணித்திடுங்கள். நீங்கள் இப்படி மனந்திரும்பும்போது, உங்களை மன்னித்து தம் அன்பினால் நிரப்புவதற்கு அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். இந்த அன்பு உங்களைப் பாதுகாத்து, ஜீவனை தரும். டெய்சி என்ற பெயர்கொண்ட ஒரு பெண்மணி இந்த அன்பை அனுபவித்தார்கள். ஏழைப் பெண்மணியான அவர்கள் பூ விற்கும் தொழில் செய்தார்கள். அவர்கள் கணவர் குடிப்பழக்கமுள்ளவராயிருந்தார். இயேசு அழைக்கிறார் கூட்டம் ஒன்றில் என் அப்பா சகோதரர் தினகரன் மூலமாக ஆண்டவர் அவர்களைப் பெயர் சொல்லி அழைத்தார். குடித்துவிட்டு வெளியே நின்று கொண்டிருந்த அவர்கள் கணவர் அழைக்கப்பட்டார். என் தகப்பனார் அவரை அணைத்துக்கொண்டபோது, 28 ஆண்டு அடிமைத்தனத்திலிருந்து அவர் விடுதலையானார். அன்பு அவரை பூரணமாக குணமாக்கியது. தேவன் அவர்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து, ஒரு வீட்டைத் தந்து, தம் அன்பில் அவர்களை நிலைப்படுத்தினார்.
அன்பு, இயேசுவின் வாயிலாக இந்த உலகத்திற்குள் வந்தபோது, அவர் வியாதிப்பட்டோரை சுகமாக்குகிறவராகவும், ஒடுக்கப்பட்டோரை விடுவிக்கிறவராகவும் சுற்றித் திரிந்தார். இயேசு, ஜனங்கள்மேல் மனதுருகினார் (மத்தேயு 9:35). தொழுநோயாளி ஒருவர், "உமக்குச் சித்தமானால் என்னைத் தொட்டு குணமாக்கும்," என்று கூப்பிட்டபோது, இயேசு மனதுருகி அவரை குணமாக்கினார் (மாற்கு 1:41). அன்பின் அபிஷேகம் அவர்மேல் இருந்ததினால், இயேசு நன்மை செய்கிறவராகவும் பிசாசினால் பிடிக்கப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் என்று வேதம் கூறுகிறது (அப்போஸ்தலர் 10:38). நம் நோய்களையும் பெலவீனங்களையும் இயேசு தம்மேல் சுமந்துகொண்டார் என்று வேதம் நினைவுப்படுத்துகிறது (மத்தேயு 8:17). குணப்படுத்துவதற்காகவே அன்பு வந்தது.
இட்டா நகரைச் (அருணாச்சல பிரதேசம்)சேர்ந்த திருமதி நாபா மேனியா என்ற பெண்மணியை ஒரு பூச்சி கடித்துவிட்டது. அதனால், அவரது ஒரு கால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் அந்தக் காலை அகற்றவேண்டும் என்று கூறினார்கள். ஆனால், அவர்களை இயேசு அழைக்கிறார் கூட்டத்திற்குக் கொண்டு வந்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தொட்டார். தேவ அன்பு அவர்கள்மேல் வந்தது. அவர்கள் கால் உடனடியாக குணமடைந்தது. இப்போது அவர்கள் நன்றாக நடக்கிறார்கள். ஆம், அன்பு குணமாக்கும். இந்த கிறிஸ்துமஸின்போது, இயேசுவாகிய பூரண அன்பிடம் வாருங்கள். அவரது அன்பு மன்னிக்கும்; குணமாக்கும்; சீர்ப்படுத்தும். இந்த அன்பினால் தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, அன்பாகவே இந்த உலகத்திற்கு வந்தததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் பலியானதினிமித்தம் அன்பு என்றால் என்ன என்பதை எங்களுக்குக் காண்பித்ததற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, எல்லா பாவமும் வெறுப்பும் சுயநலமும் நீங்கும்படி என் இருதயத்தை சுத்திகரித்தருளும். ஆண்டவரே, என்னை உம்முடைய அன்பினால் நிரப்பும். உம் மனதுருக்கம், உம்முடைய தொடுதல் தேவைப்படுவோருக்கு என் மூலம் பாய்ந்து செல்வதாக. என் இருதயத்தின் காயங்கள் யாவற்றையும் என் சரீரத்தில் இருக்கும் வியாதிகள் எல்லாவற்றையும் குணமாக்குவீராக. வேதனையும் பிரிவினையும் நிறைந்த உலகில் என்னை உம் அன்பின் பாத்திரமாக்குவீராக. தேவன் நம்மோடிருக்கிறார் என்ற உறுதியோடு, இம்மானுவேலாகிய உம் பிரசன்னத்தில் நான் வாழ உதவி செய்யும். இந்த கிறிஸ்துமஸின்போது உம் அன்பு என் வாழ்க்கையில், என் குடும்பத்தில் நிறைவதாக. அன்பு ஒருபோதும் தோற்காததற்காக உமக்கு நன்றி கூறி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


