அன்பானவர்களே, தேவன் உங்களை தம் நகைப்பினால் நிரப்ப விரும்புகிறார். ஆம், உங்கள் வாயை நகைப்பினாலும் உங்கள் உதடுகளை கெம்பீரத்தினால் நிரப்ப வாஞ்சிக்கிறார். "இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்" (யோபு 8:21) என்று வாக்குத்தத்த வசனம் கூறுகிறது. இதன்படியே ஆண்டவர் உங்கள் வாழ்வில் நகைப்பையும், எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழும்படி சந்தோஷத்தையும் அளிப்பார். இன்று, எல்லாம் முடிந்துபோனது; எல்லாவற்றையும் இழந்துபோனேன் என்று நீங்கள் கூறலாம். நான் எவ்வளவோ முயற்சிக்கிறேன்; ஆனால், என் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால், தேவன், பெரிய வெற்றியையும் உங்கள் பிரயாசத்துக்கு பலனையும் அளிப்பதோடு, அன்பு உங்களைச் சூழ்ந்திருக்கும்படியும் செய்து நகைப்பை திரும்ப தருவார்.
ஒரு பெண் சிரித்தாள். அவள் பெயர் சாராள். கர்த்தர், அவள் கணவனுக்கு தரிசனமாகி, "உன் மனைவி கருத்தரிப்பாள்," என்று கூறினார். அவள் நகைத்து, "இது எப்படி நடக்கும்? எனக்கு குழந்தை பெறும் வயது கடந்துவிட்டது. என் கணவருக்கும் வயதாகிவிட்டது. நான் குழந்தையுண்டாக வழியே இல்லை," என்று கூறினாள். ஆனால், தேவன், "உனக்குக் குழந்தை பிறக்கும். அவன் வாக்குத்தத்தத்தின் பிள்ளையாயிருப்பான். உன் சந்ததி கடற்கரை மணலைப்போலவும், வானத்து நட்சத்திரங்களைப்போலவும் இருக்கும். நான் உன்னை மிகவும் அதிகமாய் பெருகப்பண்ணுவேன்," என்று கூறினார். சாராளுக்கு இதை நம்ப இயலவில்லை. அவள், அவிசுவாசத்தால் நகைத்தாள். ஆனால், தேவன் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். அற்புதவிதமாக, முதிர்வயதில் தேவன் அவள் சொந்த கர்ப்பத்திலேயே ஒரு குழந்தையைக் கொடுத்தாள். ஆம், அவள் ஈசாக்கை பெற்றெடுத்தாள். ஈசாக்கு என்பதற்கு நகைப்பு என்று அர்த்தம். அவள், தன் மகனை வாழ்நாள் முழுவதும் 'நகைப்பு' என்று அழைத்தின் வாயிலாக சிரித்துக்கொண்டே இருந்தாள். தன் மகனை பார்த்தபோதெல்லாம் அவள் ஆனந்தத்தினால் நகைத்திருப்பாள்.
தேவன் உங்களுக்கும் அப்படியே செய்வார். அவர், இல்லாதவற்றை இருக்கிறவைபோல அழைக்கிறார். நீங்கள் பாவம் செய்துவிட்டீர்களா? தேவ பிரசன்னத்தை இழந்துபோனீர்களா? கடிந்துகொள்ளப்பட்டதைப்போல உணர்கிறீர்களா? இயேசு, "என்னிடம் வா. நான் உன்னை மன்னிப்பேன். உன்னை சீர்ப்படுத்துவேன். உன் வாழ்வில் நகைப்பை திரும்ப கொடுப்பேன்," என்று கூறுகிறார். அவர் எல்லா சாபங்களையும் அகற்றி, உங்களை விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவி தம் பிள்ளையாக மாற்றுவார். இன்று அவர் உங்களை மறுரூபமாக்கி, உங்கள் வாழ்க்கையை மறுபடியும் கட்டடியெழுப்புவார். உங்கள் குடும்பத்தின் சந்தோஷத்தை, பிள்ளைகளைப் பெறும் ஆற்றலை இழந்துபோனீர்களா? சாராளைப்போல அவர் உங்களை ஆசீர்வதிப்பார். படிப்பதற்கான, சிறந்துவிளங்குவதற்கான, வேலை செய்வதற்கான, வெற்றி பெறுவதற்கான கிருபையை இழந்துவிட்டீர்களா? தேவன் எல்லாவற்றையும் திரும்ப தருகிறார். அவர், "நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்" (ஏசாயா 55:12) என்று கூறுகிறார். அதற்கு, அவர் உங்களைப் பரிசுத்த ஆவியால் நிரப்புவார் (ரோமர் 14:17). பயப்படாதிருங்கள். இப்போதே அந்த கிருபை வருகிறது. இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதற்கு இயேசு வருகிறார். உங்கள் உள்ளத்தை திறந்திடுங்கள்; இயேசுவை, இந்த வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள். எல்லா ஆசீர்வாதமும், ஞானமும், நன்மையும் மன்னிப்பும் இயேசுவுக்குள் மறைந்திருக்கிறது. "இயேசுவே, உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு ஒரு எதிர்காலம் உண்டென்று அறிந்திருக்கிறேன். என் வாழ்க்கையை உம் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும்," என்று சொல்லுங்கள். அன்பானவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்:
தகப்பனாகிய தேவனே, என் உள்ளத்தை திறந்து இன்று உம்மிடம் வருகிறேன். என் சந்தோஷத்தை எடுத்துப்போட்ட போராட்டங்கள், ஏமாற்றங்கள், இழப்புகள் எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர். ஆண்டவரே, நீர் என் வாயை நகைப்பினாலும், என் உதடுகளை கெம்பீர சத்தத்தினாலும் நிரப்புவீர் என்று உம் வசனம் கூறுகிறது. ஆகவே, இன்றைய உம் வாக்குத்தத்தத்தை பிடித்துக்கொள்கிறேன். என் பாவங்களை மன்னியும்; உம் விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை கழுவும். என் வாழ்வில் உம் பிரசன்னத்தை திரும்பவும் தாரும்; என்னை அழுத்தும் எல்லா சாபத்தையும் பாரத்தையும் அகற்றும். நீர் சாராளை ஆசீர்வதித்து அவள் துக்கத்தை நகைப்பாக மாற்றியதுபோல, என் வாழ்விலும் ஓர் அற்புதத்தைச் செய்தருளும். ஆண்டவரே, என் குடும்பத்தை, என் எதிர்காலத்தை, இழந்துபோனதாக காணப்படும் எல்லா ஆசீர்வாதத்தையும் திரும்ப தந்தருளும். என்னை உம் பரிசுத்த ஆவியினால் நிரப்பி, சந்தோஷத்திற்குள்ளும் சமாதானத்திற்குள்ளும் வழிநடத்தும். கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கும் எல்லா நன்மையும் என் வாழ்வில் வெளிப்படுவதாக. புதிய எதிர்காலத்தை எனக்குத் தருவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து, இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


