அன்பானவர்களே, தேவன், ஆபிராமிடம், "நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்" (ஆதியாகமம் 15:1) என்று கூறினார். ஆம், தேவன், நாம் கேட்கிறதைக் காட்டிலும் மிகவும் அதிகமாய் நமக்குக் கொடுக்கிறார். நாம் எண்ணுகிறதைக் காட்டிலும் மிகப்பெரிய காரியங்களைச் செய்கிறார். அதுவே தேவனின் இருதயம். அவர் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாத அளவுக்கு ஆசீர்வாதங்களை பொழிவார். அவர் தருகிறவற்றை அவரே பாதுகாக்கவும் செய்கிறார். ஆபிரகாமின் வாழ்க்கையில், தேவன் தன்னை செய்யும்படி கூறியவற்றை அவன் விசுவாசத்தோடு செய்தான். தேவன், செல்லும்படி அவனுக்குக் கூறிய இடங்களுக்குச் சென்றான்; தேவன், அவனை வழிநடத்திய எல்லா தேசங்களிலுள்ள மக்களிடமும் நீதியான காரியங்களைச் செய்தான்.
கர்த்தர், அவனுக்கு ஒரு மகனைக் கொடுத்தார். ஈசாக்கு என்ற அந்த மகனை தமக்கு பலியிடும்படி கர்த்தர் சொன்னபோது, ஆபிரகாம் அதைச் செய்யும்படி சென்றான். ஆனால், கடைசி தருணத்தில் தேவன் அவனை தடுத்து நிறுத்தி, "நீ எனக்குப் பயப்படுகிறவன் என்பதை இப்போது அறிந்திருக்கிறேன். உன் குமாரனை நான் ஆசீர்வதிப்பேன்; உன்னை பெருகப்பண்ணுவேன்; எல்லையில்லாமல் நானே உனக்கு மகா பெரிய பலனாயிருப்பேன்," என்று கூறினார். தேவன் உங்களுக்கும் இப்படியே செய்யப்போகிறார். நீங்கள் கீழ்ப்படிந்திருக்கிறீர்கள்; தேவனை நம்பியிருந்திருக்கிறீர்கள்; தேவன், எந்தெந்த இடங்களுக்கு நீங்கள் செல்லவேண்டும் என்று விரும்பினாரோ அங்கெல்லாம் விசுவாசத்தோடு சென்றிருக்கிறீர்கள். தேவனே உங்களுக்கு மகா பெரிய பலனாயிருப்பார். அவர் உங்களைப் பாதுகாப்பார்.
முதலாவது, தேவன், மனுஷருக்குப் பிரியமானவற்றை, தங்களுக்கு நன்மையானவற்றை, தங்கள் புகழுக்கானவற்றை, தங்கள் மகிமைக்கானவற்றை, உலகப் பிரகாரமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும்படி, ஆவிக்குரிய காரியங்களை செய்கிறவர்களுக்கு அல்லாமல், தங்களுக்குச் சொன்னவற்றை செய்கிறவர்களுக்கே மகா பெரிய பலனை அளிக்கிறார் (கொலோசெயர் 3:23,24). சிறுமைப்பட்டவர்கள்மேல் கரிசனை கொண்டு, ஏழைகள், பாடுபடுகிறவர்கள், துரத்தப்பட்டவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் உதவி செய்வோருக்கு கர்த்தர்தாமே மகா பெரிய பலனாயிருப்பார்; தேவ சமுகமும், கர்த்தரின் சந்தோஷமும் அவர்களோடு இருக்கும்.
இரண்டாவதாக, தேவன், தங்கள் ஜீவனைக் குறித்து தம்மேல் நம்பிக்கையாயிருப்பவர்களுக்கு இந்தப் பலனை அளிக்கிறார் (எபிரெயர் 11:6). பிசாசின் எல்லா தாக்குதல்களின் மத்தியிலும் ஆண்டவர்மேல் நம்பிக்கையாய், "தேவன் என்னை கைவிடமாட்டார்," என்று கூறுகிறவர்கள் இந்த மகா பெரிய பலனை அடைவார்கள்.
மூன்றாவதாக, நன்மை செய்வதில் ஒருபோதும் சோர்ந்துபோகாதிருக்கிறவர்கள் இந்த மகா பெரிய பலனை அடைவார்கள் (கலாத்தியர் 6:9). ஒருவேளை அவர்களின் பிரயாசம் கனிகொடுக்காதிருந்தாலும், அவர்கள் ஆண்டவரின் நாமத்தினால் செய்கிறவற்றை யாரும் புரிந்துகொண்டு பாராட்டாமல் இருந்தாலும், அவர்கள் சோர்ந்துபோகாமல் நன்மை செய்யும்போது, இந்த மகா பெரிய பலனை பெற்றுக்கொள்வார்கள். இந்த ஆசீர்வாதத்தை தேவன் உங்களுக்குத் தருவாராக.
ஜெபம்:
அன்பு ஆண்டவரே, நீரே எனக்குக் கேடகமும் மகா பெரிய பலனுமாயிருக்கிறீர். ஆபிரகாமைப்போல உண்மையாய் உமக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும். நீர் நடத்தும் இடத்திற்குச் செல்லவும், உமக்குப் பிரியமானவற்றைச் செய்யவும் எனக்குக் கற்பித்தருளும். புகழையோ உலகப்பிரகாரமான எந்த லாபத்தையோ தேடும் எண்ணத்தை அகற்றிப்போடும். ஏழைகள், பாடுபடுகிறோர், உள்ளமுடைந்தவர்கள்மேல் மனதுருக்கத்தினால் என் உள்ளத்தை நிறைத்தருளும். எல்லா உபத்திரவங்கள், தாக்குதல்களின் மத்தியிலும் உம்மை நம்புவதற்கு எனக்கு விசுவாசத்தை தந்தருளும். நன்மை செய்கிறதில் நான் ஒருபோதும் சோர்ந்துபோகாதிருக்கும்படி என்னை பெலப்படுத்தும். உம் சமுகமும் உம் சந்தோஷமுமே எனக்கு மகா பெரிய பலனாக இருக்கட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


