பிரியமானவர்களே, இன்றைக்கு நீங்கள் தேவ பிரசன்னத்தை உணர்வீர்கள் என்று நிச்சயமாய் நம்புகிறேன். வேதம், "தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்" (நீதிமொழிகள் 22:29) என்று கூறுகிறபடி, தேவன்தாமே உங்களைத் தமது ஆசீர்வாதங்களுக்குள் நடத்துவார். வேலையில் விசேஷித்து விளங்குவது என்பது, தாலந்தையோ, திறமையையோ பொறுத்தது அல்ல; அது, ஆண்டவருக்குச் செவிகொடுக்கும் ஆவியை பெற்றிருப்பதையும் அவருடைய ஞானத்தில் நடப்பதையுமே குறிக்கிறது. எங்கள் ஸ்தாபனத்தில், ஒரு பெண்மணி டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை கற்றுகொடுப்பதில் மிகுந்த வாஞ்சை காண்பித்தார்கள். அவரது சிந்தனைகளும் தரிசனமும் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. தேவன், பரிசுத்த ஆவியானவரை கொண்டு என் தந்தையை வழிநடத்தியபடி, அவர் அந்தப் பெண்மணியை சந்தித்தார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் மீடியாவை வழிநடத்தும் முக்கியமான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. கீழ்ப்படிதலின் ஆவியோடு தேவனுடைய வழிகாட்டுதலின்படி நடக்கும்போது, அவர், நம்முடைய சொந்த முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட இடத்தில், ராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாக நம்மை கொண்டு வந்து நிறுத்துகிறார் என்பதை இது காட்டுகிறது.

"ஆண்டவரே, இன்றைக்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று தேவனை தினமும் தேடி, அவரது வழிகாட்டுதலை நாடுகிறவர்களுக்கு விசேஷித்த திறன் வாய்க்கிறது. நம்முடைய இருதயங்களை அவரது சத்தத்திற்குத் திறந்து நாம் ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர், நம்முடைய புத்திக்கு எட்டாத ஞானத்தையும் எண்ணங்களையும் நமக்குத் தருகிறார். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். அவர் தரும் எண்ணங்கள் நமக்குள் பெரும் விளைவை உண்டாக்கும்.

அவரது ஆவி கிரியை செய்வதால் எழும் ஓர் எண்ணம், தலைவர்களை ஈர்த்து ஸ்தாபனங்களை வடிவமைக்கும். நம் வேலை, தரப்படும் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் பெரியது; அது, தேவன் தம் மகிமையை விளங்கப்பண்ணும் தளமாக மாறுகிறது. தேவன், நமக்கு பெலன், திறன், தெய்வீக தரிசனம் தந்து அவரை கனம்பண்ணுவதற்கும் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் பயிற்றுவிக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய ஞானமில்லாமல் நான் ஒன்றுமில்லை. உம்முடைய வல்லமையில்லாமல் நான் பெலவீனன். உம்முடைய கிருபையன்றி எனக்கு எந்தத் திறமையும் கிடையாது. என்னை உம்முடைய சிந்தையால் நிறைத்து, உம்முடைய வழிகாட்டுதலை தாரும். உம்முடைய பெலத்தினாலும் தகுதியினாலும் என்னை நிரப்புவீராக. பரிசுத்த ஆவியானவர், என் வேலையை செய்யும்படி வழிநடத்துவாராக. என்னை கவனிக்கும் தலைவர்கள் ஆச்சரியப்படும்படி என்னை பயன்படுத்தும். நான் செய்யும் எல்லா காரியமும் உம் மகிமையை காட்டட்டும். ஆண்டவரே, என் மூலம் அற்புதங்களை செய்வீராக. நான் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் விசேஷித்துவிளங்கும்படியும், உம்முடைய தயவினால் பிரகாசிக்கும்படியும் செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன், ஆமென்.