அன்பானவர்களே, ஆண்டவர் இன்றைக்கு, "பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்" (எபேசியர் 6:16) என்ற விசேஷித்த வாக்குத்தத்தத்தை உங்களுக்குத் தருகிறார். எவ்வளவு வல்லமையான வசனம்! பலவேளைகளில் சத்துருவிடமிருந்து அதைரியப்படுத்தும் வார்த்தைகள், பொருளாதார நெருக்கடிகள், உடல் நல பிரச்னைகள், எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஆகியவை திடீரென்று அக்கினியாஸ்திரங்களைப் போல தாக்குகிறது. நீங்கள், "என்னால் இனிமேலும் இதை சமாளிக்க முடியாது. என் வியாபாரம் மூழ்கிக் கொண்டுள்ளது. என் ஊழியம் தடுமாறுகிறது. என் குடும்பம் உடைந்துகொண்டிருக்கிறது," என்று கூறலாம். ஆனால் அன்பானவர்களே, இந்தப் போராட்டத்தின் மத்தியில் கர்த்தர், விசுவாசத்தின் கேடகம் என்னும் வலிமையான ஆயுதத்தை நமக்குத் தருகிறார். விசுவாசம், நம்மை தற்காத்துக்கொள்வதற்கு மட்டுமல்ல; திரும்ப சண்டையிடவும் பெலப்படுத்துகிறது. தேவனுக்காக நாம் செய்கிறவற்றை, நம்மை பயமுறுத்தி நிறுத்துவதே பிசாசின் நோக்கம். ஆனால், தேவன், "விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்," என்று தெளிவாகக் கட்டளையிடுகிறார். நாம் விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும்போது, நமக்கு விரோதமாக வரும் அக்கினியாஸ்திரத்தை அழித்துப்போட முடியும்.
பழைய காலத்தில் போர்களில் பெரும்பாலும் ஒரு சிறிய சேனை பெரியதும் மகா பலத்ததுமான சேனையை எதிர்கொள்ள நேரிடும். அந்த தளபதி முன்னே நின்று, "திடமாயிருங்கள். உங்கள் கேடகங்களை எடுத்துக்கொள்ளுங்கள். நம்மால் இந்தப் போரில் வெல்ல முடியும்," என்று உரத்தக் குரலில் கூறுவார். அந்த தைரியம் வீரர்களுக்குள் பரவும். அதேவண்ணமாக, நம் ஆண்டவர் தம் வசனத்தின் மூலம் நம்மை பெலப்படுத்துவார். விசுவாசம், நம் இயற்கையான கண்களால் காணக்கூடாதவற்றை காணும்படி செய்கிறது. சீரிய ராஜா, எலிசா தீர்க்கதரிசியை பிடிப்பதற்கு பெரிய சேனையை அனுப்பியதாக வேதத்தில் வாசிக்கிறோம் (2 இராஜாக்கள் 6ம் அதிகாரம்). அதிகாலையில் எலிசாவின் வேலைக்காரன், விரோதிகள் பட்டணத்தைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, "ஆண்டவனே, நாம் என்ன செய்யட்டும்?" என்று கேட்டான். ஆனால், எலிசா, "பயப்படாதே. அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்," என்றான். பிறகு அவன், "கர்த்தாவே, இவன் பார்க்கும்படிக்கு இவன் கண்களைத் திறந்தருளும்," என்று ஜெபித்தான். வேலைக்காரன், எலிசாவைச் சுற்றிலும் மலையின்மேல் அக்கினிமயமான குதிரைகளும் ரதங்களும் நிற்பதைக் காண்கிறான். எவ்வளவு வல்லமையான சத்தியம்! தேவனுடைய வல்லமையான பாதுகாப்பு நம்மைச் சுற்றிலுமிருப்பதைக் காணும்படி விசுவாசம் நம் கண்களைத் திறக்கிறது. சத்துருவின் பெலனை பயம் நமக்குக் காட்டுகிறது; ஆனால், விசுவாசம் கர்த்தரின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
அன்பானவர்களே, இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு விசுவாசமென்னும் அதே கேடகத்தை தருகிறார். பயம், கடன், வியாதி அல்லது தோல்வி என்னும் அக்கினி கணைகள் உங்களுக்கு எதிராக வரும்போது, அந்தக் கேடகத்தை உயர்த்தி, "என் தேவன் பெரியவர்," என்று கூறுங்கள். விசுவாசம், யுத்தத்தை மறுக்காது. அதன் நடுவில் வெற்றியை அறிவிக்கும். பிசாசு உங்கள் கவனத்தை சிதறடிக்கவோ, விட்டுவிடும்படி உங்களை பின்வாங்கச் செய்யவோ விடாதீர்கள். எலிசாவுக்காக யுத்தம் செய்த கர்த்தர் உங்களுக்காகவும் யுத்தம் செய்வார். உங்கள் வீட்டை, உங்கள் பிள்ளைகளை, உங்கள் ஊழியத்தை அவர் அக்கினியால் பாதுகாப்பார். ஆண்டவர் புதிய வாசல்களை திறப்பார் என்றும், சத்துருவின் சகல யோசனைகளையும் அவமாக்குவார் என்றும் விசுவாசியுங்கள். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். தேவன், உங்கள் பயத்தை தைரியமாகவும், உங்கள் பெலவீனத்தை பெலனாகவும், உங்கள் தோல்வியை வெற்றியாகவும் மாற்றுவார். திடமாக நில்லுங்கள், உங்கள் கேடகத்தை உயர்த்துங்கள், விசுவாசத்துடன் முன்னேறிச் செல்லுங்கள். ஜெயம் கர்த்தருடையது.
ஜெபம்:
 அன்புள்ள ஆண்டவரே, விசுவாசமென்னும் கேடகத்தை எனக்குக் கொடுத்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என் உள்ளத்திலிருந்து எல்லா பயத்தையும் அகற்றிப்போடும். என்னை தடுக்க முயற்சிக்கும் சத்துருவின் எல்லா யோசனைகளையும் அழித்துப்போடும். நாம் பெலவீனனா(ளா)கவும் நம்பிக்கையற்றவனா(ளா)கவும் உணரும்போது என்னை பெலப்படுத்தும். உம்முடைய பலத்த சேனை என்னை சூழ்ந்திருப்பதை நான் காண எனக்கு உதவும். ஆண்டவரே, என் உள்ளத்தினுள் பலத்த பராக்கிரமசாலியாய் எழுந்தருளும். வியாதியின், கடனின், பயத்தின் எல்லா அக்கினியாஸ்திரங்களும் அழிக்கப்படட்டும். எல்லா சவால்களையும் சந்திப்பதற்கு என்னை தெய்வீக தைரியத்தால் நிரப்பும். பூரணமான வெற்றியையும் சமாதானத்தையும் எனக்கு அருளிச்செய்யவேண்டுமென்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

 தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
 தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்     Donate Now
  Donate Now


