அன்பானவர்களே, இன்று (மே 29) என் அம்மாவின் பிறந்தநாளாகும். என் அம்மாவைக் குறித்து யோசிக்கும்போதெல்லாம் அவர்களுடைய அமைதியான விசுவாசத்தை வியக்கிறேன். ஆம், விசுவாசம், ஜெபத்தின் வல்லமை போன்ற பல காரியங்களை நான் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன். தாய்மாராக, நாம் எப்போதும் பயப்படுகிறோம்; நம் பிள்ளைகளின் வாழ்வில் நடக்கும் காரியங்களைக் குறித்து கலங்கிப்போகிறோம். இது குறித்து நான் என் அம்மாவிடம் வேடிக்கை செய்வதுண்டு. ஆனால், அவர்கள், "நீ அம்மாவாகும்போது எல்லாவற்றையும் புரிந்துகொள்வாய்," என்று கூறுவார்கள். ஆம், நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அத்தனை பயத்தின் பின்னும் இயேசு எல்லாவற்றையும் தனக்கு சாதகமாகவே முடியப்பண்ணுவார் என்று அதிகமாய் விசுவாசிக்கவும் செய்வார்கள். அதை அவர்கள் பெரிய அளவில் வெளியே காண்பித்துக்கொண்டது கிடையாது. ஆனால், அவர்கள் ஜெபத்தின் வல்லமையால் நிறைந்திருந்தார்கள். ஜெபத்தின் வல்லமையாலும், அவர்களுக்கிருக்கும் விசுவாசத்தினாலும் பல தடைகளை அவர்களால் தாண்ட முடிந்தது. இன்று ஆண்டவர், உங்களுக்கும் அதே காரியத்தை வாக்குப்பண்ணுகிறார். ஆண்டவர், உங்கள் உண்மைக்கான பலனை அளிப்பார். வாழ்க்கையில் நீங்கள் பல காரியங்களைக் குறித்து கலங்கியிருக்கலாம். உங்களைக் கீழே தள்ள முயற்சிக்கும் மக்களைக் குறித்து, அழிக்க முயற்சிப்பவர்களைக் குறித்து, சிறைக்குள் தள்ள முயற்சிப்பவர்களைப் பார்த்து நீங்கள் பயந்திருக்கலாம். ஆனால், இன்று ஆண்டவர், இந்த எல்லா உபத்திரவங்களிலிருந்தும் தாம் உங்களை விடுவிப்பதாகக் கூறுகிறார்.

நான் எட்டு வயது சிறுமியாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பெங்களூருவில் ஒரு ஜெபக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாங்கள் குடும்பமாகச் சென்றிருந்தோம். இரண்டு கார்களில் பயணித்தோம். ஒரு கார் முழுவதும் பெரியவர்கள். என் பெற்றோர், உறவினர்கள் எல்லோரும் இருந்தனர். இரண்டாவது காரில் என் வயது உறவுப்பிள்ளைகள் அனைவரும் இருந்தோம். நாங்கள் பெங்களூருவுக்குள் நுழைய இருந்தபோது, என் அப்பாவும் அம்மாவும் சென்ற காரிலிருந்த சிலுவையைப் பார்த்து ஒரு கூட்டத்தினர் அவர்களை நிறுத்தினர். எங்கள் காரை அவர்கள் நிறுத்தவில்லை. ஆகவே, நாங்கள் அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, என் அம்மா தொலைபேசியில் அழைத்தார்கள். அவர்கள், "ஷில்பா, எங்களை இந்த இடத்தில் நிறுத்திவிட்டார்கள். எங்களைக் கொல்ல பார்க்கிறார்கள். காரையே எரித்துவிடுவோம் என்கிறார்கள். கவனமாக இருந்துகொள்ளுங்கள்," என்று கூறினார்கள். நாங்கள் மிகவும் பயந்துபோனோம். என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களைப் பார்ப்பதற்காக திரும்பிச் சென்றோம். நாங்கள் ஜெபக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபடியால் அவர்கள் காரை மறித்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 10 பேர் இருந்த அந்தக் கூட்டத்தில், ஒருவருக்கு என் பெற்றோரை அடையாளம் தெரிந்தது. அவர், "இவர்கள் திருநெல்வேலியில் பல் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்களை ஒன்றும் செய்யாதீர்கள். இவர்கள் நல்லவர்கள்," என்று கூறினார். அப்போதுதான், நான் உபத்திரவத்தின் நடுவிலும் தேவ கிருபை எங்களோடு இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன். சத்துருக்கள் வாயிலாகவும் தேவன் நமக்கு கிருபை அருளுகிறார்.

இன்னொரு காரில் இருந்த நாங்கள் பயந்துபோனோம். நான், "ஆ இயேசுவே, நான் சிலுவையை அணிந்திருக்கிறேன். டி-ஷர்ட் அணிந்திருக்கிறேன். என்னை கொன்றுவிடுவார்களா?" என்று நினைத்தேன். ஆனால், என் அம்மா தன்னுடைய சிவப்பு நிற வேதாகமத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு, எதற்கும் பயப்படாமல் நடந்து சென்றார்கள். தேவன் தன்னை காப்பாற்றுவார் என்ற விசுவாசம் அவர்களுக்கு இருந்தது. ஆம், அவர்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தால், தேவன் எங்களை விடுவித்ததோடு, இத்தனை ஆண்டுகளாக எங்களை வழிநடத்தி வருகிறார். ஆகவேதான் வேதம், "அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்" என்று கூறுகிறது (எண்ணாகமம் 21:34). அப்போது என் அம்மா பயந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், ஆண்டவர் எதிரிகளை எங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார். நாங்கள் இரக்கம் பெற்றோம். அவ்வண்ணமே, ஆண்டவர் உங்கள் விசுவாசத்தை ஆசீர்வதிப்பார். இயேசுவை விட்டுவிட வாய்ப்பிருக்கும்போது, நீங்கள் அவரை விட்டுவிடவில்லை. அவரை மறுதலிக்க வாய்ப்பு இருந்தபோது, நீங்கள் ஒருபோதும் அவரை மறுதலிக்கவில்லை. ஆகவே, ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லா பயத்திலும், சோதனையிலும் என்னோடு இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் உள்ளம் கலங்கும்போது, உம்மையே முழுவதுமாக நம்புவதற்கு உதவும். உம்மீதான அசையாத விசுவாசத்தினால் என்னை நிரப்பும். ஒருபோதும் உம் நாமத்தை மறுதலிக்காதிருக்கவும், உமக்காக நிற்கவும் எனக்கு தைரியத்தை தந்தருளும். உம் கிருபை எனக்கு முன்னே சென்று எல்லா ஆபத்திலிருந்தும் என்னை பாதுகாக்கட்டும். என்னை சூழ்ந்திருக்கும் எல்லா சதியாலோசனையிலிருந்தும், பிரச்னையிலிருந்தும் என்னை விடுவித்தருளும். என் வாழ்க்கை உம் உண்மைக்கும் நன்மைக்கும் சாட்சியாக விளங்குவதாக. நீர் ஒருபோதும் என்னை கைவிடமாட்டீர் என்று விசுவாசித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.