எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்" (நீதிமொழிகள் 9:10,11) என்ற வேத பகுதி வாக்குத்தத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆம், அன்பானவர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எவ்வளவு பெரியவர் என்பதை பாருங்கள்! எந்த அளவு அதிகமாக நீங்கள் ஆண்டவருக்குப் பயப்படுகிறீர்களோ, அந்த அளவு அதிகமாக அவர் உங்களை ஆசீர்வதிப்பார்; தாம் வாக்குக்கொடுத்தவண்ணமே உங்கள் ஆயுளை நீட்டிப்பார். கர்த்தருக்குப் பயப்படுதல் என்பதற்கு, வெறுமனே தேவனுக்கு அஞ்சியிருப்பது என்று மாத்திரம் அர்த்தமல்ல; ஆழ்ந்த பயபக்தியுடன் வாழ்தல், அவரை கனம்பண்ணுதல், அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிதல், அவர் சித்தத்தின்படி நடத்தல் என்பதும் அர்த்தமாகும். அப்படிப்பட்ட வாழ்க்கை தேவனின் ஞானம், கிருபை, நீடித்த ஆயுள் ஆகியவற்றை அளிக்கும். நம் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே கர்த்தருக்குப் பயப்படுதலை கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்கள் வளரும்போது, தேவன்மேல் பயபக்தியுள்ளவர்களாக இருப்பதோடு, வாழ்க்கை முழுவதும் அவர்களை வழிநடத்தக்கூடிய திட ஆவிக்குரிய அஸ்திபாரத்தையும் கொண்டவர்களாகவும் இருப்பார்.

நான் வாலிபப் பெண்ணாக இருந்தபோது, போதகர் ஒருவர், "சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்," (நீதிமொழிகள் 31:30) என்ற வசனத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார். அந்த வசனம் என் இருதயத்தை ஆழமாகத் தொட்டது; என் வாழ்க்கையை வழிநடத்தும் கொள்கையாக மாறியது. வெளிப்புற வசீரத்தையோ, அழிந்துபோகும் அழகையோ சார்ந்துகொள்ளாமல், கர்த்தருக்குப் பயப்படும் இருதயத்தை உருவாக்கவேண்டும் என்று கற்றுக்கொண்டேன். அப்படிப்பட்ட வாழ்க்கை தேவனிடமிருந்து நித்திய கனத்தைப் பெறும். தேவ மனுஷனாகிய ஆபிரகாமை பாருங்கள். அவன் கர்த்தர்பேரில் மிகுந்த அச்சமும் பயபக்தியும் கொண்டவனாயிருந்தான். தேவன் கட்டளையிட்ட எல்லாவற்றுக்கும் தயங்காமல் கீழ்ப்படிந்தான். அவனது தேவ பயத்தின், உண்மையான கீழ்ப்படிதலின் காரணமாக முதிர்வயது வரைக்கும் வாழ்ந்தான்; தன் வாழ்க்கையில் தேவ நோக்கத்தை நிறைவேற்றினான். அவன் வாழ்க்கை, தேவனுடைய வழிகளில் நடப்பது அவரது ஆசீர்வாதத்தை நாம் பெறும்படி செய்யும் என்று நினைவுறுத்துகிறது.

இன்று நம் வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்போம். வயதில் சிறிய பையனாக, பெண்ணாக, வாலிப வயதில் அல்லது முதியவராக இருக்கலாம். அனைவருமே கர்த்தருக்குப் பயப்படும்படி அழைக்கப்படுகிறோம். தேவன் எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறவாமல் நம் வார்த்தைகள், செயல்கள், தீர்மானங்கள், அனுதின நடத்தை அனைத்திலும் கவனமாக இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து நமக்குப் போதிக்கிறார்; வழிநடத்துகிறார். நாம் அவரது சத்தத்துக்கு மனதார கீழ்ப்படியவேண்டும். நாம் கர்த்தருக்குப் பயந்து வாழும்போது, பூமியில் தொடர்ந்து அவரை மகிமைப்படுத்தும்படி, தம் வாக்குத்தத்தத்திற்கேற்ப நம் நாட்களைப் பெருக பண்ணுவார்; ஆயுளோடு ஆண்டுகளைக் கூட்டுவார். ஆண்டவர்தாமே அவருக்குப் பயந்து நடந்து, அவர் வாக்குப்பண்ணியபடி அவரது ஆசீர்வாதத்தை அனுபவித்து மகிழவும் நமக்கு உதவுவாராக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்றும், உம் வழிகளில் நடப்பவர்களின் ஆயுளோடு பல ஆண்டுகளை கூட்டுவீர் என்றும் எனக்கு நினைவுப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அனுதினமும் பயபக்தியோடு, தாழ்மையோடு, முழு மனதோடு, கீழ்ப்படிதலோடு வாழ எனக்குக் கற்றுத்தாரும். வெளிப்புற அழகு, உலகப்பிரகாரமான வெற்றி, மனித பெலன் இவற்றை ஒருபோதும் சார்ந்திராமல், உம்மையே முழுதாய் நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவர் என் வார்த்தைகளை, எண்ணங்களை, செயல்களை வழிநடத்தி, எல்லாவற்றிலும் நான் உம்மை கனப்படுத்த உதவுவாராக. என் பிள்ளைகள், குடும்பத்தினர் இளவயதிலேயே கர்த்தருக்குப் பயப்படும்படி செய்து, ஆசீர்வதித்தருளும். தூரமாக அலைந்து திரியும் அனைவரும் உம்மிடம் திரும்பச் செய்து, எல்லா பாவத்தையும் மன்னித்தருளும். உம் வாக்கின்படியே எங்கள் நாட்களை பெருகப்பண்ணும்; உம் ஞானத்தால் எங்களை நிறைத்து, உம் பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக நாங்கள் நெடுங்காலம் வாழும்படி செய்யதருள வேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.