அன்பானவர்களே, நீங்கள் தேவனை தெரிந்துகொண்டிருப்பதால், அவரது நன்மை உங்களுக்குள் இரத்தம்போல பாய்ந்து செல்லும். தேவனின் நிரம்பி வழியும் பரிபூரணத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று" (நீதிமொழிகள் 14:27) என்ற வசனத்தை இன்று தியானிப்போம். கர்த்தருக்குப் பயப்படுதல் எல்லாவற்றுக்கும் ஆரம்பம்; ஞானத்தின் ஆரம்பம் என்று வேதம் கூறுகிறது. அங்கிருந்து ஜீவன் ஊற்றெடுத்து பாய்கிறது. அது மரணத்தின் கண்ணிகளிலிருந்து நம் ஜீவனை தப்புவிக்கிறது. நம்மை கொல்லும்படி வரும் காரியங்களிலிருந்து நாம் தப்பிக்கிறோம்; கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்துக்கு நன்றி.

இந்தியாவின் பல பகுதிகளில் சாலைபோக்குவரத்தை நீங்கள் பார்ப்பீர்களென்றால், சில பட்டணங்களில் போக்குவரத்து விதிகளையும் காவல்துறையினரையும் மதிப்பார்கள். அங்கு போக்குவரத்து நேர்த்தியாகவும் நன்றாகவும் நகர்ந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு காரும் போக வேண்டிய பாதையில் செல்லும். ஆனால், சில பகுதிகளில் விதிகளை மதிக்கவே மாட்டார்கள். அங்கு ஒரு கார் செல்லும்  பாதையில் இன்னொரு காரும் எதிர் திசையில் வரும். அங்கு பெருங்குழப்பம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உருவாகும். அப்படித்தான் நம் வாழ்க்கையும் இருக்கிறது. நாம் ஆண்டவர்பேரில் அதிக மரியாதை கொண்டிருந்தால், தேவனுக்கு பிரியமானவிதத்தில் நடக்கவேண்டும் என்ற பயம் இருந்தால், அவர் நம் வாழ்க்கையை கண்ணோக்குகிறார் என்பதை அறிந்திருந்தால், அவருக்குக் கீழ்ப்படிவோம். அப்போது நாம் தேவன் தரும் ஜீவ ஊற்றை அடைந்திடுவோம்.

வேறு விதத்தில் சொல்வதானால், தேவ சித்தத்தில் நம்மை பரிசுத்தமாகக் காத்துக்கொண்டால், ஆண்டவர் நம்மேல் பிரியமாயிருப்பார். எஜமானின் மனைவி தவறான உறவு கொள்ளும்படி யோசேப்பை சோதித்தபோது அவன் இதைத்தான் செய்தான். அது அவனை தேவனிடமிருந்து இழுக்கும் மரண கண்ணியாக இருந்தது. அவன் மாட்டேன் என்று மறுத்துவிட்டான். யோசேப்பு, சரி என்று ஒத்துக்கொண்டிருந்தானானால், உண்மையை, விசேஷித்த தன்மையை, கவனத்தை, எஜமான் வீட்டிலிருந்த நம்பிக்கையை இழந்திருப்பான். அவளுடைய வலைக்குள், அரசியலுக்குள் விழுந்திருப்பான்; எகிப்தின் ராஜாவுக்கு அடுத்த நிலைக்கு அவன் ஒருபோதும் உயர்ந்திருக்கமாட்டான். யோசேப்பு கர்த்தருக்குப் பயந்ததினால், சிறையின் வழியாக சென்றாலும், சிறையைக் கடந்து ராஜாவை அடைந்தான். அவனே தேசத்தை ஆட்சி செய்தான். கர்த்தருக்குப் பயப்படும் பயம், ஜீவ ஊற்றாகும்; அது உங்களை மரணத்துக்குத் தப்புவித்து, மகா உயரங்களுக்கு எழும்பும்படி செய்யும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் உள்ளத்தின் ஆழத்தில் இந்த பயபக்தியை வைத்தருளும். இந்தப் பயத்தினால் என் வாழ்க்கை உயரட்டும்; இந்தப் பரிசுத்த பயமானது என் வாழ்வின் அஸ்திபாரமாகட்டும். நான் செய்கிறவை எல்லாவற்றையும் நீர் பார்க்கிறீர் என்பதை அறிந்து உமக்குப் பிரியமானவற்றை மாத்திரம் செய்ய எனக்கு உதவும். என் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வதுடன் உம் சித்தத்தையும் நிறைவேற்றிடவும் எனக்கு உதவும். நீர் எனக்குக் கட்டளையிட்ட யாவற்றிலும் உண்மையாயிருக்க உதவும். என் வாழ்க்கையை உம் கரங்களில் அர்ப்பணித்து ஒப்படைத்திருக்கிறேன். ஆண்டவரே, உம் சித்தத்தின்படி என்னை கனப்படுத்தி, உயர்த்துவீராக. என் வாழ்வில் ஆசீர்வாதத்தின் ஊற்று உண்டாவதாக. உம் ஜீவன் எனக்குள் பாய்வதை நான் உணரட்டும்; உம் கரங்களில் நான் செழிப்பேனாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.