அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தமாக கர்த்தர், "நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்" (ஏசாயா 32:17) என்ற வசனத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் உங்களை தம் சமாதானத்தால் நிரப்பப் போகிறார். அநேகவேளைகளில் நாம் இந்தச் சமாதானத்தின் மதிப்பை அறியாமலே இருக்கிறோம். ஆனால், பலருடைய வாழ்க்கையைப் பற்றி கேள்விப்படும்போதுதான், தேவன் உங்களைச் சமாதானத்தினால் நிறைத்திருக்கிறார் என்பது புரியும்.
சமீபத்தில் எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என் பேராசிரியரை 10, 15 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தேன். அவர் ஓர் அறுவைசிகிச்சை நிபுணர். மனிதர்களின் உடலில் அறுவைசிகிச்சை செய்வார். அந்தத் துறையில் புகழ்பெற்றவர். ஆனால், கடவுளை நம்பாத நாத்திகர். அவர் என்னிடம், "ஷில்பா, உண்மை கடவுள் இருக்கிறார் என்று எப்படி உறுதியாய் நம்புகிறாய்?" என்று கேட்டார். அவர் என் படிப்பைப் பற்றி ஏதாவது கேட்பார் என்று நினைத்தேன். ஆனால், திடீரென அவர், "உண்மையாய் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்கும் ஒரு காரியத்தைச் சொல்," என்றார். என் மனதில் வந்த முதல் காரியம், தேவ சமாதானமே ஆகும். நான் அவரிடம், "சார், தேவன் கொடுக்கும் சமாதானம் உலக சமாதானத்திலிருந்து வித்தியாசமானது," என்று கூறினேன். "தேவன், நம் வாழ்வில் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார். ஒருவேளை, காரியங்கள் தவறாய்ப் போனாலும், படிப்பில் நீண்ட இடைவேளை ஏற்பட்டாலும், வீட்டில் பிரச்னைகள் இருந்தாலும் தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று அந்த சமாதானம் சொல்லும்," என்று கூறினேன். மிகவும் அதிர்ச்சியடைந்தார்; அவரால் பதில் கூற இயலவில்லை.
ஆம், ஆண்டவர், அந்தச் சமாதானத்தால் உங்களை இன்று நிரப்பப்போவதாக வாக்குப்பண்ணுகிறார். ஆம், தேவன் கொடுக்கும் சமாதானம், அமைதலும் உருக்கமும் நிறைந்தது. இந்தச் சமாதானத்தால் நீங்கள் நிரப்பப்படும்போது, உங்களைச் சுற்றிலுமிருக்கும் மக்களும் அதை அறிந்துகொள்வார்கள். உங்களில் ஏதோ ஒன்று வித்தியாசமாய் உள்ளது என்று உணர்வார்கள். வேதம், "பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக" (ரோமர் 15:13) என்று கூறுகிறது.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பிள்ளைகள் உம் சமாதானத்தால் நிரப்பப்படவேண்டுமென்று ஜெபிக்கிறேன். தகப்பனே, எங்கள் வாழ்க்கையை உம் கரங்களில் ஒப்படைக்கிறோம். அதை எல்லாப் புத்திக்கும் மேலான உம் சமாதானத்தால் நிரப்புவீராக. காரியங்கள் தவறாய்ப் போனாலும், உம் சமாதானம் அவர்களை நிரப்புவதாக. எண்ணியபடி எதுவும் நடக்காதபோதும் உம் சமாதானம் அவர்களை நிரப்புவதாக. தங்கள் வாழ்க்கையை உம் கரங்களில் அர்ப்பணிக்கவும், தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை உம் கவனிப்பில் ஒப்படைக்கவும் அவர்களுக்கு உதவும். அவர்கள் வாழ்க்கையை கவனிப்பவராக, அவர்கள் பிள்ளைகள்மேல் அக்கறையுள்ளவராக நீர் இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எல்லோருக்கும் உம் சமாதானத்தை அருளி ஆசீர்வதித்திடும். அவர்கள் வீடுகளில், வேலை செய்யும் இடங்களில், செல்லுமிடமெங்கும் சமாதானமுண்டாயிருப்பதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


