எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான, விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கான தேவனுடைய வாக்குத்தத்தம், "மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை" (நீதிமொழிகள் 19:11) என்பதாகும். இந்த வசனம் நம்முடைய பொறுமையில் காணப்படும் மெய்யான ஞானத்தையும், நமக்கு எதிரான காரியங்களை செய்தவர்களை மன்னிக்கிறதில் இருக்கும் மகிமையையும் வெளிப்படுத்துகிறது. அநேகவேளைகளில் நாம் மனுஷீக சுபாவத்தின்படி சீக்கிரமாய் கோபங்கொள்கிறோம்; பழிவாங்க நினைக்கிறோம்; மன்னிப்பதற்கு தாமதிக்கிறோம். நம் இருதயத்தில் கசப்பை வைத்திருக்கலாம் அல்லது நம்மை புண்படுத்தியவர்களுக்கு தீங்கு செய்ய மௌனமாய் திட்டம்பண்ணலாம். ஆனால் இது தேவ பிள்ளைகளின் வழி அல்ல என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. "அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி... அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு" (தானியேல் 9:9,10) என்று வேதம் கூறுகிறது. இது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! நாம் அடிக்கடி தவறினாலும் நாம் நன்றியறியாதவர்களாயும், முரட்டாட்டமுள்ளவர்களாயும் இருந்தாலும் நம் அன்பு தேவன் தொடர்ந்து நம்மை மன்னிக்கிறார்; தம் இரக்கத்தை சூழ்ந்துகொள்ளச் செய்கிறார். வேதம், "துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்" (ஏசாயா 55:7) என்று கூறுகிறது. எவ்வளவு இரக்கமுள்ள தேவனை நாம் சேவிக்கிறோம்!

சவுலின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம் (அப்போஸ்தலர் 9ம் அதிகாரம்). அவன் கோபமும் வெறுப்பும் நிறைந்த மனிதனாக இருந்தான்; தேவ மக்களை துன்புறுத்தினான்; அழித்தான். கோபாக்கினையின் பாத்திரமாக இருந்த அவனை தேவன் தம் இரக்கத்தினால் கிருபாபாத்திரமாக மாற்றினார் (ரோமர் 9:22,23). தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் ஆண்டவர் இயேசு அவனுக்குத் தோன்றி, அவன் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றினார். மற்றவர்களை அழித்துக்கொண்டிருந்த அவன், ஜீவனை, கிருபையை, இரட்சிப்பை பிரசங்கிப்பவனாக மாறினான். இதே தேவனால் உங்களையும் மாற்ற முடியும். யார்மேலாவது உங்கள் இருதயத்தில் கோபம் இருக்கலாம். நீங்கள் யார்மேலாவது பகையாவது, தீமை செய்யவேண்டும் என்ற எண்ணமாவது உங்களுக்கு இருக்கக்கூடும். ஆனால், ஆண்டவர் இன்றைக்கு, "என் மகனே, என் மகளே, மன்னித்து மறந்துவிடு," என்று கூறுகிறார். நாம் மன்னிக்கும்போது நம் இருதயங்களை குணப்படுவதற்கு திறக்கிறோம். மற்றவர்களை நாம் விடுவிக்கும்போது, நம்மையும் விடுவித்துக்கொள்கிறோம். இயேசு தம் இரத்தத்தை நமக்காக சிந்திய, சிலுவையினடியில் நம் மறுரூபம் ஆரம்பிக்கிறது. வேதத்தில், "இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபிரெயர் 9:22) என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவின் இரத்தத்தினால் மாத்திரமே வெறுப்பை கழுவ முடியும்; தெய்வீக அன்பினால் அந்த இடத்தை நிரப்ப முடியும்.

அப்போஸ்தலனாகிய பவுல் இந்த மறுரூப அற்புதத்தை அனுபவித்தான். அவன், "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்" (கலாத்தியர் 2:20) என்று விவரிக்கிறான். இதுவே நம் அனுபவமாகவும் இருக்கவேண்டும். கிறிஸ்து நமக்குள் வாழும்போது நம் இருதயங்கள் மாறும். நாம் அடுத்தவரை சகிக்கவும், ஒருவரையொருவர் மன்னிக்கவும், அவர், நம்மேல் அன்புகூர்ந்ததுபோல அன்புகூரவும் கற்றுக்கொள்வோம். வேதம், "ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" என்று நமக்குக் கற்பிக்கிறது (எபேசியர் 4:32; கொலோசெயர் 3:13). அன்பானவர்களே, கோபத்தை வைத்துக்கொள்ளாதிருங்கள். தீமைக்கு பதிலாக தீமை செய்யாதீர்கள். மாறாக, இரக்கம் காண்பிப்போமாக. இரக்கம், நியாயத்தீர்ப்பை மேற்கொள்ளும். இயேசுவின் அன்பு, கசப்புக்கு இடமின்றி உங்கள் இருதயத்தை முழுவதுமாக நிரப்பட்டும். இன்று தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துவீர்களானால், அவர் தமது இரத்தத்தால் உங்களைச் சுத்திகரித்து, தம் பரிசுத்த ஆவியால் நிரப்பி, அன்பும் சமாதானமும் மன்னிப்பும் நிறைந்த புதுவாழ்வை உங்களுக்குத் தருவார்.

ஜெபம்:
பரம தகப்பனே, மாறாத இரக்கத்திற்காகவும் அன்புக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உள்ளத்தில் நான் வைத்திருக்கும் கோபத்திற்காகவும் கசப்புக்காகவும் என்னை மன்னித்தருளும். இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என்னை சுத்திகரியும். நீர் என்னை மன்னித்ததுபோல, என்னை புண்படுத்தியவர்களை மன்னிக்க எனக்கு உதவும். என்னை சுற்றிலுமிருக்கிற அனைவரிடமும் மனதுருக்கத்தோடு இருக்கும்படி என்னை உம் சமாதானத்தினால் நிரப்பும். எனக்குள்ளாக இருக்கும் கிறிஸ்துவை வாழ்வில் காட்டும்படி என் இருதயத்தை மறுரூபப்படுத்தும். தாழ்மையுடனும் பொறுமையுடனும் அன்புடனும் நடப்பதற்கு எனக்குக் கற்பித்தருளும். என் வாழ்க்கை மற்றவர்களுக்கு இரக்கத்தின், கிருபையின் பாத்திரமாக விளங்குவதாக என்று இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.