எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கான வாக்குத்தத்த வசனம், "அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்" (ஓசியா 14:6). எவ்வளவு மகிமையான வாழ்க்கை! அலங்காரம், வாசனை, நோக்கம் ஆகியவற்றைக் கொண்டு ஒலிவ மரத்தைப் போல ஓங்கி வளருகிற வாழ்க்கை. ஆனால், யாருடைய வாழ்க்கை இப்படி இருக்கும்? "கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்" (நீதிமொழிகள் 28:25) என்று வேதம் கூறுகிறது. அன்பானவர்களே, உங்கள் நம்பிக்கை எதன்மேல் இருக்கிறது? உலகப்பிரகாரமான காரியங்கள் மேல், ஒருவேளை போதை மருந்து போன்ற தீமையான பழக்கங்கள் மேல் இருக்கிறதா? அப்படியானால், அலங்காரம் நிலைத்திருக்காது. சமாதானமோ, சந்தோஷமோ இல்லாமல் இருளே உங்கள் வாழ்க்கையை சூழ்ந்திருக்கும். ஆனால், தேவன் அலங்கரிக்கும்போது, சொல்லிமுடியாத சந்தோஷம், முழு மகிமையோடு அலங்கரிப்பார்.

தேவன், வெள்ளியை புடமிடுகிறதுபோல, நெருப்பினால் நம்மை சோதிக்கிறார். "தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்" என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 66:10,12). ஆதி நாள்களில், நாங்கள் கிறிஸ்துவை குறித்தும் அவரது ஆசீர்வாதங்களைக் குறித்தும் குறைவாகவே அறிந்திருந்ததால் வாழ்க்கை போராட்டமாகவும் இருளாகவும் இருந்தது. ஆனால், இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட பிறகு, அவரோடு அனுதினமும், இரவும் பகலும் நடக்கத்தொடங்கிய பிறகு, உலகின் ஒளியாகிய அவர் எங்கள் வாழ்க்கையை சந்தோஷத்தாலும் ஒளியாலும் நிரப்பினார். "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23:1).

எனக்கு அன்பானவர்களே, நீங்கள் எப்படி ஆண்டவரை தேடுகிறீர்கள்? முழு இருதயத்தோடும், இடைவிடாமலும் தொடருகிறீர்களா? அப்படியானால், உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதம் இருக்கும். "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" (நீதிமொழிகள் 10:22) என்று வேதம் கூறுகிறது. அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரை நம்புங்கள். தினமும் அவருடன் நடந்திடுங்கள். அவர் உங்கள் வாழ்க்கையை வாசனைமிக்கதாக, அழகானதாக, ஐசுவரியமிக்கதாக மாற்றுவார்; வேதனையை அதனுடன் கூட்டமாட்டார். இப்படிப்பட்ட வாழ்க்கையையே தேவன் உங்களுக்குக் கொடுக்கவிரும்புகிறார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் இன்று கொடுத்திருக்கிற வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அழகான, வாசனைமிக்க, உம்முடைய ஆசீர்வாதத்தினால் நிறைந்த வாழ்க்கைக்கு என்னை அழைத்திருக்கிறீர். ஆண்டவரே, உலக காரியங்கள்மேல் அல்லாமல், உம்முடைய நித்திய அன்பின்மீது நம்பிக்கை வைப்பதற்கு எனக்கு உதவும். நான் இருளில் நடந்ததற்கு, வேறெங்கோ சமாதானத்தை தேடியதற்கு என்னை மன்னித்தருளும். உம்முடைய வெளிச்சத்தாலும் சந்தோஷத்தாலும் என்னை நிரப்பும். வெள்ளியைப்போல என்னை புடமிடும்; உம்முடைய பூரணத்திற்கு நேராக என்னை வழிநடத்தும். நான் என் முழு இருதயத்தோடும், அனுதினமும், ஒவ்வொரு மணி நேரமும் உம்மை தேட வாஞ்சிக்கிறேன். என் வாழ்க்கையில் உம்முடைய அழகும் வாசனையும் மகிமையும் விளங்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.