அன்பானவர்களே, உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்" (சங்கீதம் 34:19) என்ற வசனத்தைத் தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, யார் இந்த நீதிமான்? ஏற்ற காரியத்தை செய்து ஆண்டவரைப் பின்பற்றுகிறவனே நீதிமானாயிருக்கிறான். ஒருவேளை இன்று நீங்கள், "நான் நீதியாகவே வாழ்கிறேன். யாரையும் புண்படுத்தவில்லை; யாருக்கும் தவறு செய்யவில்லை. ஆனாலும், மக்கள் எனக்கு விரோதமாக சதியாலோசனை செய்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக வைக்கிறார்கள். என் பெயரைக் கெடுத்து, என் வாழ்க்கையையே அழிக்க முயற்சிக்கிறார்கள்," என்று கூறலாம். இதனால் நீங்கள் உடைந்துபோய், புண்பட்டிருந்தீர்களானால், தேவன், தாமே உங்களை எல்லா துன்பங்களிலிருந்தும் இன்று விடுவிப்பதாகக் கூறுகிறார்.
பிலாஸ்பூரைச் சேர்ந்த திரு. அனில் பிரசாத்துக்கு இப்படியே நடந்தது. அவர் அரசு அலுவலகம் ஒன்றில் 30 ஆண்டுகள் வேலை செய்தார். செய்தியாளர் ஒருவர் அவர்மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அவர் நற்பெயரைக் கெடுப்பதற்கு முயற்சித்தார். விளக்கம் அளிக்குமாறு கேட்டு உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த கடிதங்கள் அவருக்கு பெரும் கலக்கத்தையும் நெருக்கடியையும் கொடுத்தன. அவருக்கு எதிராக வழக்கு ஒன்றும் பதியப்பட்டது. அவர் தவறு எதுவும் செய்யாதபோதும், அவரும் அவர் குடும்பத்தினரும் ஐந்து ஆண்டுகள் சமாதானத்தைத் தொலைத்து, வேதனையின் வழியாக கடந்து சென்றனர். கடைசியாக, அவர் ராய்ப்பூரில் அரசின் தலைமை செயலகத்துக்கு இறுதித் தீர்ப்புக்காக அழைக்கப்பட்டார். அவர் ராய்ப்பூர் வரும் ஒவ்வொரு முறையும் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்துக்கு வருவது வழக்கம். இம்முறையும் முதலாவது அங்கு சென்று பிரார்த்தனை செய்துகொள்ள திட்டமிட்டார். ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அவரது மொபைல்போனுக்கு இயேசு அழைக்கிறார் ஊழியத்திலிருந்து "தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்" (சங்கீதம் 112:5,6) என்ற வாக்குத்தத்த வசனம் வந்தது. அந்த வசனம் தேவன் அவருக்காக யுத்தம்பண்ணி, நியாயம் கிடைக்கச்செய்வார் என்ற நிச்சயத்தை அளித்தது.
விசாரணை நடைபெறும் இடத்தை திரு.அனில் அடைந்தபோது, பிறர் தங்களைத் தற்காத்துக்கொள்ள வழக்கறிஞர்களுடனும் பெரிய குழுவினருடனும் வந்திருந்ததையும் தான் மட்டுமே தனியே வந்திருப்பதையும் கண்டார். தேவன் தன்னுடன் இருப்பதை அறிந்திருந்தார். தன் வழக்கின் காரணங்களையும் தன்னுடைய தகுதிகளையும் அவர் எடுத்துக்கூறியபோது, அதிகாரிகளுள் ஒருவர் உடனே, "நீங்கள் குற்றச்சாட்டிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்படுகிறீர்கள்" என்று அறிவித்தார். ஆண்டவர்தாமே அதிகாரிகளின் உள்ளங்களில் பேசி வழக்கை தனக்குச் சாதகமான திருப்பியுள்ளார் என்று திரு.அனில் பின்னர் சாட்சி கூறினார். இப்போது அவரும் அவர் குடும்பத்தினரும் எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும், பாரத்திலிருந்தும் விடுபட்டு சமாதானமாக வாழ்கிறார்கள். அவ்வண்ணமே, அன்பானவர்களே, பிரச்னைகள் உங்களைச் சூழ்ந்திருந்தாலும், மக்கள் உங்கள் பெயரை அழிக்கும்படி வேலை செய்தாலும், அவை எல்லாவற்றிலுமிருந்து ஆண்டவர் உங்களை முற்றிலும் விடுவிப்பார். எல்லா பொய்க்குற்றச்சாட்டும், சத்துருவின் சதியாலோசனையும் உங்கள் ஜீவனுக்கு எதிரான எல்லா தாக்குதலும் தேவ கரத்தால் முறியடிக்கப்படும். ஆகவே, இன்று நாம் ஆண்டவரை ஸ்தோத்திரித்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, துன்பத்தின் காலத்திலும், வேதனையின் நாட்களிலும் என்னை தற்காக்கிறவராக இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பொய்யான குற்றச்சாட்டுகளும், பயமும், எதிர்ப்பும் எனக்கு விரோதமாக எழும்போது, உம்மையே முழுவதுமாக நம்புவதற்கு எனக்கு உதவும். ஆண்டவரே, என்னால் முடியாத ஒவ்வொரு யுத்தத்தையும் எனக்காக நீரே செய்வீராக. எல்லா கண்ணியிலிருந்தும், தீய ஆலோசனையிலிருந்தும், சூழ்ந்திருக்கும் துன்பமான சூழ்நிலையிலிருந்தும் என்னை விடுவிப்பீராக. என் இருதயத்தை உம் சமாதானத்தாலும், நீர் என்னோடு இருக்கிறீர் என்ற நிச்சயத்தாலும் நிரப்பிடும். உம் நியாயம் மேற்கொண்டு எல்லா பாரத்திலிருந்தும் குற்றச்சாட்டிலிருந்தும் முழுதும் விடுவிப்பதாக. உம் உண்மைக்கும், விடுதலைக்கும் என் வாழ்க்கை சாட்சியாக அமையவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


