கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, "நீங்களோ, ...தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1 பேதுரு 2:9) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். இயேசுதாமே, "நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்" (யோவான் 15:16) என்று கூறியுள்ளார். ஆகவே, களிப்புடனும் விசுவாசத்துடனும், "தேவன் என்னை தெரிந்துகொண்டுள்ளார். என்னை பேர்சொல்லி அழைத்திருக்கிறார். நான் அவரது பிள்ளை. எனக்கு ஒன்றும் குறைவுபடாது. அவர் சகல நன்மைகளையும் கொடுத்து என்னை ஆசீர்வதிப்பார்," என்று அறிக்கை செய்யுங்கள். இந்த வாக்குத்தத்தத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்.
அன்பான தகப்பன் தன் அருமை பிள்ளையை சுமந்து, அரவணைத்து ஆசீர்வதிப்பதைப் போன்று, இயேசு உங்களைக் கிட்டிச் சேர்த்து, தம் ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிந்தருள்வார். நீங்கள் அவரது பார்வையில் விலையேறப்பெற்றவர். அவர் உங்களை ராஜரீக ஆசாரியக்கூட்டத்தில் ஒருவராக அழைத்திருக்கிறார். இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாய் இருக்கிறீர்கள் என்று வேதம் நினைவுப்படுத்துகிறது (1 பேதுரு 2:5). தேவன், அவருக்கு ஊழியம் செய்து அவரது சித்தத்தை செய்யும்படி உங்களைத் தெரிந்துகொண்டுள்ளார். அவருடன் உண்மையாக நீங்கள் நடக்கும்போது உங்கள்மேல் அவரது கிருபை தங்கியிருப்பதாக. தம் பரிசுத்த தேசத்தில் ஒரு பங்காய் இருக்கும்படியும் தேவன் உங்களை அழைத்திருக்கிறார். "உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்" (1 பேதுரு 1:15,16) என்று வேதம் கூறுகிறது. உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறபடியால், அந்தப் பரிசுத்தத்தை உங்கள் அனுதின வாழ்க்கையில் காட்டும்படி அவர் அழைக்கிறார். ஏற்கனவே நீங்கள் பரிசுத்தத்தில் நடந்துகொண்டிருந்தால், அதில் வளருவீர்களாக. தம் வெளிச்சமும் சுத்தமும் தம் ஜனங்கள் மூலமாக பிரகாசித்து தேசத்தை மறுரூபமாக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
இன்று சமுதாயத்தில் ஊழல், துரோகம், லஞ்சம், அநியாயம் போன்ற அநேக நொறுக்குதல்களைக் காண்கிறோம். பாதிக்கப்படக்கூடியவர்கள் எப்போதும் துன்புறுத்தப்படுவார்கள்; செல்வந்தர்களும் ஏழைகளும் சமமாக நடத்தப்படமாட்டார்கள். அதிகாரத்தில் இருப்போரைச் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, நம் இருதயங்களை ஆராய்ந்து பார்த்து நேர்மையுடன் வாழ்வதைத் தெரிந்துகொள்வோம். நாம் தேவனை கனப்படுத்தி, சுத்தமான கரங்களுடன் பிறருக்கு ஊழியம் செய்யும்போது, அவரது பரிசுத்தம் நம் மூலமாக வெளிப்படும். நாம் அன்பிலும் ஒருமனதிலும் இணைந்து வாழும்போது, அந்த மறுரூபமாகுதல் தேசமெங்கும் பரவும். வேதம், "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்" (ஏசாயா 60:22) என்று வாக்குப்பண்ணுகிறது.
தேவன், "நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்" என்று கூறுகிறார் (யாத்திராகமம் 19:5). நீங்கள் இயேசுவுக்குச் சொந்தமானவர். அவர் தம் விசேஷித்த கிருபையை உங்கள்மேல் பொழிந்தருள வாஞ்சிக்கிறார். தேவனுக்குக் கீழ்ப்படிவதே இந்த சிலாக்கியத்தைப் பெறுவதற்கான எளிய வழியாகும். "நான் தேவனுக்குக் கீழ்ப்படிவேன்; அவரது சித்தத்தைச் செய்வேன். பரிசுத்தத்தில் தொடருவேன்; ஒருபோதும் அவரை விட்டு புறம்பே செல்லமாட்டேன். இக்கட்டான சூழ்நிலைகளிலும் அவர் எனக்கான எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்வார் என்று நம்பி, எப்போது சந்தோஷமாயிருப்பேன். பரலோகத்துடன் ஐக்கியமாக அவரை நெருங்கி நடந்து கனப்படுத்துவேன்," என்று தீர்மானிப்போம். நாம் இப்படி வாழும்போது, தேவனுடைய சம்பத்தாயிருப்பதின் அர்த்தத்தை மெய்யாகவே அனுபவிப்போம். நீங்கள் அவருக்கு விசேஷித்தவர்கள், பரிசுத்த தேசம், ராஜரீக ஆசாரியக்கூட்டம், சொந்த சம்பத்து என்பதை மறந்துபோகாதிருங்கள். திடமனதாயிருங்கள்; உங்களைத் தெரிந்துகொண்டதற்காக தேவனை ஸ்தோத்திரியுங்கள். அவரது வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொள்ளுங்கள்; அவரது வார்த்தை உங்கள் உள்ளத்தில் ஆழ வேரூன்றியிருக்கட்டும்; அவரது அன்பாலும் பெலத்தாலும் நிரப்பப்பட்டவராய் வாழுங்கள். நீங்கள் அவருக்கு உண்மையுள்ளவராய் இருக்கும்போது, அவர் உங்களை தீமையினின்று காத்து, பரிபூரணமாய் ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
அன்புள்ள பரம பிதாவே, என்னை தெரிந்துகொண்டு, உம் அன்பு பிள்ளையாகவும், ராஜரீக ஆசாரியராகவும், பரிசுத்த தேசத்தில் ஒரு பங்காகவும் மாற்றியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லாவற்றிலும் உம் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து பரிசுத்தமாக வாழ்வதற்கு எனக்கு உதவிடும். ஊழல், அநியாயம், பிரிவினை, பாகுபாடுகளை எங்கள் தேசத்திலிருந்து அகற்றும். எங்கள் இருதயங்களை உம் பரிசுத்தம், அன்பு, ஒற்றுமையால் நிரப்பிடும். என்னை உம் சொந்த சம்பத்தாக்கி, மற்றவர்களுக்கு ஊழியம் செய்து, உம் தெய்வீக நோக்கத்தை நிறைவேற்ற என் வாழ்க்கையை பயன்படுத்தும். இக்கட்டான சூழ்நிலைகளிலும், உண்மையாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கு எனக்கு உதவிடும். எல்லா தீமையினின்றும் என்னை பாதுகாத்து, உம் ஆசீர்வாதங்கள் என் வாழ்வில் புரண்டோடப் பண்ணவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


