அன்பானவர்களே, இன்று நம் ஆண்டவர், குடும்பங்களின் தேவனாயிருக்கிறார் என்று கூறி உங்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன். ஆம், ஒரு சந்ததி தேவனைப் பின்பற்றத் தொடங்கும்போது, அவர் தொடர்ந்து வரும் சந்ததிகள்மேல் அன்புகூருகிறார்; பாதுகாக்கிறார். வேதம், "அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்" (எரேமியா 31:3) என்று கூறுகிறது. ஆம், இன்று நீங்கள் தொலைந்துபோனதாகவும், தனிமையாய் இருப்பதாகவும் உணர்கிறீர்களா? யாரும் என்னை நேசிக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? உங்களைச் சுற்றிலும் இருப்பவர்கள் யாவரையும் நீங்கள் நேசித்தாலும், யாரும் உங்களை நேசிப்பதில்லை என்று எண்ணுகிறீர்களா? ஆனால், இயேசு, தாம் அநாதி சிநேகத்தினால் உங்களை நேசிப்பதாகக் கூறுகிறார். எவ்வளவு ஆச்சரியமான வாக்குத்தத்தம்! தேவன் அன்புகூருவதற்கு நாம் யார்? கர்த்தர், நாம் தம் ஜனமாயிருக்கிறோம் என்று சொல்வதாகவும், தம் குடும்பத்தைப்போல அவர் நம்மை நேசிப்பதாகவும் வேதம் கூறுகிறது (எரேமியா 31ம் அதிகாரத்தின் முற்பகுதி)

அதையே தாம் சகோதரர் தினகரன் குடும்பத்திலும் காண்கிறோம். என் அன்பு தாத்தா, இயேசுவை பின்பற்ற தீர்மானித்தபோது, அவர், "ஆண்டவரே, நான் உமக்காக எல்லாவற்றையும் செய்வேன்; ஆனால், நீர் என்னோடு இருப்பதாக வாக்குக்கொடுக்கவேண்டும்," என்று கூறினார். ஆண்டவர், அவரை அதிகமாய் நேசித்தார். அந்த அன்பு, அடுத்தடுத்த தலைமுறைக்கும், ஜேடன் வரைக்கும் தொடர்கிறது. ஆம், அன்பானவர்களே, அதேவண்ணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணிக்கும்போது, உங்களை தம் கிருபையினால் சூழ்ந்துகொள்கிறார். தம் காருணியத்தினால் உங்களைத் தம்மிடம் கிட்டிச்சேர்ப்பார்; அது தலைமுறை தலைமுறையாய் தொடரும்.

உங்கள் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படும்; பாதுகாக்கப்படும். தேவனே எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்வதால் நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்பட தேவையில்லை. எங்கள் குடும்பமே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இன்று நீங்கள் தொலைந்துபோனதாகவோ, தனிமையாகவோ உணர்ந்தால், உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்திடுங்கள்; அவர் தம் கிருபையினால் உங்களை மூடுவார்.

ஜெபம்:
பரம தகப்பனே, நித்திய அன்பினால், கிருபையினால் என்னை நேசிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் காணாமற்போனதாக, தனிமையாகிவிட்டதாக உணரும்போதெல்லாம், நான் உம்முடையவள்(ன்) என்று நினைவுப்படுத்தும். ஆண்டவரே, இன்று என் வாழ்க்கையை உம் கரங்களில் முழுவதுமாய் ஒப்படைக்கிறேன். உம் கனிவினாலும் கிருபையினாலும் என்னை உம்மண்டை கிட்டிச்சேர்த்திடும். உம் அன்பானது என் வாயிலாக, என் குடும்பத்துக்குள்ளும் வருங்கால சந்ததிக்குள்ளும் பாய்வதாக. ஆண்டவரே, என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாத்தருளும்; ஆசீர்வதித்தருளும். எங்கள் அனைவருடைய வாழ்க்கையும் உம் உண்மைக்கு சாட்சியாக விளங்கவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.