அன்பானவர்களே, "நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்" (யோபு 22:27) என்பதே உங்களுக்கு இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். நம் தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கிறவர். உங்கள் ஜெபத்தைக் கேட்க அவர் காத்திருக்கிறார். வேதம், "ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்" (சங்கீதம் 65:2) என்றும், "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்" (1 யோவான் 5:14) என்றும் கூறுகிறது. "அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்" (ஏசாயா 65:24) என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆம், நம் தேவன் நாம் ஜெபிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கிறார்.

முதலாவது, நம் உபத்திரவங்களைக் குறித்து நாம் செய்யும் வேண்டுதல்களை தேவன் கேட்கிறார். வேதம், "நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்" (சங்கீதம் 34:17) என்று கூறுகிறது. பயப்படாதிருங்கள். நீங்கள் கூப்பிடும்போது, அவர் எல்லா உபத்திரவங்களிலிருந்தும் உங்களை விடுவிப்பார். இன்றே அதைச் செய்திடுங்கள். இன்று உங்கள் உபத்திரவங்கள் எல்லாவற்றிலிருந்தும் வெளியே வருவீர்கள் என்று விசுவாசியுங்கள். தேவன் உங்களுக்கு நியாயம் செய்வார்.

இரண்டாவதாக, நம் பாவத்தைக் குறித்து, சுகம் பெறவேண்டும் என்று நாம் ஜெபிப்பதை தேவன் கவனிக்கிறார். வேதம், "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்" (2 நாளாகமம் 7:14) என்று கூறுகிறது. இன்று நீங்கள், தேவனிடம் மன்னிப்பு கேட்டு ஜெபித்திடுங்கள். பாவத்திலிருந்து வெளியே வந்ததும் நம் தேசம் செழிப்பும் சமாதானமும் நிறையும்படி சுகப்படும். மூன்றாவதாக, வியாதியைக் குறித்து நாம் செய்யும் விண்ணப்பங்களுக்கு தேவன் செவிகொடுக்கிறார். வேதம், " உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்" (2 இராஜாக்கள் 20:5) என்று கர்த்தர் கூறியதாக உரைக்கிறது. வியாதிப்பட்டிருக்கும் நாம் சுகத்திற்காக ஜெபிக்கும்போது அவர் நம்மை குணமாக்குகிறார். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, என் ஜெபத்தை கேட்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் என் உபத்திரவங்கள், பாவங்கள், வியாதிகள் எல்லாவற்றையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். என் வாழ்க்கையில் உபத்திரவத்தை கொண்டு வரும் எல்லாவற்றிலிருந்தும் தயவாய் என்னை விடுவித்தருளும். ஆண்டவரே, என்னை மன்னித்தருளும்; சுத்திகரியும்; பூரணமாய் குணமாக்கும். நான் ஜெபிக்கும் வார்த்தைகள் எல்லாவற்றையும் கேட்டு, எனக்கு நியாயம் செய்வீர் என்று நம்புகிறேன். என் ஜெபங்களுக்குப் பதில் அளிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.