அன்பானவர்களே, உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். வேதம், "முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" (ஆகாய் 2:9) என்று கூறுகிறது. இந்நாட்களில் இயேசு கிறிஸ்து வாயிலாக நாம் பெரிய மகிமையை அடையலாம். முந்தின மகிமை என்பது என்ன? சாலொமோனின் தேவாலயத்தில் இருந்ததே முந்தின மகிமையாகும். தேவன் அங்கு 24 மணி நேரமும் இருந்தார். தம் கண்களையும் காதுகளையும் உள்ளத்தையும் அங்கு திறந்திருந்தார். இரண்டாவது தேவாலயத்தில் இருந்ததே பிந்தின மகிமையாகும். இயேசு இந்த உலகத்திற்குள் வந்த பிறகு, அவரது சமுகம் இரண்டாவது தேவாலயத்தில் பிரவேசித்தபோது மக்கள் பெரிய மகிமையை அனுபவித்தனர். இரண்டாவது தேவாலயத்தில் இயேசு போதித்தார்; ஊழியம் செய்தார். மக்களை அவர் குணப்படுத்தினார். ஆம், இயேசுவின் சமுகத்தில் நாம் பெரிய மகிமையை உணர முடியும்.

அதையே வேதம், "...மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார்" (எபிரெயர் 3:3) என்று கூறுகிறது. வீட்டைக் கட்டிய ஒருவர், வீட்டைக் காட்டிலும் அதிகமாக புகழப்படத்தக்கவர். ஆம், அன்பானவர்களே, இயேசுவே தேவாலயமாகிய நம் வீட்டைக் கட்டுகிறார். மோசேயைக் காட்டிலும் அவர் அதிக மகிமைக்கு உரியவர். தேவ சமுகமே அந்த இடத்தை மகிமைக்குரியதாக்குகிறது. நாங்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரங்களுக்குச் செல்லும்போதெல்லாம் தேவனுடைய சமுகத்தை அற்புதமானவிதத்தில் உணருவோம். குறிப்பாக, நாங்கள் இஸ்ரேல் ஜெப கோபுரத்தை பிரதிஷ்டை செய்தபோது, இயேசுவின் பிரசன்னத்தை அதிகமாக உணர்ந்தோம். என் கணவர் அங்கு ஊழியம் செய்தபோது, ஒரு ஜன்னல் திறந்தது; அதன் வழியாக காற்று பலமாக வீசியது. என் கணவரின் தலைமுடி காற்றினால் எழுந்து நின்றது. ஜெப கோபுரத்திற்குள் பலத்த காற்று வீசியதை நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். இயேசு அங்கே இருந்ததை அறிந்தோம்.

அதன் பின்னர், என் கணவர் மக்களுக்காக ஜெபித்தபோது, அநேக அற்புதங்கள் நடந்தன. புற்றுநோய் குணமானது. பல ஆண்டுகளாக இருந்த வியாதிகள் குணமாகின. ஜெப கோபுரத்தில் தேவனின் அற்புத கரம் செயல்பட்டதை நாங்கள் கண்டோம். மோசேயைப் பார்க்கிலும் இயேசு அதிகமான மகிமைக்குரியவர். இஸ்ரேல் ஜெப கோபுரத்தில் மாத்திரமல்ல; உலகெங்கிலும் உள்ள எல்லா ஜெப கோபுரங்களிலும் அப்படியே இருக்கிறது. ஒருமுறை பெதஸ்தா ஜெப மையத்திற்கு நாங்கள் சென்றிருந்தபோது, என் தம்பியும் நானும் ஜெபித்துக்கொண்டிருந்தோம். என் தந்தை மறைந்தவுடனே, என் தம்பியை ஊழியத்திற்கு நான் அர்ப்பணித்தேன். நான், "ஆண்டவரே, எப்படியாவது என் தம்பி ஊழியம் செய்யவேண்டும்," என்று ஜெபித்தேன். அவ்வாறே இன்று அவன் ஊழியத்தில் இருக்கிறான். நாம் ஆண்டவரை மகிமைப்படுத்தும் இடத்தில் அவர் இருப்பதோடு நம் எல்லா விண்ணப்பங்களுக்கும் பதில் அளிப்பார். நம் தேவன் அன்புள்ளவர். இன்றும், பிந்தின மகிமை உங்கள்மேல் வருவதாக.

ஜெபம்:
பரம தேவனே, என் வாழ்வில் உம் மகிமையான பிரசன்னம் விளங்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்க்கையை கட்டுகிறவராகிய உமக்கே எல்லா மகிமையையும் செலுத்துகிறேன். உம்முடைய பிந்தின மகிமை என்மேல் அமர்ந்து என் உள்ளத்தை நிரப்புவதாக. அனுதினமும் உம் பிரசன்னம் அதிகமாய் எனக்குள் தங்குவதாக. எப்போதைக்காட்டிலும் அதிகமாக என் வாழ்வில் பெரிய காரியங்களைச் செய்யும். உம் மகிமையை பிறருக்கு விளங்கப்பண்ணும் பாத்திரமாக என்னை பயன்படுத்தும். ஆண்டவரே, என்னை முற்றிலுமாய் உமக்கு அர்ப்பணிக்கிறேன். உம் நாமம் மாத்திரமே என்னில் மகிமைப்படட்டும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.