எனக்கு அருமையானவர்களே, ஆண்டவர் உங்களை விசாரிக்கிறவராயிருக்கிறார். நீங்கள், "நான் ஒரு கல்யாணத்துக்குச் சென்றேன். யாரும் நான் எப்படி இருக்கிறேன் என்றே விசாரிக்கவில்லை. இன்று என் தாயாரின் நினைவுதினம். நான் மட்டுமே தனியாக அழுதுகொண்டிருக்கிறேன். யாரும் அதைப்பற்றி எண்ணவோ, விசாரிக்கவோ இல்லை," என்று கூறுகிறீர்களா? ஒருவேளை, நீங்கள் வேலை இழந்ததினால் மனமுடைந்திருக்கலாம். யாரும், "எப்படியிருக்கிறாய்? ஏதாவது உதவி வேண்டுமா?" என்று கேட்காமல் இருக்கலாம்.
என் சகோதரனே / சகோதரியே, உங்களைக் குறித்து உண்மையாய் கரிசனை கொண்டவர் ஒருவருண்டு. அவர் பெயர் இயேசு. வேதம், "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்," (1 பேதுரு 5:7) என்று கூறுகிறது. நம் கவலைகளையெல்லாம் மக்களிடம் கொட்டுவதால் என்ன பயனுண்டு? எத்தனைபேரால் உண்மையிலேயே உங்களுக்கு உதவ முடியும்? ஒரு பேட்டியில் என்னிடம், "உங்களுக்கு நெருங்கிய நண்பர் யார்?" என்று கேட்டார்கள். நான், "பரிசுத்த ஆவியானவர் மட்டுமே என் நெருங்கிய நண்பர்," என்று கூறினேன்.
ஆண்டவர் இயேசுவின் ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் எனக்கு உண்மையான நண்பராக இருக்கிறார். என் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்த நாளில், அவர் வந்து என்னிடம், "பால், இதுவரை உலகில் உனக்கு அநேக நண்பர்கள் இருந்தார்கள். பாவ வழிகளில் நடந்தார்கள். ஆனால், இனிமேல், முன்புபோல் யாரும் உன்னுடன் இருக்கமாட்டார்கள். நான் மாத்திரமே உன் சிநேகிதராயிருப்பேன்," என்று கூறினார்.
கடந்த 46 ஆண்டுகளாக, அவர் எனக்கு உண்மையில் நெருங்கிய நண்பராக இருந்துவருகிறார். சிநேகிதர்களின் வீடுகளுக்குச் செல்லவோ, வெளியே செல்லவோ நான் நேரம் செலவழிக்கமாட்டேன். என் மனைவியும், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளும்கூட அப்படிச் செய்யமாட்டார்கள். என் பேத்தி, கேட்டியும், "தாத்தா, நாம் எல்லோரும் ஒன்றாய் வீட்டில் இருப்பதுதான் எனக்கு அதிக மகிழ்ச்சியாயிருக்கிறது. வெளியே செல்வதில் எனக்கு அதிக விருப்பமில்லை. ஜெப கோபுரத்துக்குப் போவதும், ஆண்டவருக்காகப் பாடுவதும், தொலைக்காட்சியில் பேசுவதும், பள்ளிகளுக்குச் செல்வதும் எனக்கு சந்தோஷமாயிருக்கிறது," என்று கூறுவாள்.
குடும்பமாய் ஆண்டவரோடு நெருங்கி ஜீவித்து, அவருக்கு நண்பராகி, பல்லாயிரக்கணக்கானோருக்கு ஆசீர்வாதமாக விளங்குவது எவ்வளவு பாக்கியம்! ஆண்டவர் நம்மை விசாரிக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம்; எல்லா பாரத்தையும் அவர்மேல் வைத்துவிடுகிறோம் என்பதே அந்தப் பாக்கியத்தை பெறுவதற்கான எளிய இரகசியம். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவர் நம்மை எழுப்பி, அந்த நாளை எதிர்கொள்ள நம்மை ஆயத்தப்படுத்துகிறார். அந்த நாளுக்கான சவால்கள் வரும் முன்னரே, அவர் ஏற்ற வேதபகுதியை எங்களுக்குத் தருகிறார்; அதை தியானித்து ஜெபிக்கப்பண்ணுகிறார். அவரது ஆவி வாயிலாக எங்களை குடும்பத்துக்கு, மற்றவர்களுக்கு எப்படி சேவை செய்வது, தேசத்துக்காக எப்படி ஜெபிப்பது, தலைவர்களை எப்படி ஊக்குவிப்பது, அவரது ஊழியர்களை எப்படி பெலப்படுத்துவது என்று வழிகாட்டுகிறார். ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவர் எங்கள் இருதயங்களை சமாதானத்தினாலும் திருப்தியினாலும் நிரப்புகிறார். எந்தப் போராட்டங்கள் வந்தாலும் அவரது சமாதானம் எங்களோடு நிலைத்திருக்கும். அந்தச் சமாதானம், "தேவனுடைய திட்டமில்லாமல் எதுவும் நடக்காது. இன்றைய தினத்துக்காக இயேசு என்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; அவர் வாக்குத்தத்தத்தை கொடுத்திருக்கிறார்," என்று திடநம்பிக்கையோடு கூறச் செய்கிறது.
அவரது கிருபையால், எல்லா உபத்திரவங்களையும் மேற்கொள்கிறோம். எங்களுக்கு எந்தச் சேதமும் வராமல் அவர் பாதுகாக்கிறார்; நற்பெயரைத் தருகிறார்; ஊழியத்தின், கல்வியின், ஏழைகளை பராமரிப்பதின், குடும்பமாக ஜெபித்து வாழ்வதன் வாயிலாக அவரது சித்தத்தை நிறைவேற்றும்படி செய்கிறார். உங்களுக்கும் அப்படியே செய்வார். இயேசு உங்கள்பேரில் கரிசனையாயிருக்கிறார். ஆகவே, வேதம், "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்," (சங்கீதம் 55:22) என்று கூறுவதுபோல, உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
அன்பானவர்களே, நாம் எதை நம்பவேண்டும்? முதலாவது தேவ அன்பை நம்புங்கள். இயேசு உங்களை நேசிக்கிறார். வேதம், "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்," (1 யோவான் 4:19) என்று கூறுகிறது. எந்தக் கவலையை, இக்கட்டை நீங்கள் சந்திக்க நேரிட்டாலும், "இயேசு என்னை நேசிக்கிறார்" என்பதை மறவாதிருங்கள். இரண்டாவது, அவரது வல்லமையை நம்புங்கள். ஆண்டவர், உங்களுக்காக யாவற்றையும் செய்துமுடிப்பார். தம் மகத்தான வல்லமையால், அவரால் எல்லா சூழ்நிலையையும் தலைகீழாக மாற்ற முடியும். நீங்கள் நினைப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் அதிகமாக அவரால் செய்யக்கூடும். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் எப்போதும் அவர் கிரியை செய்யாமல் போகலாம்; ஆனால், அதைக் காட்டிலும் பெரியவற்றை செய்வார். இக்கட்டுகள், மிகுந்த சிரமங்கள் வரலாம். ஆனால், ஆண்டவர் அவற்றுக்கு மேலாக உங்களை எழும்பப்பண்ணுவார்; உங்களைக் கனப்படுத்துவார்; சீர்ப்படுத்துவார். நீங்கள் எதையும் இழக்கமாட்டீர்கள். அவர் மிகுதியாய் உங்களை ஆசீர்வதிப்பார். இந்த ஆசீர்வாதத்தை ஆண்டவர் இன்றைக்கு உங்களுக்குத் தருவாராக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் கிருபையினால் என்னை விசாரிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் என்னை தாங்குவீர் என்று அறிந்து, என் பாரம், கவலை, பயம், கலக்கம் எல்லாவற்றையும் உம்மேல் வைக்கிறேன். என் சொந்த புத்தியை அல்லாமல், உம் அன்பை நம்பி, உம் பலத்த வல்லமையை சார்ந்துகொள்ள எனக்கு உதவும். உம் பூரண சமாதானத்தால் என் உள்ளத்தை நிறைத்து, வரும் எல்லா சவாலையும் சந்திப்பதற்கு என்னை ஆயத்தப்படுத்தும். என் குடும்பத்தை வழிநடத்தும்; என் கையில் பிரயாசங்களை ஆசீர்வதித்தருளும்; உம் பூரண சித்தத்தின்படி எல்லா வாசல்களையும் திறந்திடும். எல்லா தீமையிலிருந்தும் என்னை பாதுகாத்து, விசுவாசத்தை பெலப்படுத்தி, என் வாழ்க்கை அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி பயன்படுத்தியருளும். உம் சமுகத்தை, தயவை, பூரண ஆசீர்வாதத்தை அனுதினமும் நான் அனுபவிக்கட்டும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


