அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்" (நீதிமொழிகள் 12:22) என்று கூறுகிறது. ஒருவித மக்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். உண்மையுள்ளவர்களை எனக்கு அதிகமாக பிடிக்கும். நீங்கள் அவர்களிடம் எதையும் கூறலாம்; உங்கள் இரகசியங்களை, பயங்களை பகிர்ந்துகொள்ளலாம். அவர்கள் ஒருபோதும் யாரிடமும் அவற்றை வெளிப்படுத்தமாட்டார்கள். என்னுடைய நட்புவட்டத்தில் மிகவும் நெருங்கிய சிலர் உண்டு. அனைவரும் உண்மையுள்ளவர்கள். அவர்கள் தங்களுக்குள் வைத்துக்கொள்வார்கள் என்று நம்பி, எந்தக் காரியத்தையும் பகிர்ந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட தோழியர் / நண்பர்கள் வேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுவோம். மற்றவர்களுக்கு அப்படிப்பட்ட தோழியாக இருப்பதற்கு நான் முயற்சிக்கிறேன்.

இன்று நீங்கள், "ஆண்டவரே, நான் உண்மையாயிருக்கிறேன். ஆனால், மக்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசுகிறார்கள். செய்யும் எல்லாவற்றிலும் உண்மையாயிருக்க முயற்சி செய்கிறேன். ஆனாலும், மற்றவர்கள் என்னிடம் எப்போதும் தவறு காண்கிறார்கள். சின்ன சின்ன விஷயங்களையும் நான் நீதியாய் செய்திட முயற்சிக்கிறேன்; ஆனால், மக்கள் எப்போதும் என்னை குறைகூறிக்கொண்டே இருக்கிறார்கள்," என்று சொல்லலாம். அன்பானவர்களே, கவலைப்படாதிருங்கள். உங்கள் நண்பர்கள், தோழியர், குடும்பத்தினர் யாரும் உங்களைப் பாராட்டாவிட்டாலும், சத்தியத்தில் நீங்கள் நடக்கும்போது ஆண்டவர் உங்கள்பேரில் பிரியப்படுவார். சிறிய விஷயங்களையும் நேர்மையுடனும் உத்தமமாகவும் நீங்கள் செய்வதையும் உங்கள் உண்மையையும் ஆண்டவர் பார்க்கிறார். உங்கள் குடும்பத்துக்காகவும் நண்பர்களுக்காகவும் நீங்கள் எதிர்கொண்ட போராட்டங்களையும் செய்த தியாகங்களையும் அவர் அறிந்திருக்கிறார். உங்கள் உண்மையை யாரும் அங்கீகரிக்காவிட்டாலும், அவர் நீங்கள் கடந்துசென்ற யாவற்றையும் காண்கிறார்.

நான் என்ன செய்தாலும் எனக்காக நிற்கும் ஒரு தோழி உண்டு. நான் ஏதோ ஒன்றை தவறாகச் செய்துவிட்டாலும், அவள் எனக்காக எழுந்து, "இல்லை. அவள் செய்ததுதான் சரி," என்று கூறுவாள். தவறு செய்யும்போது ஆதரிக்கும் நண்பராக / தோழியாக நீங்கள் இருப்பது எனக்கு விருப்பமல்ல. என் தோழி எவ்வளவு உண்மையுள்ளவள் என்பதைக் காண்பிப்பதற்காகவே இதைப் பகிர்ந்துகொண்டேன். ஒருவேளை நீங்களும் அப்படிப்பட்டவராக இருக்கலாம். நீங்கள், "ஆண்டவரே, நான் எப்போதும் என் நண்பர்களுக்காக, குடும்பத்திற்காக நிற்கிறேன். உமக்காகவும் நிற்கிறேன். உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதற்கு முயற்சிக்கிறேன்; ஆனால், என் வாழ்வில் எந்த ஆசீர்வாதமும் இல்லை," என்று கூறலாம். அன்பானவர்களே, மனந்தளராதிருங்கள். ஆண்டவர் உங்கள் உண்மையைக் கண்டு உங்கள்மேல் பிரியமாயிருக்கிறார். மற்றவர்கள் உங்களிடம் உள்ள நல்லவற்றை அங்கீகரிக்கத் தவறினாலும், அவருக்கு நீங்கள் விசேஷித்தவர்கள் என்பதை மறவாதிருங்கள். முன்னேறும்படி அவர் உங்களை வழிநடத்துவார் என்று நம்பி, தொடர்ந்து சத்தியத்தில் நடந்திடுங்கள்; தேவனுக்கு உண்மையாயிருங்கள். ஆண்டவர் உங்களை நேசிக்கிறார்; விசுவாசத்துடன் நீங்கள் செய்யும் செயல்கள் யாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, இந்த அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்கு உண்மையாயும் விசுவாசமாகவும் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறேன். உம் பரிபூரண சித்தத்தின்படியே, தாமதிக்காமல் உம் ஆசீர்வாதங்கள் அவர்கள்மேல் வருவதாக. ஆண்டவரே, வியாதிப்பட்ட நிலையில் இந்தச் செய்தியை வாசிக்கிறவர்களின் கூப்பிடுதலுக்குச் செவிகொடும். நீதியாய் வாழ முயற்சித்தும் ஏன் இந்தப் பாடுகள் என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருப்பார்கள். இன்றே அவர்களைத் தொட்டு குணப்படுத்தும். அவர்கள் எழுந்து, நன்றாக நடப்பார்களாக. உடல் வேதனைகளை அகற்றி, அவர்கள் முழங்கால்களைப் பெலப்படுத்தும். அவர்கள் ஆரோக்கியத்தை திரும்ப கொடுத்து, பெலனை புதுப்பித்தருளும். உம் ஆசீர்வாதம் அவர்கள் வாழ்வில் பாயட்டும்; அவர்கள் வீடுகளை உம் சமாதானத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பிட வேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.