அன்பானவர்களே, இன்றைக்கு நீங்கள் தனியே இல்லை. தேவன்தாமே உங்களுடன் நிற்கிறார்; உங்களுக்காக, தாமே எல்லா யுத்தங்களையும் செய்கிறார்; தாம் உங்களுக்கென்று நியமித்துள்ள எல்லா ஆசீர்வாதங்களும் நிறைவேறுவதை உறுதி செய்கிறார். தேவனாகிய கர்த்தர் உங்களை தற்காக்கிறவராக, உங்களுக்குக் கேடகமாக, பலத்த துருகமாக இருக்கிறார் என்பதை அறியும்போது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது. "உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்" (உபாகமம் 28:7) என்று வேதம் வாக்குப்பண்ணுகிறது. அல்லேலூயா! சூனியம், பொல்லாத வல்லமைகள், எதிர்பாராத தடைகள், திடீரென நேரும் வேலை இழப்பு, உடல்நல குறைபாடுகள், பிள்ளைகளின் வாழ்வில் தோல்விகள், ஏனென்று தெரியாத வியாதிகள் உங்களைக் கட்டி வைத்திருப்பதாக நினைக்கிறீர்களா? பெலவீனமாக, குழப்பமாக, கண்ணுக்குத் தெரியாத சக்திகளில் சிக்கிக்கொண்டதாக நீங்கள் உணரலாம். ஆனால், இன்றைக்கு விடுதலையை நீங்கள் சுதந்தரிக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். வேதாகம காலங்களில் உங்கள் ஆவிக்குரிய விரோதிகளை தோற்கடித்த அதே ஆவியானவர் இப்போது உங்களுக்காக யுத்தம் செய்ய ஆயத்தமாயிருக்கிறார். உங்கள் வேலை, உங்கள் வியாபாரம், உங்கள் ஊழியம், உங்கள் வாழ்க்கையில் தாமதமாகும் ஒவ்வொரு நோக்கமும் தேவனுடைய பலத்த கரத்தால் உங்களுக்குச் சாதமாக முன்னேறும்.
சுவிசேஷங்களில் கூறப்பட்ட பிசாசு பிடித்த பையனைப் பற்றிய சம்பவத்தில், அசுத்த ஆவி அவனது பேசும் திறனை, கேட்கும் திறனை, வாழும் திறனை அசுத்த ஆவி திருடிக்கொண்டது. அவன் நெருப்பிலும் தண்ணீரிலும் தள்ளப்பட்டான். அதிகமாய் அலைக்கழிக்கப்பட்டான். மனித கட்டுப்பாட்டை தாண்டிய சக்திகளால் கட்டப்பட்டிருந்தான். ஆனால், இயேசு அவன்மேல் மனதுருகினார். அவர் அந்தப் பையனை விட்டு நிரந்தரமாக அகன்று செல்லுமாறு பிசாசை கடிந்துகொண்டார். உடன்தானே விடுதலை கிடைத்தது. அந்தப் பையன் பேசினான், கேட்டான், பரிபூரணமாக வாழ்ந்தான். அந்தப் பையனை சீர்ப்படுத்திய அதே இயேசு இன்றைக்கும் உங்களோடு நிற்கிறார். உங்கள் வாழ்வை கட்டியிருக்கும் எல்லா சங்கிலிகளையும் அறுக்க ஆயத்தமாயிருக்கிறார். வியாதி, பொருளாதார நெருக்கடி, முறிந்த உறவுகள், ஆவிக்குரிய ஒடுக்குதல் எவற்றால் உங்கள் ஆசீர்வாதங்கள் தாமதித்துக்கொண்டிருந்தாலும் அவை அகற்றப்படும். தமது வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசித்து, வெற்றியுடன் நடப்பதற்கு தேவன் அருள்புரிகிறார். நீங்கள் எழுந்து, "இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்" (சங்கீதம் 118:24) என்று அறிக்கை செய்வீர்கள்.
பிரியமானவர்களே, இது வெற்றியின் காலம்! நாம் இணைந்து கூப்பிட்டு தேவனுடைய விடுதலையை சுதந்தரிப்போம். "ஆண்டவரே, சத்துருவை தோற்கடியும். எல்லா விலங்குகளையும் உடைத்திடும். எல்லா தடைகளையும் அகற்றி, என் வாழ்வில் உம் ஆசீர்வாதங்களை அனுப்பிடும்," என்று கூறுங்கள். எனக்கு திறந்த வாசல்களையும் தெய்வீக தயவையும் அருளிச்செய்யும். என் வீட்டிலும் வியாபாரத்திலும் அற்புதங்களும் நற்செய்திகளும் பாய்ந்து வரட்டும். எனக்கு எதிரான சத்துருவின் திட்டங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போகட்டும். உம்முடைய ஆவியானவர் ஜெயத்திற்குள் என்னை வழிநடத்துவாராக. சமாதானத்தினால், சந்தோஷத்தினால், செழிப்பினால் என் வாழ்க்கையை நிரப்பிடும். உம்முடைய பலத்த கரம் கிரியை செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 'இயேசுவின் நாமத்தினால் நான் விடுதலையாயிருக்கிறேன்,' என்று அறிக்கை செய்கிறேன். உங்கள் தேவன் உண்மையுள்ளவர். நீங்கள் தோற்கடிக்கப்பட்ட இடத்தில் அவர் வெற்றியை அருளிச் செய்வார். துக்கம் இருந்த இடத்தில் சந்தோஷத்தையும் குறையிருந்த இடத்தில் ஆசீர்வாதத்தையும் அவர் தருவார். பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்துகொண்டிருக்கிறபடியால், இன்றே விசுவாசத்தோடும், எதிர்பார்ப்போடும் முன்னேறிச் செல்லுங்கள்.
ஜெபம்:
அன்பின் தகப்பனே, எல்லா யுத்தத்திலும் என்னோடு நிற்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எனக்கு விரோதமாக எழும்பும் எல்லா சத்துருவையும் இயேசுவின் நாமத்தில் முறியடித்துப்போடும். என் வாழ்வில் காணப்படும் எல்லா சங்கிலியையும், கட்டையும், தடையையும் உடைத்துப்போடும். வியாதி, இழப்பு, தோல்வி ஆகிய எல்லா தாக்குதல்களையும் அகற்றிப்போடும். உம்முடைய அதிசயங்களை, நற்செய்திகளை, சந்தோஷத்தை என்மேல் பொழிந்தருளும். எப்போதும் என்னை வழிநடத்தவும் பாதுகாக்கவும் உம்முடைய ஆவியை அனுப்பிடும். என் வீட்டை, குடும்பத்தை, பரிபூரண சமாதானத்தால் நிரப்பும். என் வாழ்வின் எப்பக்கமும் உம்முடைய ஜெயத்திற்கு சான்றாக அமைவதாக. விடுதலையை, வெற்றியை இயேசுவின் வல்ல நாமத்தில் அறிக்கை செய்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


