அன்பானவர்களே, இன்று இயேசு அழைக்கிறார் அடையாறு ஜெப கோபுரத்திலுள்ள தியான அறையிலிருந்து பேசுகிறேன். ஆம், நான் இங்கே இருக்கும்போது தேவனுடைய பிரசன்னத்தை பலமாக உணருகிறேன். நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்துக்கு வருகிறார்கள்; தியான அறைக்கு வருகிறார்கள்; பாக்கியம் பெறுகிறார்கள். ஆம், எனக்கு பெரியதோ அல்லது சிறியதோ எது நடந்தாலும், என்ன பாரம் ஏற்பட்டாலும் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுர தியான அறைக்கு ஓடி வந்துவிடுவேன்.

ஒருநாள், என் மகள் கேட்டிக்காக உபவாசித்து ஜெபிக்கும்படியாக மிகுந்த பாரத்தை என் உள்ளத்தில் ஆண்டவர் போட்டார்.  அவளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதிருக்கும்போது இது நடந்தது. ஆண்டவர் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை; ஆனாலும், பாரமுண்டானது. ஆகவே, நான் உபவாசித்து ஜெபித்தேன். தினமும் நான் உபவாசித்தேன். மாலை ஐந்து மணிக்கு தியான அறைக்கு வந்து ஜெபித்து உபவாசத்தை முடிப்பது வழக்கம். தேவன் மிகுந்த நெருக்கமாக என்னோடு பேசுவார்; தெளிவாகவும் பேசுவார். ஆனாலும், என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகுதான், கேட்டியின் தோழிகளில் ஒருத்தி, தீவிர நோய்வாய்ப்பட்டிருந்தது தெரிய வந்தது. கேட்டி அவளுடன்தான் நெருக்கமாக இருப்பாள்; அவளுக்கும் அந்த நோய் வந்திருக்கக்கூடும். ஆனால், ஆண்டவர் அதற்காகவே என்னை உபவாசித்து ஜெபிக்கப்பண்ணினார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் தியான அறையில் ஜெபித்ததால், ஆண்டவர் என் ஜெபங்களைக் கேட்டார்.

ஆம், இன்று உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்போது நீங்கள் உள்ளமுடைந்திருக்கலாம். அவர்கள் உங்களைவிட்டு தூரமாக வசிப்பதால் நீங்கள் கவலைப்பட்டிருக்கலாம். ஆண்டவர், "கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" (யோவான் 16:24) என்று கூறுகிறார். ஆம், இன்று நம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படி ஆண்டவரிடம் கேட்போம். உங்கள் வியாபாரத்தை, உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கும்படி அவரிடம் கேளுங்கள். ஆண்டவர் உங்களை அதிகமாய் நேசிக்கிறார். உங்களை ஆசீர்வதிக்க அவர் காத்திருக்கிறார். ஆகவே, நாம் இணைந்து ஜெபித்து, நம்மை ஆசீர்வதிக்கும்படி ஆண்டவரிடம் கேட்கலாம்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என் கவலைகளை, குறிப்பாக என் பிள்ளைகள், குடும்பத்தைக் குறித்த கவலைகளை நீர் அறிந்திருக்கிறீர். எனக்குப் புரியாதபோதும் உம்மேல் நம்பிக்கையாயிருக்க எனக்குக் கற்றுத்தாரும். தினமும் உம்மை தேடவும் உம்மிடம் ஜெபிக்கவும் எனக்கு பெலன் தாரும். ஆண்டவரே, என் கூப்பிடுதல் எல்லாம் உம் சிங்காசனத்தை எட்டட்டும். எல்லா தீங்குக்கும் ஆபத்துக்கும் எனக்கு அன்பானோரை விலக்கி பாதுகாத்தருளும். தெய்வீக சமாதானத்தினாலும் நிச்சயத்தாலும் இன்று என் உள்ளத்தை நிறைத்தருளும். என் கூப்பிடுதலைக் கேட்டு எனக்கு பதில் கொடுப்பீர் என்று விசுவாசித்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.