அன்பானவர்களே, இன்று, "அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்" (மத்தேயு 6:6) என்ற அருமையான வாக்குத்தத்தத்தை தியானிப்போம். நீங்கள் அந்தரங்கத்தில் செய்கிற ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தேவன் பார்க்கிறார். விசுவாசத்தோடு செய்யும் ஒவ்வொரு கிரியையையும், எல்லா கண்ணீரையும், மௌனமாக நீங்கள் சுமக்கும் எல்லா பாரத்தையும் அவர் கவனிக்காமல் போவதில்லை. உங்கள் உள்ளத்தை தேவன் காண்கிறார்; உங்கள் எண்ணங்களை அறிந்திருக்கிறார்; ஒருவரும் அறிந்திடாத விண்ணப்பத்திற்கும் அவர் செவிகொடுக்கிறார்.
ஜார்ஜ் முல்லரின் வாழ்க்கை இந்தச் சத்தியத்திற்கு அருமையான உதாரணமாக உள்ளது. 19ம் நூற்றாண்டில், அவர் ஆயிரக்கணக்கான திக்கற்ற பிள்ளைகளை பராமரித்து வந்தார். அவர் ஒருவரிடமும் பொருளாதார உதவியை ஒருபோதும் கேட்டதில்லை. மாறாக, தேவனையே நம்பி எல்லா தேவைகளையும் அவரே அருளுவார் என்று ஜெபிப்பார். ஒருநாள் காலை, திக்கற்றோர் இல்லத்தின் பணியாளர் ஒருவர் ஜார்ஜ் முல்லரிடம் வந்து, "இன்றைக்கு பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்கு உணவு இல்லை. நாம் என்ன செய்வது?" என்று கேட்டார். ஜார்ஜ் முல்லர், "எல்லா பிள்ளைகளையும் சாப்பாட்டு மேஜைக்கு வந்து, எப்போதும்போல ஜெபிக்கும்படி கூறுங்கள். அவர் தரப்போகும் உணவுக்காக தேவனை ஸ்தோத்திரியுங்கள்," என்று கூறினார். கேள்வி கேட்காமல், பிள்ளைகள் கூடி ஜெபித்தனர். அவர்கள் ஜெபித்து முடித்ததும், கதவு தட்டப்பட்டது. உள்ளூரில் பேக்கரி வைத்திருப்பவர் நின்றிருந்தார். "நேற்று இரவு என்னால் உறங்கவே முடியவில்லை. பிள்ளைகளுக்காக ரொட்டி சுடும்படி கடவுள் என்னிடம் கூறிக்கொண்டே இருந்தார். ஆகவே, அவர்களுக்காக ரொட்டி கொண்டு வந்தேன்," என்று கூறினார். உடனே எதிர்பாராத ஓர் ஆசீர்வாதம் வந்தது. பால்காரர் ஒருவரின் வண்டி, அந்த இல்லத்தின் முன் பழுதாகிவிட்டது. பால் கெட்டுப்போகும் என்பதை அறிந்து அவர், "பால் கெட்டுப்போகும் முன்னே அதை எடுத்துக்கொள்ளுங்கள்," என்று கூறினார்.
ஜெபத்திற்கு எவ்வளவு ஆச்சரியமான பதில் கிடைத்தது! பிள்ளைகள் உள்ளே ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்; ஆனால், தேவன் ஏற்கனவே மக்களின் உள்ளங்களில் பேசி விட்டார். அந்த நேரத்திற்கு என்ன வேண்டுமோ அதை அருளிச்செய்து ஆண்டவர் அவர்கள் விசுவாசத்திற்கு பலன்
கொடுத்தார். அவ்விதமே, அநேகர் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு வந்து, ஆண்டவருக்கு முன் முழங்காற்படியிடுகிறீர்கள். வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத பாரங்களைக் கொண்டு வருகிறீர்கள். உங்கள் உள்ளத்தை தேவனுக்கு முன்பாக அந்தரங்கத்தில் ஊற்றி விடுகிறீர்கள். அப்படி கணக்கற்ற ஜெபங்களுக்கு, உண்மையுள்ளவரான தேவன் பதில் அளித்துள்ளார்.
டேராடூனில் ஜெப கோபுர தியான அறையில் ஜெபித்த குமாரி எலெயேசர் ஓ ஷீனுக்கு வேலை கொடுத்து தேவன் ஆசீர்வதித்தார். சென்னையைச் சேர்ந்த திரு. ராஜகோபால், தன் மகளின் படிப்புக்காக ஜெபித்தார். ஆண்டவர், மிகுந்த போட்டியின் நடுவிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று சிறந்து விளங்குமாறு மகளை ஆசீர்வதித்தார். மும்பையைச் சேர்ந்த திருமதி ராஜலக்ஷ்மி, கர்ப்ப காலம் பத்திரமாக இருக்கவேண்டும் என்றும், கருவிலிருக்கும் குழந்தையின் நலனுக்காகவும் ஜெபித்தார்கள். ஆண்டவர், அவர்கள் ஜெபத்திற்குப் பதில் கொடுத்து, ஆரோக்கியமான பிரசவத்தில் ஓர் ஆண் பையனை அருளிச்செய்தார்.
அன்பானவர்களே, நீங்கள் வடிக்கும் கண்ணீர் எல்லாவற்றையும் தேவன் காண்கிறார். நீங்கள் அந்தரங்கத்தில் ஏறெடுக்கும் எல்லா விண்ணப்பத்திற்கும் அவர் செவிகொடுக்கிறார். உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் எல்லா பாரத்தையும் அவர் அறிந்திருக்கிறார். மனந்தளராதிருங்கள். உங்கள் பரம தகப்பன் செவிகொடுப்பார்; உங்கள் விசுவாசத்திற்கு அவர் பலன் அளிப்பார். உங்களுக்காக அவர் ஓர் அற்புதம் செய்து, தம் ஏற்ற நேரத்தில் உங்களை கனம்பண்ணுவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, அந்தரங்கத்தில் ஏறெடுக்கப்படுகிற எல்லா ஜெபத்தையும் காண்பதோடு, உண்மையாய் உம்மை தேடுகிறவர்களுக்கு பலனும் அளிப்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் சுமக்கும் எல்லா பாரத்தையும், மௌனமாக நான் வடிக்கும் கண்ணீர் யாவற்றையும், என் இருதயத்திற்குள் மறைந்திருக்கும் எல்லா வேண்டுதல்களையும் நீர் அறிந்திருக்கிறீர். இன்று நான் உம்மிடம் வரும்போது, என் ஜெபத்திற்கும் செவிகொடுத்து, உம் பூரண சித்தத்தின்படியே அதற்குப் பதிலளிப்பீராக. அதற்கான பதிலை காண முடியாவிட்டாலும், உம்மை நம்பும்படி என் விசுவாசத்தை பெலப்படுத்தியருளும். ஜார்ஜ் முல்லருக்கு வேண்டியதை நீர் கொடுத்து, உம் பிள்ளைகளின் ஜெபங்களுக்குப் பதில் அளித்ததுபோல, என் தேவைகள் எல்லாவற்றையும் அருளிச்செய்திடும். எனக்காக அற்புதங்களைச் செய்யும்; எல்லா தடையையும் அகற்றும்; ஆசீர்வாதத்தின் புதிய வாசல்களைத் திறந்திடும்; உம் கிருபையினால் என்னை கனம்பண்ணும். உம் தெய்வீக அருட்கொடையை, சமாதானத்தை, கிருபையை நான் அனுபவிக்கட்டும். என் விசுவாசத்திற்கு நீர் பலன் அளிப்பதால், என் இருதயத்தை உம் சந்தோஷத்தால் நிரப்புவதால் என் வாழ்க்கை உம்மை மகிமைப்படுத்துவதாக அமைய வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


