அன்பானவர்களே, எனக்கு மிகவும் பிடித்தமான வசனங்களுள் ஒன்றான, "யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்" (யோபு 42:10) என்பதை இன்று தியானிப்போம். நம் தேவனின் அழகான பெயர்களுள் ஒன்று, திரும்ப தரும் தேவன் என்பதாகும். யோபுக்கு முன்பு இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாக அவர் திரும்ப அளித்தார். நம் தேவன் இன்றும் அப்படிப்பட்டவராகவே இருக்கிறார். இழந்தவற்றை திரும்ப தருவதில் அவர் பிரியமாயிருக்கிறார்.

உத்தமனும், நீதிமானுமாயிருக்கிறான் என்று கூறி, கர்த்தர்தாமே யோபை சோதித்தார். அப்படிப்பட்ட நீதிமான், தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றும்கொள்ளும் வண்ணம் அவருக்கு முன்பாக தன்னை தாழ்த்தினான். யோபு, தன் உடல் நலத்தை, செல்வத்தை, ஆஸ்திகளை, அவனுக்கு அருமையாயிருந்த எல்லாவற்றையும் இழந்தான். சொல்லிமுடியாத பாடுகளை சகித்தான்; தன் வாழ்வில் அப்படிப்பட்ட உபத்திரவங்கள் ஏன் நேரிட்டன என திகைத்தான். ஆனாலும், தேவனை விட்டு விலகுவதற்குப் பதிலாக, கர்த்தருக்கு முன்பாக மனந்திரும்பி, சாம்பலில் உட்கார்ந்து தன்னை தாழ்த்தினான்.

ஆம், அன்பானவர்களே, அநேக வேளைகளில் உபத்திரவங்களும் போராட்டங்களும் நம் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கவும் தேவனை கிட்டிச் சேரவும் வாய்ப்பாக அமையும். யோபு, நீதிமானாக இருந்தாலும் தன்னை இன்னும் தாழ்த்தினான்; தேவனின் மன்னிப்பை தேடினான். தாழ்மையாக அர்ப்பணித்த பிறகே, கர்த்தர் அவன் இழந்த எல்லாவற்றையும் திரும்ப கொடுத்தார். மனந்திரும்பி தம்மிடம் வருகிறவர்கள் இழந்தவற்றை தேவன் திரும்ப கொடுக்கிறார். தாவீது ராஜாவும், "வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்," (சங்கீதம் 139:24) என்று ஜெபித்தான். நாம் பாடுகளை சந்திக்கும்போது, நம்மை தேவனுக்கு முன்பாக தாழ்த்துவோம்.

யோபு, இன்னும் குறிப்பிடத்தக்க ஒன்றையும் செய்தான். அவன் தன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்தியதோடு, தன் நண்பர்களுக்காக ஜெபிக்கவும் செய்தான். இந்த நண்பர்கள், அவனை ஆற்றித் தேற்றியவர்களல்ல; அவர்கள், அவனை குறை சொல்லியவர்கள்; தவறாக புரிந்துகொண்டவர்கள். ஆனாலும் யோபு அவர்களை மன்னித்ததோடு, தேவனுக்கு முன்பாக அவர்களுக்காக பரிந்தும் பேசினான். அவன் தன் நண்பர்களுக்காக ஜெபித்தபோது, கர்த்தர், அவனுக்கு எல்லாவற்றையும் திரும்பி கொடுத்தார். கர்த்தர் அவனை மிகுதியாய் ஆசீர்வதித்தார். முன்பு இருந்ததைப்போல இரட்டிப்பான எண்ணிக்கையில் ஆடுகளைக் கொடுத்தார். ஒட்டகங்களையும், காளைகளையும், கழுதைகளையும் பெருகப் பண்ணினார். யோபு, தன் பிள்ளைகளை இழந்தபோதிலும், தேவன் அவனுக்கு திரும்பவும் ஏழு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்து ஆசீர்வதித்தார். அவனுக்கு ஆறுதல் கூற வந்த அவனது சகோதர, சகோதரிகள் ஒவ்வொருவரும் தங்கக் காசையும், பொன் ஆபரணங்களைக் கொடுத்தனர். தேவன், யோபுக்கு நீடித்த ஆயுளை அருளிச் செய்து ஆசீர்வதித்தார். அவன் 140 ஆண்டுகள் வாழ்ந்து, பிள்ளைகளையும், நான்காம் தலைமுறையையும் கண்டான். தேவனுடைய திரும்ப அளிக்கும் வல்லமைக்கு எவ்வளவு ஆச்சரியமான சாட்சி பாருங்கள்!

நம் தேவன், இப்போதும் இரண்டத்தனையாக திரும்ப அளிக்கிறவராக இருக்கிறார். நாம் உண்மையாய் மனந்திரும்பி, தாழ்மையுடன் அவரிடம் வரும்போது, நாம் இழந்தவற்றுக்கு அதிகமாக திரும்ப தருவதற்கு அவர் வல்லவராயிருக்கிறார். நம் சந்தோஷத்தை, சமாதானத்தை, உறவுகளை, ஆரோக்கியத்தை, குடும்பத்தை, எதிர்காலத்தை அவர் திரும்ப தருகிறார். ஆகவே, அன்பானவர்களே, அனுதினமும் தாழ்மையுள்ள இருதயத்துடன் அவர் முன் வந்து, நம்மை மன்னிக்கும்படியும்,  அவர் வழிகளில் நடத்தும்படியும் கேட்போம். அவருக்கு முன்பாக நம்மை தாழ்த்தும்போது, அவர் கிருபையாக நம்மை மன்னிக்கிறார்; நமக்குத் திரும்ப தருகிறார்; மிகுதியாய் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, திரும்ப தரும் தேவனாக நீர் இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். முன்பு இருந்தவற்றைப்போல இரண்டத்தனையாக நீர் யோபுக்குக் கொடுத்து அவனை ஆசீர்வதித்ததுபோல, என் வாழ்விலும் எல்லாவற்றையும் திரும்ப தர வல்லவராயிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். என் எல்லா பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்தருளும்; தாழ்மையான, மனந்திரும்பிய இருதயத்தை எனக்குள் சிருஷ்டித்தருளும். என் குடும்பத்தில், ஆரோக்கியத்தில், பொருளாதாரத்தில், உறவுகளில், ஆவிக்குரிய வாழ்வில் நான் இழந்த எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும். எல்லா வெட்கத்துக்கும் பதிலாக கனத்தையும், துக்கத்துக்குப் பதிலாக சந்தோஷத்தையும், முறிவுகளில் உம் சுகமாக்கும் தொடுதலையும் அளித்தருளும். நான் இழந்தவற்றை உம் பரிபூரண சித்தத்தின்படி திரும்ப தந்தருளும்; உம் உண்மைக்கு சாட்சியாக என் வாழ்க்கை மாறட்டும். உமக்கே சகல மகிமையையும் செலுத்தி இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.