அன்பானவர்களே, "இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்" (மத்தேயு 1:23) என்ற வாக்குத்தத்தத்தை இன்று தியானிப்போம். இன்று உங்களோடு இருப்பதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். வருத்தமாக இருக்கிறீர்களா? இழந்துபோனதாக உணர்கிறீர்களா? காரணமேயின்றி மனமுடைந்துபோயிருக்கிறீர்களா? சிலவேளைகளில் பல காரியங்களை நினைத்து, நாம் தோற்றுப்போய்விட்டதாகவும் தேவனுடனான இணைப்பை தவறவிட்டுவிட்டதாகவும் எண்ணுகிறோம். அவையெல்லாம் இயேசு உங்களோடு இல்லை என்பதற்கு அர்த்தமில்லை. தேவன் உங்களைக் குறித்து அக்கறையில்லாமல் இருக்கிறார் என்பதை அவை காட்டுகிறதா? தாம் உங்களோடு இருப்பதாக ஆண்டவர் கூறுகிறார். இம்மானுவேல் என்ற அவரது பெயருக்கே தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாகும்.

உங்களில் அநேகருக்கு தெரிந்த ஒரு கதை உள்ளது. மணலில் இருந்த பாதச்சுவடுகள் கதை. ஒரு மனிதன், தன் கனவில் மணலில் பாதச்சுவடுகளை இருப்பதைப் பார்த்தான். அவன் பார்த்த இடமெல்லாம் பெரிய ஜோடி சுவடு ஒன்றும், சிறிய ஜோடி சுவடும் ஒன்றும் இருந்தன. ஆனால், அவன் சிரமப்பட்டுக் கடந்த காலங்களில் ஒரே ஒரு ஜோடி சுவடுகளே காணப்பட்டன. அதைக் கண்டபோது அவன் மனமுடைந்து கவலையடைந்தான். பலமுறை நாம் அனைவரும் கவலைப்படுவதைப் போலவே அவனும் ஏமாற்றமடைந்தான். அவன், "ஆண்டவரே, நான் கவலைப்பட்ட, தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் நீர் என்னுடன் இல்லை. அப்போது ஒரே ஒரு ஜோடி பாதச்சுவடுகளே இருக்கின்றன," என்றான்.

தேவன், "அன்பு மகனே, அவை என்னுடைய பாதச்சுவடுகள். நீ தோல்வியுற்றபோது, கவலையுற்றபோது, மனஞ்சோர்ந்த வேளைகளிலெல்லாம் நான் என் கரங்களில் உன்னை சுமந்துசென்றேன். ஆகவேதான் நீ ஒரு ஜோடி பாதங்களையே பார்த்தாய்," என்று பதில் கூறினார். ஆம், அன்பானவர்களே, உங்களிடமும், உங்களை தானே சுமந்து செல்வதாக ஆண்டவர் இன்றைக்குக் கூறுகிறார். மனம் சோர்ந்து போனதாக, தோற்றுப்போனதாக, இயேசுவை விட்டு தூரம் போய்விட்டதாக நீங்கள் உணர்ந்தால் அவரை விட்டு ஓடிப்போய்விடாதிருங்கள். மாறாக, அவரை நோக்கி ஓடுங்கள். உங்களை தாம் எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை ஆண்டவர் நினைவுப்படுத்துவார். அவரது ஆவியினால் உங்களை நிரப்பும்படியும், ஆறுதல்படுத்தும் அவரது சமுகத்தினால் பெலப்படுத்தும்படியும் இன்று ஆண்டவரிடம் கேளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் எப்போதும் என்னோடிருப்பதாக வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் தனிமையாக இருப்பதாக, தோற்றுப்போனதாக நினைத்தாலும் நீர் ஒருபோதும் என்னைவிட்டு விலகுவதில்லை. என்னோடு உலவும் தேவனாக, இம்மானுவேலாக நீர் இருக்கிறீர். நான் காணமுடியாத தருணங்களில் நீர் என்னை சுமந்து செல்வதை நாம் நம்புவதற்கு உதவி செய்யும். என் மனம் பாரப்படும்போதும் கவலைப்படும்போதும் உம் சமாதானத்தினால் அதை நிரப்பும். நான் பெலவீனமாக உணரும்வேளைகளில் என்னை தூக்கியெடும்; நாள் முழுவதும் உம்முடைய ஆறுதல் அளிக்கும் பிரசன்னம் என்னை சூழ்ந்துகொண்டிருக்கட்டும். உம்மை விட்டு அல்ல; உம்மை நோக்கி நான் ஓடுவதற்கு தயவாய் என்னை வழிநடத்தும். உம் கரங்களில் என்னை நெருக்கமாக பிடித்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.