அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள் ... அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்" (2 நாளாகமம் 32:7) என்று கூறுகிறது. இன்று ஆண்டவர், திடமனதாகவும் தைரியமாயும் இருக்கும்படி உங்களை ஊக்கப்படுத்துகிறார். எலிசா தீர்க்கதரிசியைக் குறித்து வேதத்தில் எழுதப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. சீரியாவின் ராஜாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவுக்கும் பெரும்போர் நடக்க இருந்தது. இஸ்ரவேல் தேசத்தை தாக்குவதற்கு சீரிய ராஜா ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தான். ஒருநாள் காலையில் எலிசாவின் வேலைக்காரன் எழுந்து பார்த்தபோது, பெரும் சேனை தங்களைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு பயந்துபோனான். அவன் உடனே எலிசாவிடம் ஓடிப்போய், "தீர்க்கதரிசியே, இந்த மக்களைப் பாரும். இவர்கள் அநேகராயிருக்கிறார்கள். அவர்கள் நம்மை அழித்துப்போடப் போகிறார்கள்," என்றான். ஆனால், எலிசா பயப்படவில்லை. மாறாக, அவன் கர்த்தரிடம் வேண்டுதல் செய்தான். "எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்" (2 இராஜாக்கள் 6:17) என்று எழுதப்பட்டுள்ளதை வாசிக்கிறோம். ஆம், கர்த்தர், அவர்களைப் பாதுகாக்கும்படி தம் பரம சேனையை அனுப்பியிருந்தார். ஆகவேதான் எலிசா, "பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்" என்றான்.
அன்பானவர்களே, இன்று நாமும் அந்த வேலைக்காரனைப்போலவே இருக்கிறோம். நம் ஆவிக்குரிய கண்கள் மூடியிருப்பதால், அடிக்கடி நாம் சூழ்நிலைகளைக் கண்டு அச்சப்படுகிறோம். நம் எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்பட்டு, "ஆண்டவரே, நான் என்ன செய்யப்போகிறேன்? இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன்?" என்று திகைக்கிறோம். கருவுற்றிருக்கும் சிலர் பிரசவத்துக்காக காத்திருக்கலாம். "ஆண்டவரே, எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது. நான் எப்படி இந்தப் பிள்ளையைப் பெற போகிறேன்?" என்று நினைக்கலாம். தேர்வுகளுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் சிலர், தேர்ச்சிபெறுவேனா என்று கலங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால், இன்று கர்த்தர் நம்மோடு இருக்கிறவர்கள், நமக்கு விரோதமாக இருக்கிறவர்களைக் காட்டிலும் பெரியவர்கள் என்று நினைவுப்படுத்துகிறார்.
ஆம், அன்பானவர்களே! உலகத்தில் இருக்கிறவனைக் காட்டிலும் நம்முடன் இருக்கிறவர் பெரியவர். போராட்டங்களை நீங்கள் மாத்திரமே தனியாக எதிர்கொள்ளவில்லை. கர்த்தருடைய பரம சேனை உங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கும்; அவர்தாமே உங்கள் பக்கத்தில் நிற்கிறார். ஆகவே, பயப்படாதிருங்கள். திடமாய், தைரியமாய் இருங்கள். ஆண்டவரை நம்புங்கள்; அவரது வல்லமையான சமுகமே உங்களை வழிநடத்தும்; பாதுகாக்கும்; எல்லா சவாலையும் மேற்கொள்வதற்கு உங்களுக்கு உதவும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இக்கட்டான சூழ்நிலைகளை, தேர்வுகளை, குழந்தைப் பேற்றை, நிச்சயமற்ற எதிர்காலத்தை சந்திப்போரின் பயத்தையும் கலக்கத்தையும் அகற்றும். உம் பலத்த சமுகத்தை காணும்படி அவர்கள் ஆவிக்குரிய கண்களை திறந்திடும். அவர்களைப் பெலப்படுத்தும்; வழிநடத்தும்; உம் பரம பாதுகாப்பு எல்லா குடும்பங்களையும் சூழ்ந்துகொள்ளும்படி செய்யும். அவர்கள் உள்ளங்களை தைரியத்தினால், விசுவாசத்தினால், சமாதானத்தில் நிரப்பவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


