அன்பானவர்களே, "உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்" (சங்கீதம் 121:3) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். கர்த்தர் எப்போதும் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். நீங்கள் இடறக்கூடாது, விழக்கூடாது, அவமதிக்கப்படக்கூடாது என்றும், சத்துருவால் அழிக்கப்படக்கூடாது என்றும் அவர் விரும்புகிறார். உங்கள்மேல் அவர் கொண்டிருக்கும் அன்பை இது காட்டுகிறது. ஒரு தாயின் அன்பைக்காட்டிலும் அவர் அன்பு பெரிதாயிருக்கிறது; நீங்கள் உறுதியாயும் பெலமாயும் இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

வேதம், "ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்" (சங்கீதம் 46:4,5) என்று கூறுகிறது. அன்பானவர்களே, நீங்கள் தேவன் வாசம்பண்ணும் இடமாக விளங்குகிறீர்கள். அவர் ஒன்றும் உங்களை அசைக்கமுடியாதபடி ஸ்திரமாக நிலைநாட்டுவார். உங்களைத் தாங்குவதாக ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார். ஆகவே, திடமாயிருங்கள். நம் கால்கள் சறுக்குகின்ற, நாம் தடுமாறுகிற தருணங்கள் உண்டு. என் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நானும் என் தங்கை ஏஞ்சலும் சிறியவர்களாக இருந்தபோது என் தாத்தாவுடனும் பெற்றோருடனும் காஷ்மீருக்குச் சென்றிருந்தோம். பால்காம் என்ற இடத்தில் குதிரை மீது எங்களை அமரவைத்து மலையுச்சிக்கு அழைத்துச் சென்றார்கள். மலைப்பாதை குறுகலாக இருந்தது; காற்று வீசியது; ஒரு பக்கம் ஆழமான பள்ளத்தாக்கு இருந்தது. விழுந்தால் அவ்வளவுதான். நாங்கள் எல்லோரும் குதிரைமீது சென்றோம்; என் தந்தை எனக்குப் பின்னே வந்துகொண்டிருந்தார். அவர், குதிரைக்காரரிடம், "ஐயா, குதிரை சறுக்கி விழுந்துவிட்டால் என்ன ஆகும்?" என்று கேட்டார். குதிரைக்காரர், "கவலைப்படாதீர்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். என்மேல் நம்பிக்கை வைத்து குதிரையில் சவாரி செய்யுங்கள்," என்றார். என் தந்தை பயந்தவிதமாகவே குறுகிய பாதை ஒன்றில் அவரது குதிரையின் கால் சறுக்கியது; விழப் பார்த்தது. எங்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் பயத்தில் அலறினோம். ஆனால், குதிரைக்காரர் உடனடியாக குதிரையைப் பிடித்து, நிறுத்தினார். அது மீண்டும் சமநிலைக்கு வந்தது; என் தந்தை தப்பித்தார்.

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது," என்று வேதம் அழகாக விவரிக்கிறது (சங்கீதம் 94:18). குதிரை சறுக்கும்போது சரியான தருணத்தில் ஒரு குதிரைக்காரரால் எப்படி காக்க முடிகிறதோ, அப்படி எல்லா சிரமத்தினூடாகவும் கர்த்தரின் அளவற்ற கிருபை நம்மை தாங்கும்! பொறாமையால், மிகுந்த துக்கத்தால், நாட்பட்ட வியாதியால், எதிர்பாராத இழப்பினால், கலக்கத்தினால் அல்லது பணக்கஷ்டங்களால் நம் பாதங்கள் சறுக்கலாம். துரோகத்தை, பொய்யான குற்றச்சாட்டுகளை, ஆவிக்குரிய போராட்டங்களை, சோதனைகளை நாம் எதிர்கொள்ளலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகள், சிலவேளைகளில் நம்மை உதவியற்ற நிலையில், அதைரியத்துக்குள் தள்ளும்.

ஆனாலும், நாம் எப்பொழுதெல்லாம், "ஆண்டவரே, என் கால் சறுக்குகிறது," என்று கூப்பிடும்போது, அவரது மாறாத கிருபை வந்து நம்மை மீட்கிறது. அவர் நம்மை பெலப்படுத்தி எல்லா உபத்திரவத்தையும் கடந்துபோகப்பண்ணுகிறார். வேதம், "என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது" என்று கூறுகிறது (சங்கீதம் 94:19). யோனாவைப் பாருங்கள். அவன் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், தவறானதை தெரிந்துகொண்டான்; ஆனாலும் ஆண்டவர் அவனைக் கைவிடவில்லை. ஒரு பெரிய மீனை அனுப்பி, யோனாவின் உயிரை அவர் காப்பாற்றினார். ஆழமான கடலிலும் தேவன் அவனை கண்ணோக்கி, பத்திரமாக வெளியே கொண்டு வந்தார். பிறகு யோனா கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய செய்தியை அறிவித்தான். அதன் பயனாக, நினிவேயின் மக்கள் தேவனிடமாய் திரும்பினர்; அவருடைய இரக்கத்தை பெற்று, அழிவிலிருந்து காக்கப்பட்டனர்.

அன்பானவர்களே, ஆண்டவரால் உங்களுக்கும் அப்படியே செய்யமுடியும். நீங்கள் தவறே செய்தாலும், அவரது கிருபை உங்களை மீட்டு அவரது அழைப்பை நிறைவேற்றுவதற்கு உதவும். தேவனுடைய கிருபை வரங்களும் அவர் அழைத்த அழைப்பும் மாறாதவை (ரோமர் 11:29). இன்று உறுதியாக நிற்க முடியாமல் தடுமாறுகிறீர்களா? அவரது கிருபை உங்களைத் தாங்கும். ஜெபியுங்கள்; அவரை நம்புங்கள். அவர் உங்களைப் பாதுகாப்பார்; பெலப்படுத்துவார்; உங்கள் அடிகளை நிலைப்படுத்துவார். மற்றவர்களுக்கு முன் கனத்துடன் எழும்பும்படியும், தெய்வீக நோக்கத்தை நிறைவேற்றும்படியும், தேசங்களுக்கும், குடும்பங்களுக்கும், சமுதாயத்திற்கும், உங்களோடு பணிபுரிகிறவர்களுக்கும், படிக்கிறவர்களுக்கும் ஆசீர்வாதமாக விளங்கும்படியும் செய்வார்.

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, உம்முடைய பரிபூரண கிருபையை தேடி உம் சமுகத்திற்கு வருகிறேன். வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் என்மேல் உம் கிருபையை பொழிந்தருளும். என்னை ஆசீர்வதித்து, உம் வாக்குத்தத்தங்களின் முழு பலனையும் அளித்தருளும். என் கால்கள் சறுக்கும்போதெல்லாம் உம் கிருபை என்னை தாங்குவதாக. நான் மறுபடியும் எழுந்து திடமாக நிற்கும்படி என் பாதங்களை ஸ்திரமாக நிலைநிறுத்தும். எல்லா உபத்திரவங்களிலிருந்தும் என்னை விடுத்து, பெலவீனத்தின்போது பெலப்படுத்தி, தெய்வீக அழைப்பை நிறைவேற்றுவதற்கு எனக்கு உதவும். என் தேசத்துக்கு வெளிச்சமாக பிரகாசிப்பதற்கான கிருபையை எனக்கு அருளிச்செய்து, லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கப்பண்ணும். இயேசுவின் வல்ல நாமத்தில் பயபக்தியுடன் ஜெபிக்கிறேன், ஆமென்.