அன்பானவர்களே, இன்று கர்த்தர் உங்களைக் குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகக் கூறுகிறார். வேதம், "உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்" (செப்பனியா 3:17) என்று கூறுகிறது. உன்னதமான தேவன் உங்களைக் குறித்து பெருமிதம் கொள்வது எவ்வளவு சிலாக்கியம்! வேறு யாரும் உங்களைக் குறித்து பெருமிதம் கொள்ளாவிட்டால் கவலையில்லை. இயேசுதாமே உங்களைக் குறித்து பெருமிதம் கொள்கிறார். இதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். நீங்கள், "நான் கடினமாக வேலை செய்கிறேன். ஆனால், யாரும் என்னை உற்சாகப்படுத்தவில்லை. என் பெற்றோர் நான் கடினமாக உழைப்பதைக் காண்பதேயில்லை. என் பிள்ளைகள் அவர்களால் நான் படுகிற கஷ்டங்களை கண்டுகொள்வதேயில்லை," என்று கூறலாம். ஆனால், இன்று கர்த்தர் உங்களைக் குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகக் கூறுகிறார். அன்பானவர்களே, நமக்கு வேறு என்ன வேண்டும்?

மகா உன்னதமானவரான தேவன் உங்களைக் குனிந்து பார்க்கிறார்; உங்களை அதிகமாய் நேசிக்கிறார். என் பட்டமேற்படிப்பின் மிகக் கடினமான முதலாமாண்டில்  படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் மகள் கேட்டிக்கு இரண்டு வயது. ஒருநாள் கல்லூரியில் வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது நள்ளிரவு இரண்டு மணியாகிவிட்டது. கேட்டியைப் பார்த்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் உறங்கினேன். அதிகாலை 6:30 மணிக்கு மீண்டும் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்பதால் 5:30 மணிக்கே வீட்டிலிருந்து புறப்படவேண்டும். அன்று மிகவும் களைப்பாக உணர்ந்ததால், "ஆண்டவரே, ஏன் இவற்றையெல்லாம் நான் கடந்துசெல்ல அனுமதிக்கிறீர்? ரொம்ப கஷ்டமாக இருக்கிறது," என்று கூறினேன். உங்களில் அநேகர் இதேநிலையை கடந்து செல்வீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அன்று அதிகாலை 5 மணிக்கு, நான் புறப்பட்டபோது, அதே நேரம் என் மாமா பால் தினகரன் வெளியே வந்தார்கள். நான் புறப்படும்போதெல்லாம் அவர் எனக்காக ஜெபிப்பது வழக்கம். தேவன், அவர் மூலமாக, "என் பிள்ளையே, நான் உன்னைக் குறித்து மிகவும் பெருமிதம் கொள்கிறேன். நீ செய்கிற எல்லா தியாகமும் முயற்சிகளும் நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்படும்," என்று உரைத்தார். அவ்விதமே இன்று ஆண்டவர் உங்களிடமும் கூறுகிறார். நீங்கள் எதன் வழியாகக் கடந்து சென்று கொண்டிருந்தாலும், ஆண்டவர் உங்களைக் குறித்து பெருமிதம் கொள்கிறார். ஆகவே, மனந்தளராதிருங்கள். ஆண்டவர், உங்கள் கண்ணீர், தியாகம் யாவற்றையும் காண்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் என்னைக் குறித்து பெருமிதம் கொள்வதை எனக்கு நினைவுப்படுத்தியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் கண்ணீரையும் தியாகத்தையும் யாரும் அறியாவிட்டாலும் நீர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறீர். ஆண்டவரே, தயவாய் என்னை பெலப்படுத்தும். யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்று எண்ணி நான் களைத்துப்போகிறேன். காத்திருத்தலின் வேளையில் மனந்தளர்ந்திடாதிருக்க எனக்கு உதவி செய்யும். எல்லா வேதனையையும் எல்லா முயற்சியையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். என் வாழ்வில் உம் வாக்குத்தத்தங்கள் யாவும் நிறைவேறவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.