அன்பானவர்களே, இன்று ஆண்டவர், "நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்" (எசேக்கியேல் 11:19) என்று வாக்குக்கொடுக்கிறார். ஆம், இந்த வாக்குத்தத்தம் உங்களுக்கானதல்ல, உங்கள் விரோதிகளுக்கானது. அவர், அவர்களுக்கு ஏக இருதயத்தைக் கொடுப்பதோடு, புதிய ஆவியையும் கொடுப்பதாக ஆண்டவர் கூறுகிறார். இன்று அநேகர் உங்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கலாம்; உங்கள் குடும்பத்திலேயே விரோதிகள் இருக்கலாம்.

உங்கள் குழுவிலேயே விரோதம் இருக்கலாம்; ஒவ்வொருவரும் தங்கள்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கலாம். ஆனால், ஆண்டவர் தாம் எல்லோரையும் ஒன்றாய் இணைப்பதாக இன்று கூறுகிறார். உங்கள் குழு வெற்றியடையவேண்டும் என்று ஜெபிக்கிறீர்களா? உங்கள் குடும்பம் மீண்டும் இணையவேண்டும் என்று ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தினுள் சமாதானம்வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறீர்களா?

ஆம், ஆண்டவர் ஒருமுகமான இருதயத்தை, ஒரே மனதை தருவதாகவும் புதிய ஆவியால் நிரப்புவதாகவும் வாக்குக்கொடுக்கிறார். எல்லா விரோதிகளும் உங்களுக்கு நட்பாகிவிடுவார்கள். அவர்களின் கண்களில் உங்களுக்குத் தயவு கிடைக்கும்; நீங்கள் அனைவரும் ஒரே இலக்குடன் உழைப்பீர்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் இன்று பிரச்னை இருக்குமானால், உங்களுக்காக அதை மாற்றுவதாக ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார்; அவரே உங்களை வெற்றிபெறவும் செய்வார். இதை விசுவாசித்து நம்மை ஆசீர்வதிக்கும்படி இன்று ஆண்டவரிடம் கேட்போம்.

ஜெபம்:
பரம தகப்பனே, புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் தருவதாக நீர் வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, எனக்கு விரோதமாக செயல்படும் மக்களை நீர் தொடுகிறீர் என்று விசுவாசிக்கிறேன். தயவாய் எல்லா பிரிவினைகளையும் அகற்றி, ஒற்றுமையையும் சமாதானத்தையும் அருளிச்செய்வீராக. என் குடும்பத்தில் அன்பை திரும்பவும் தந்து, வேலை செய்கிற இடத்தில் ஒருமனதையும் அளித்தருள்வீராக. எப்பக்கமும் என்னை தயவு சூழ்ந்துகொள்வதாக. ஆண்டவரே, என் கட்டுப்பாட்டைக் கடந்த சூழ்நிலைகளை நீர் தயவாய் மாற்றுவீராக. உம் மகிமைக்கென்று என்னிலும் என்னை சுற்றிலும் அற்புதங்களைச் செய்வீர் என்று முழுவதுமாய் நம்பி இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.