பிரியமானவர்களே, "உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்" (லூக்கா 12:7) என்ற இயேசுவின் ஆறுதலான வார்த்தைகளை இன்றைக்கு தியானிப்போம். தேவனின் பார்வையில் நாம் எவ்வளவு அருமையானவர்களாக இருக்கிறோம்! நம்மாலும் நம்முடைய மயிரையெல்லாம் எண்ண முடியாது. நம் சிருஷ்டிகர் அவற்றை ஒவ்வொன்றாக அறிந்திருக்கிறார். நாம் ஒளிப்பிடத்திலே உருவாக்கப்பட்டபோது, நம்முடைய எலும்புகளை அவர் அறிந்திருந்தார். நான் பிறக்கும் முன்னரே அவர் கண்கள் நம்மைக் கண்டன. நம் உடலில் ஒவ்வொரு அவயவங்களையும், நம் வாழ்வின் விவரங்கள் அனைத்தையும், நம் இருதயத்தின் எல்லா தேவைகளையும் அவர் அறிந்திருக்கிறார் (சங்கீதம் 139:15,16). தேவன், நட்சத்திரங்களையெல்லாம் எண்ணி அவற்றை பெயரிட்டு அழைக்கிறார் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 147:4). பிரபஞ்சத்தை நெருக்கமாக அறிந்திருக்கும் தேவன், உங்கள் பெயரையும் அறிந்திருக்கிறார்; உங்கள் கரங்களைப் பிடித்திருக்கிறார்; எப்போதும் உங்கள்மேல் நினைவாயிருக்கிறார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக நம் ஊழியத்தில் பங்காளராக இருக்கும் பரம்ஜித் என்ற சகோதரியின் சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் திருமணத்திற்காக 10 ஆண்டுகள் காத்திருந்தார்கள். மக்கள் வெகுவாய் அவர்களைக் கேலி செய்தார்கள். ஆனால், தேவன் அவர்களுக்கு வாக்குக்கொடுத்து, எதிர்காலம் இருக்கிறதென்று நம்பிக்கையளித்தார் (எரேமியா 29:11; நீதிமொழிகள் 23:18). 44 வயதில் அற்புதமாக அவர்களுக்குத் திருமணமானது. குழந்தைக்காக மறுபடியும் ஐந்து ஆண்டுகள் அவர்கள் காத்திருந்த நிலையில், சீஷாவின் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்தார்கள். ஆண்டவர், மஹிமா என்ற மகளைக் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்தார். இன்றைக்கு மஹிமா, தாலந்து நிறைந்த பாடகியாக பல விருதுகளை பெற்றுள்ளார். பிறகு அவர்கள் கணவர் மின்சாரம் தாக்கி பயங்கரமான விபத்துக்குள்ளானபோது, மருத்துவர்கள் நம்பிக்கையிழந்த நிலையில், இயேசு அழைக்கிறார் ஜெப கோபுர ஜெபத்தின் மூலம் தேவன் அவரை பூரணமாக குணமாக்கினார். அவர்கள் சொந்த வீடு வேண்டும் என்று வாஞ்சித்தபோது, தேவனுடைய வீட்டைக் கட்டுவதற்காக விதைத்தார்கள். ஆண்டவர், விரைவிலேயே அவர்களுக்கு அழகான வீட்டைக் கொடுத்தார். எல்லா ஆசீர்வாதமும் காத்திருந்த பிறகே, ஆனால் தேவன் நியமித்த காலத்தில் கிடைத்தது. அவர், அந்த சகோதரிக்காக எல்லாவற்றையும் செய்து முடித்தார்.
அன்பானவர்களே, திருமணம், பிள்ளைகள், சுகம், பொருளாதாரம் அல்லது சொந்த வீடு என்று ஏதாவது ஓர் அற்புதத்திற்காக நீங்களும் காத்திருக்கலாம். "தேவன் என்னை மறந்துவிட்டாரோ?" என்று கூட நீங்கள் திகைக்கலாம். ஆனால், ஆண்டவர், "உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்," என்று கூறுகிறார். தேவன், உங்கள் தலையிலுள்ள மயிரையெல்லாம் எண்ணியிருக்கிறார். உங்கள் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களையெல்லாம் அறிந்திருக்கிறார். அவரால் கூடாத காரியம் எதுவுமில்லை. சகோதரி பரம்ஜித்துக்கு அவர் பதிலளித்ததுபோல, உங்களுக்கும் பதில் அளிப்பார். உங்கள் கண்ணீர் வீணாகப்போகவில்லை;உங்கள் ஜெபங்கள் மறக்கப்படவில்லை. விசுவாசத்தோடு அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு எல்லாவற்றையும் அவரே செய்துமுடிப்பார். உங்கள் பெயரை, உங்கள் தேவைகளை, உங்கள் எதிர்காலத்தை அறிந்திருக்கிற அவர் உண்மையுள்ளவர். அவரை நம்புங்கள். உங்கள் வாழ்க்கையில் அவர் அற்புதம் செய்வதைக் காண்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என்னை அதிகமாய் அறிந்திருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் தலையிலுள்ள மயிரையெல்லாம் நீர் எண்ணியிருக்கிறீர். உம் பார்வையில் நான் விசேஷித்தவனா(ளா)யிருக்கிறேன் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, என் குடும்பத்தின் தேவைகள் எல்லாவற்றையும் நினைத்தருளும். சுகத்தை, ஆசீர்வாதத்தை இன்றே அருளிச்செய்யும்; இன்றே என்னை சீர்ப்படுத்தும். என் வாழ்வின் துயரத்தையெல்லாம் சந்தோஷத்தின் சாட்சியாக மாற்றியருளும். என் வாழ்க்கையைக் குறித்த எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்தருளும். உமக்கு மகிமையாக அற்புதங்கள் நிகழட்டும் என்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.