அன்பானவர்களே, இன்று நான் உங்களுடன் ஒரு கதையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பட்டணத்திலிருந்து மிகவும் தொலைவில் வயதான ஒரு பெண்மணி வசித்து வந்தார்கள். குடும்பத்தில் யாருமில்லாததால் தனியே இருந்தார்கள். அவர்கள் வாழ்வில் ஆசீர்வாதமான ஒன்று நடந்தால், உரத்த சத்தமாக, "இயேசுவே, இதற்காக உமக்கு ஸ்தோத்திரம்," என்று கூறுவார்கள். அவர்கள் அண்டைவீட்டாருக்கு இவர்களைப் போன்ற அளவு விசுவாசம் இல்லை. அண்டைவீட்டில் வசித்த ஒருவர், அந்தப் பெண்மணியிடம் வேடிக்கை பண்ணவும், அவர்களது விசுவாசத்தை சோதிக்கவும் திட்டமிட்டார். ஒருநாள் அந்த முதிய பெண்மணி உரத்த சத்தமாக, "ஆண்டவரே, எனக்கு எல்லா மளிகைப் பொருட்களும் வேண்டும். சாப்பாட்டுக்கு அரிசி, பழங்கள், காய்கறிகள் எல்லாம் வேண்டும்," என்று ஜெபித்தார்கள். பக்கத்து வீட்டுக்காரர் இதை கவனித்துவிட்டு, "இதுதான் ஏற்ற நேரம். நான் இந்தப் பெண்மணியிடம் ஒரு தந்திரம் செய்யப்போகிறேன்," என்று தனக்குள் கூறிக்கொண்டார். எல்லா பொருட்களையும் எழுதிக்கொண்டு, கடைக்குப்போய் அனைத்தையும் வாங்கி வந்து, அந்தப் பெண்மணியின் வீட்டுக் கதவுக்கு முன்பு வைத்துவிட்டார்.
அழைப்பு மணியை ஒலித்துவிட்டு ஓடிப்போனார். அந்த முதிய பெண்மணி கதவைத் திறந்தார்கள். வாசலில் இருந்த மளிகைப் பொருட்களைப் பார்த்ததும், மகிழ்ச்சியுடன், "இயேசுவே, எனக்குத் தேவையான எல்லா பொருட்களையும் தந்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம்," என்று கூறினார்கள். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்து, "பாட்டி, நான்தான் தந்திரம் செய்தேன். இயேசு இதை உங்களுக்கு வாங்கிக்கொடுக்கவில்லை. நான்தான் வாங்கினேன்," என்று கூறினார். உடனே அந்த முதிய பெண்மணி, "இயேசுவே, இந்த எல்லா பொருட்களுக்காகவும் ஸ்தோத்திரம். நான் கேட்ட எல்லாவற்றையும் தந்திருக்கிறீர். அதற்கு ஒரு பிசாசை பணம் கொடுக்கப் பண்ணியிருக்கிறீர்," என்று கூறினார்கள். பக்கத்து வீட்டுக்காரர், மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். தன் வீட்டுக்குத் திரும்பினார். உங்கள் விசுவாசத்தை ஊக்கப்படுத்துவதற்காக இந்த வேடிக்கைக் கதையை பகிர்ந்துகொண்டேன்.
நேற்று, நீங்கள் ஆண்டவரை நம்பியிருக்கலாம்; நீங்கள் இருந்த சூழ்நிலையில் அடைக்கலம் கண்டிருக்கலாம். இன்று இழப்பை சந்தித்தாலும் அவரிடம் ஓடுங்கள். ஆண்டவர் உங்களுக்கு அரணிப்பான கோட்டையாக இருப்பார். அதைத்தான் வேதம், "கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்," (ஏசாயா 25:4) என்று கூறுகிறது. ஆம், ஆண்டவர் உங்களுக்கு நிழலாயிருக்கிறார். கடினமான இந்த உலகத்தில் நிச்சயமற்ற சூழ்நிலையில் கர்த்தர் உங்கள் பாதுகாவலாயிருப்பார். உங்கள் வாழ்க்கையை, உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை இயேசுவின் கரங்களில் ஒப்படையுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் எனக்கு பலத்த அடைக்கலமும், புயலுக்கு புகலிடமுமாயிருக்கிறீர். பயம், நிச்சயமின்மை, பலவீனம் என்னை சூழ்ந்துகொள்ளும்போது உம்மை நோக்கி ஓடி வரப்பண்ணுவீராக. என் விசுவாசத்தை பெலப்படுத்தி, உம் தெய்வீக அருட்கொடையை ஏற்ற நேரத்தில் தந்திடும். அற்புதம் நடக்கும் முன்னரே உம்மை ஸ்தோத்திரிக்க கற்றுக்கொடுத்தருளும். என் வாழ்க்கையையும் என் பிள்ளைகளின் வாழ்க்கையையும் உம் பலத்த நிழலின் கீழ் பாதுகாத்தருளும். வெயிலுக்கு நிழலும், எல்லா உபத்திரவங்களின்போதும் எனக்கு புகலிடமாகவும் விளங்குவீராக. ஒருபோதும் என்னை கைவிடாததற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


