அன்பானவர்களே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, தேவன், "உங்கள் கிரியையையும்... தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே" (எபிரெயர் 6:10) என்ற ஆச்சரியமான வாக்குத்தத்தத்தை தருகிறார். இந்த வசனம் நமக்கு எவ்வளவு ஆறுதலை தருகிறது! நம் தேவன் நீதியுள்ளவர். அவர் எல்லா ஜெபத்தையும், எல்லா கண்ணீரையும், அவருடைய நாமத்திற்காக நீங்கள் அன்புடன் செய்த சிறுசெயலையும் நினைவில் வைத்திருக்கிறார். அவருடைய ராஜ்யத்திற்காக நீங்கள் அந்தரங்கத்தில் செய்த தியாகங்களும் அவருக்கு முன்பாக விலையேறப்பெற்றதாக இருக்கிறது. அன்பான தேவ பிள்ளையே, எப்படி அவருக்கு ஊழியம் செய்வது என்று நீங்கள் திகைக்கலாம். உங்களுக்கு மேடையோ, பெரிய தளமோ அவசியம் அல்ல; உங்கள் வீட்டிலிருந்தபடியே தேவ ஊழியத்தில் நீங்கள் பாத்திரமாக பயன்படுத்தப்படலாம். உங்கள் ஜெபங்கள், தைரியமளிக்கும் வார்த்தைகள், மற்றவர்கள்பேரில் காட்டும் அக்கறை ஆகியவை அவரால் நினைவுகூரப்படும்.

என்னுடைய வாழ்க்கையிலிருந்து நான் சாட்சி கூற முடியும். 1986ம் ஆண்டு என் மகள் ஏஞ்சலை நான் இழந்தபோது, என் உள்ளம் உடைந்தது. அதற்குமேல் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. 1988ம் ஆண்டு, ஆண்டவர் என்னோடு பேசி ஜெபிக்கிற ஊழியத்தை, குறிப்பாக பெண்களுக்காக ஜெபிக்கிற ஊழியத்தைக் கொடுத்தார். எஸ்தர் ஜெபக் குழு அப்படிதான் ஆரம்பமானது. எஸ்தர், ஜனங்களுக்காக திறப்பிலே நின்றதுபோல, தேவன், குடும்பங்களுக்காக, சபைகளுக்காக, தேசங்களுக்காக நிற்பதற்காக பெண்களை எழுப்பினார். எப்படி ஆரம்பிப்பது, என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆண்டவர்தாமே அடிதோறும் என்னை வழிநடத்தினார். இன்றைக்கு 30 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். பல பெண்கள், இளம்பெண்கள், தம்பதியர், சிறுபிள்ளைகள் கூட ஜெபத்தில் இணைந்துள்ளனர். என்னுடைய துக்கத்தில் ஆரம்பித்த அந்த ஜெபம், பலருக்கு ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாறியுள்ளது. மெய்யாகவே, தம்முடைய நாமத்திற்காக நீங்கள் செய்த அன்பின் பிரயாசத்தை மறந்துபோக தேவன் அநீதியுள்ளவர் அல்ல.

அன்பானவர்களே, இந்த ஊழியத்தில் நீங்களும் தேவனோடு கைகோர்த்துக் கொள்ளலாம். நீங்கள் வாலிப பெண்ணாக, திருமணமான பெண்ணாக, தம்பதியாக இல்லை சிறுபிள்ளையாகக் கூட இருக்கலாம். தேவனுடைய வேலையில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது. உங்களை ஜெபத்திற்கு ஒப்புக்கொடுக்கும்போது, தேவன் உங்கள் முயற்சிகளை பன்மடங்காக பெருகப்பண்ணி, தம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வருவார். இந்தக் கடைசி நாள்களில் அவர், குடும்பங்களுக்காக, தேசங்களுக்காக திறப்பிலே நிற்பதற்காக ஜெப வீரர்களை / ஜெப வீராங்கனைகளை எழுப்பி வருகிறார். நீங்கள் அளிக்கும் சிறுகாணிக்கைக்கு முக்கியத்துவம் இல்லை என்று எண்ணிவிடாதீர்கள். தேவன் காண்கிறார்; அவர் நினைவுகூர்கிறார். "அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல," என்ற வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கிறது. நாம் நம்மை தாழ்த்துவோம்; அவரிடம் அர்ப்பணிப்போம்; அவருடைய அழகிய திட்டத்தில் அங்கம் வகிப்போம். உங்கள் ஜெபங்களின் மூலம் அதிசயங்கள் நடக்கின்றன; அவருடைய நாமம் மகிமைப்படும். அல்லேலூயா!

ஜெபம்:
பரம தகப்பனே, இந்த அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய அன்பின் பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு நீர் அநீதியுள்ளவரல்ல. உமக்கு ஊழியஞ்செய்ய நான் விரும்புகிறபடியினால் என் இருதயத்தை பெலப்படுத்துவீராக. என் வீட்டிலும் குடும்பத்திலும் என்னை ஜெப வீராங்கனையாக எழுப்புவீராக. என்னுடைய துக்கத்தை அநேகருக்கு ஆசீர்வாதமானதாக மாற்றுவீராக. மற்றவர்களுக்காக மன்றாடும்படி என்னை உம்முடைய ஆவியினால் நிரப்பும். உம்முடைய மகிமைக்காக என் ஊழியத்தின் பலனை வர்த்திக்கப்பண்ணும். என்னுடைய நேரத்தை வீணாக்காமல் உம்முடைய ராஜ்யத்திற்கென்று பயன்படுத்த உதவி செய்யும். உம்முடைய பரிசுத்த நாமத்தை எப்போதும் மகிமைப்படுத்த என்னை ஆயத்தமாக்கவேண்டுமென்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.