அன்பானவர்களே, இன்றைக்கு, "உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்" (சங்கீதம் 84:11) என்ற வசனத்தை தியானிக்க இருக்கிறோம். ஆம், தம் பார்வைக்கு நீங்கள் உத்தமமாய் நடக்கும்போது, தேவன் உங்களை நன்மையினால் நிரப்புகிறார். ஆனால், உத்தமன் என்றால் யார்? "கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்" (சங்கீதம் 119:1) என்று கூறுகிறது.

உத்தமனாய் வாழ்ந்த தானியேல் என்ற மனுஷனை குறித்து வேதத்தில் பார்க்கிறோம். அவன் பாபிலோனுக்கு சிறைப்பிடித்துச் செல்லப்பட்டான். ராஜாவின் கட்டளைகளுக்கு, அவன் கீழ்ப்படிய வேண்டிய சந்தர்ப்பங்கள் எழுந்தன. ஆனாலும், தேவ பிரமாணங்களுக்கு அவை எதிராய் இருந்தபடியினால், அவன் உண்மையாய் இருந்தான். ராஜாவை மட்டுமே வணங்கவேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, அவன் தன் விசுவாசத்தை விட்டுவிடவில்லை. அவன் நாள்தோறும் மூன்று முறை தொடர்ந்து ஜெபித்தான். அந்தச் சட்டங்கள் தனக்கும் கர்த்தருக்கும் இடையே உள்ள ஐக்கியத்தினுள் வருவதற்கு அவன் இடங்கொடுக்கவில்லை. கர்த்தர், தானியேலின் இருதயத்தை பார்த்தார். தமக்கு பிரியமாய் ஏற்ற காலத்தில் அவன் நடந்ததை, தம்மை கனப்படுத்தியதை கண்ணோக்கினார். கர்த்தர், தானியேலுக்கு ராஜாக்களை வியக்கப்பண்ணும் வரங்களைக் கொடுத்து ஆசீர்வதித்தார். அவனை ராஜ்யத்தை ஆளும் நிலைக்கு உயர்த்தினார். அது ஒரே இரவில் நடந்துவிடவில்லை. தானியேல் அநேக உபத்திரவங்களை, சோதனைகளை கடந்து வரவேண்டியதாயிற்று. ஆனாலும், அவன் தன் விசுவாசத்தை காத்துக்கொண்டான்; தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். கர்த்தர், அவனை கைவிடவில்லை. மாறாக, எல்லா நன்மைகளையும் அளித்தார். தம்முடைய உத்தம ஊழியனுக்கு எந்த நன்மையையும் கொடுக்காமல் இருக்கவில்லை.

இன்றைக்கு நீங்கள், "நான் நீதிமான். என் வழிகளில் கபடம் இல்லை. எனக்கான பலன் எங்கே? என் வாழ்வில் நன்மையுண்டாகுமோ?" என்று கேட்கலாம். ஃப்ரண்ட், நீங்கள் உபத்திரவத்தின் வழியாக, சோதனையின் வழியாக கடந்து சென்றாலும் தேவன் உங்களை விடுவிப்பார். ஏற்ற நேரத்தில் பலன் தருவார். தானியேலை ஏற்ற நேரத்தில் உயர்த்தி ஆளுகை செய்யும்படி வைத்ததுபோல, உங்களுக்கும் செய்வார். அவர் உங்களுக்கு சுகம் அளிப்பார்; குழந்தையைக் கொடுப்பார்; வாழ்க்கைத் துணையைக் கொடுப்பார்; நீங்கள் காத்திருக்கிற வேலையை, வியாபாரத்தில் வெற்றியை, பிரச்னையிலிருந்து விடுதலையை கொடுப்பார்; உங்களை உயர்த்திக் கனப்படுத்துவார். உத்தமனுக்கு நன்மையை வழங்காதிரார். ஆகவே, திடன்கொள்ளுங்கள். ஏற்ற காலத்தில் உங்களைக் கனப்படுத்துவார். ஆண்டவரை நம்புங்கள்; அவரை விசுவாசியுங்கள். தொடர்ந்து உத்தமனாய் வாழுங்கள். அவரது பார்வையில் நீதியாய் நடந்திடுங்கள். தேவன் உங்களைக் கனப்படுத்துவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உத்தமமாய் நடக்கிறவனுக்கு நன்மையை வழங்காதிரார் என்ற உம்முடைய வாக்குக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். தானியேலைப்போல உம்முடைய வழிகளில் உத்தமமாயும், உண்மையாயும், பயமின்றியும் நடப்பதற்கு என்னை பெலப்படுத்தும். என் வாழ்க்கை உமக்குப் பிரியமாயிருப்பதாக; என் இருதயம் ஒருபோதும் உம்மை விட்டு விலகாதிருப்பதாக. உம்முடைய வேளையில் எனக்கு பலன் அளிப்பீர் என்று விசுவாசிக்கிறேன். எனக்கு சுகம் அளித்து, என்னை ஆசீர்வதித்து, எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்து, என்னை உயர்த்துவீராக. நீதியாய் நடக்கும் உம் பிள்ளைகளை கனப்படுத்துவதற்காக உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.