அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 1:10) என்று கூறுகிறது. ஆத்துமாவை, குடும்பத்தை, வேலையை, பிள்ளைகளை, ஊழியத்தை அச்சுறுத்தும் ஆபத்துகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். மரண பயம், பிசாசின் தாக்குதல், எதிர்பாராத உபத்திரவங்களும் சேர்ந்துகொள்ளலாம். ஆனால், கர்த்தர் நம்மை விடுவிப்பதாக வாக்குக்கொடுக்கிறார். அவர் நம்மை விடுவித்தார்; இப்போது விடுவிக்கிறார்; திரும்பவும் விடுவிப்பார் என்ற மூன்று முக்கியமான சத்தியங்களை தேவனுடைய வார்த்தை நினைவுப்படுத்துகிறது. ஆகவே, அவர்மேல் நம்பிக்கை வைப்போம்.
முதலாவது, மரணம் என்னும் ஆபத்திலிருந்து நம்மை இரட்சிப்பதற்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். நம் ஜீவனை காப்பதற்காக அவரை நாம் எவ்வளவாய் துதிக்கவேண்டும்! துன்மார்க்கரின் சதி, பொறாமை, பாவத்தின் விளைவு இவற்றால் நாம் அறியாமலே ஆபத்துகளை சந்திக்கலாம். ஆனாலும் நாம் அழிந்துபோகாமல் கர்த்தர் நம்மை மீட்டுக்கொண்டார். அவரது பரிசுத்த நாமத்தை நாம், "இந்த அழிவிலிருந்து என்னை காப்பாற்றியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் ஆண்டவரே," என்று கூறி துதிப்போம்.
இரண்டாவதாக, ஆண்டவர் ஒவ்வொரு தருணத்திலும் தொடர்ந்து நம்மை பாதுகாக்கிறார். ஒருபோதும் குறையாத அவரது கிருபையாலும் இரக்கத்தினாலும் மாத்திரமே நாம் தாங்கப்படுகிறோம். காலைதோறும் அவர் நம்மை பெலப்படுத்தவும் காக்கவும் புதிய இரக்கங்களை அளிக்கிறார். அவரது கிருபைக்காகவும் பாதுகாப்புக்காகவும் நாம் தொடர்ந்து அவரை ஸ்தோத்திரிப்போம்.
மூன்றாவதாக, கர்த்தர் மறுபடியும் நம்மை விடுவிப்பார். இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, அவரை உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம். ஆனாலும், நாம் தெரிந்துகொள்வதைப் பொறுத்து அவர் மீட்பார் என்று நினைத்துக்கொண்டு அலட்சியமாய் வாழக்கூடாது. மாறாக, பரிசுத்தமாக நடக்கவேண்டும்; நேர்மையாய் வாழ வேண்டும்; தேவனை கனம்பண்ணவேண்டும்; அவரது வார்த்தைக்கு உண்மையாய் கீழ்ப்படியவேண்டும். நாம் அவரில் உறுதியாய் இருக்கும்போது, அவர் நம்மை தொடர்ந்து பாதுகாப்பார் என்று நம்பலாம்.
இப்போது, 91ம் சங்கீதத்தின் 2 முதல் 10 வரை கூறப்பட்டுள்ளவற்றை தனிப்பட்ட விசுவாசத்தினால் அறிக்கையிடுவோம். "நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். நீர் என்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பீர். நீர் உம் சிறகுகளாலே என்னை மூடுவீர்; உம் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவேன்; உம்முடைய சத்தியம் எனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் நாம் பயப்படவேண்டாம். நம் பக்கத்தில் ஆயிரம்பேரும், நம் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது நம்மை அணுகாது. நம் கண்களால் மாத்திரம் நாம் அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்போம். நமக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை நாம் தாபரமாகக்கொண்டிருக்கிறோம். ஆகையால் பொல்லாப்பு நமக்கு நேரிடாது, வாதை நம் கூடாரத்தை அணுகாது. இந்த வாக்குத்தத்தத்தங்களை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, விசுவாசித்து அறிக்கை பண்ணுவோம். தகப்பனே, உம் வார்த்தையின்படியே எங்களை பாதுகாப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவே, எங்களை விடுவிப்பதற்காக உமக்கு நன்றி. பரிசுத்தமாகவும் பயபக்தியுடனும் நடப்பதற்கான கிருபையை எங்களுக்கு அருளி, எங்களை பரிபூரணமாக ஆசீர்வதித்தருளும்.
அன்பானவர்களே, நம் போராட்டம், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நடக்கிறது என்று வேதம் கூறுகிறது (எபேசியர் 6:12). தீய வல்லமைகளுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தங்களை நாம் எதிர்கொள்ளலாம்; ஆனால், இயேசு கிறிஸ்து அவற்றின்மேல் சிலுவையில் வெற்றி சிறந்தார். நம் ஜீவனுக்கு ஆபத்தை கொண்டு வர பார்க்கும் இந்த வல்லமைகளினூடாக நம்மை தேவன் தாங்குவார் என்று அவர் வாயிலாக நம்புவோம். ஆகவே, இயேசு என்னும் நாமத்திற்கு மகத்தான வல்லமை உண்டு; ஆண்டவர், தம் பிள்ளைகள்மேல் தம் நாமத்தை வைத்திருக்கிறார். ஆகவே, அவரது பலத்த நாமத்தை நம்பி தைரியமாக இருங்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, எல்லா ஆபத்திலிருந்தும் உம் கிருபையாலும் இரக்கத்தாலும் என்னை பாதுகாத்து விடுவிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். மரண ஆபத்து, மறைவான அச்சுறுத்தல், பொறாமை, துன்மார்க்கரின் ஆலோசனைகள், எல்லா தீய வல்லமைக்கும் என்னை விலக்கி இரட்சிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே என் அடைக்கலமாக, கோட்டையாக, கேடகமாக, என்னை காப்பவராக விளங்குவீராக. என்னையும் என் குடும்பத்தையும் எல்லா ஆபத்திலிருந்தும் விடுவியும்; என் பிள்ளைகளை, வேலையை, ஊழியத்தை, வீட்டை பாதுகாத்தருளும். பரிசுத்தமாகவும் நீதியாகவும் பயபக்தியுடனும் உம் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தும் நடக்க உதவி செய்திடும். எங்கள் விசுவாசத்தை பெலப்படுத்தி, அனுதினமும் உம்மை நம்புவதற்குக் கற்றுக்கொடுத்தருளும். உம் பலத்த செட்டைகளின் கீழாக எங்களை மூடியருளும்; இயேசுவின் நாமத்தை எங்கள்மேல் வைத்து, செழிக்கப்பண்ணவேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


