அன்பானவர்களே, உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு, "தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" (ரோமர் 8:32) என்ற வசனத்தை தியானிப்போம். அவ்வண்ணமே, தேவன் உங்கள்பேரில் கிருபையாயிருப்பதால், உங்களுக்குத் தேவைப்படும் எல்லாவற்றையும் அருளிச்செய்வார். டி.ஜி.எஸ். தினகரன் நினைவு ஜெப கோபுரத்தில் ஞாயிறு ஆராதனை ஒன்றில் ஒரு சகோதரி பகிர்ந்துகொண்ட சாட்சி எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள், ஜெப கோபுரத்துக்கு வந்து திரும்புவதற்கு கொஞ்ச பணமே தன்னிடமிருந்ததாக கூறினார்கள். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர்கள் வந்தபோது, தனக்கு இருக்கும் பிரச்னைகள் நடுவிலும் அந்தக் கூட்டம் மிகுந்த சமாதானத்தை தனக்குக் கொடுத்ததால் தொடப்பட்டார்கள். வாழ்க்கையில் மிகுந்த சிரமத்தின் வழியாக அவர்கள் சென்று கொண்டிருந்தபடியினால், செய்தியைக் கேட்டபோது, நான் ஆண்டவருக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுந்தது. அவர்கள், "என்னிடம் மீதியிருக்கும் பணத்தை ஆண்டவருக்குக் காணிக்கையாக ஜெப கோபுரத்தில் கொடுத்துவிடுகிறேன்," என்று நினைத்தார்கள்.
எப்படியோ, யாரோ வீடு திரும்புவதற்கு அந்த சகோதரிக்கு உதவினார்கள். அதன்பிறகு ஒருவர், கடை ஒன்றை தொடங்குவதற்கு அவர்களுக்கு உதவினார். தன்னுடைய வருமானத்திலிருந்து ஊழியத்தை அவர்கள் தாங்குவதற்கு தொடங்கினார்கள். பத்திரிகை அவர்களுக்குச் சென்றது; ஜெப கோபுரத்துக்கு ஒழுங்காக வந்தார்கள்; ஆண்டவரை நெருங்கினார்கள். அவர்கள் ஜெப கோபுரத்துக்கு வர ஆரம்பித்ததும் அற்புதவிதமாக அவர்கள் வியாபாரம் செழித்தது. ஆண்டவர், அவர்கள் பிள்ளைகளை நன்கு படிக்கவைக்கவும், நல்ல வேலை கிடைக்கவும் உதவினார். நல்ல குடும்பங்களிலிருந்து வாழ்க்கைத் துணை கிடைக்கவும் உதவினார். வியாபாரத்தில் கிடைத்த வருமானத்தில் சிறிய வீட்டையும் வாங்கினார்கள். பின்னர், இரண்டு தளங்களைக் கொண்ட ஒரு வீட்டைக் கட்டவும் தேவன் உதவினார். அவர்கள், "நான் வெறுங்கையாய், திரும்ப வீட்டுக்குச் செல்வதற்குக் கூட பணமில்லாத நிலையில் ஜெப கோபுரத்துக்கு வந்தேன். தேவன் என்னை இந்த அளவுக்கு ஆசீர்வதித்திருக்கிறார்; எனக்குத் தேவையான எல்லாவற்றையும் கிருபையாக தந்திருக்கிறார்," என்று கூறினார்கள்.
இந்த சகோதரியைப்போல, நீங்களும், "என் வாழ்க்கை முடிந்துபோனது. என் கையில் எதுவுமே இல்லை. என் பிள்ளைகளுக்கோ, என் குடும்பத்துக்கோ எதையும் செய்வதற்கு எனக்கு பெலன் இல்லை. நாளைக்கு நான் எப்படி பிழைப்பேன்?" என்று கூறலாம். ஆனால், ஆண்டவர், தேவன் கிருபையாக உங்களுக்கு எல்லாவற்றையும் அருளிச் செய்வேன் என்று கூறுகிறார். அன்பானவர்களே, அவர் பறவைகளையும் பராமரிக்கிறார்; அவற்றைக் காட்டிலும் விலையேறப்பெற்றவர் நீங்கள். வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு அவர் உணவு கொடுக்கிறார். தேவன், உங்கள் தேவைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார். உங்கள்பேரில் அவர் அதிக கரிசனையோடு இருக்கிறார்; தம் ஒரேபேறான குமாரனையே உங்களுக்காகக் கொடுத்திருக்கிறார். ஆகவே, இன்று நீங்கள் அவரை விசுவாசிக்கும்போது, அவர், ஆவிக்குரியவையும், உலகப்பிரகாரமானவையுமான எல்லாவற்றையும் அருளிச்செய்வார். அன்பானவர்களே, சந்தோஷமாயிருங்கள். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. ஆண்டவர்மேலான விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பார். அவரது கிருபைக்காக இன்று அவரை ஸ்தோத்திரிப்போமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் தேவைகளைக் குறித்து நினைப்பதற்கு நீர் கிருபையுள்ளவராயிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உதவியற்ற நிலையையும் வெறுமையையும் உணரும்போது எனக்கானவற்றை அளிப்பவர் நீரே என்பதை நான் நினைவுகூரும்படி செய்யும். உம் சொந்தக்குமாரனையே நீர் எனக்காக அருளியதால், எந்த நன்மையையும் எனக்கு அளிக்காதிருக்கமாட்டீர் என்று விசுவாசிக்கிறேன். எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியாதபோதும், உம்மை நம்புவதற்கு தயவாய் எனக்கு உதவும். என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்து, என்னை வழிநடத்தும். உம் சமாதானம் என்னை நிரப்பி, உம் தயவு என்னை சூழ்ந்துகொள்வதாக. உம் தெய்வீக அருட்கொடையை நான் பெற்றுக்கொள்கிறேன் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


