அன்பானவர்களே, ஆண்டவர் இன்றைக்கு உங்களை நினைத்தருளுகிறார். இன்றைய வாக்குத்தத்தம், "நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்" (நீதிமொழிகள் 10:6) என்று கூறுகிறது. நீதியாய் வாழ பிரயாசப்படும் ஒவ்வொரு மனுஷனையும் மனுஷியையும் அவர் பார்க்கிறார். நீதிமானின் தலையின்மேல் நித்திய ஆசீர்வாதங்கள் உண்டு என்று ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். ஆனால், இந்த ஆசீர்வாதத்தை எந்த நீதிமான் பெற்றுக்கொள்கிறான்? நாம் நியாயஞ்செய்து, இரக்கத்தை சிநேகித்து, மனத்தாழ்மையாய் அவருடன் நடக்கவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார் (மீகா 6:8). இவர்களே நியாயத்தை தேடுகிறவர்கள்; தங்கள் உள்ளத்திலிருந்து இரக்கத்தை காண்பிக்கிறவர்கள்; மற்றவர்களை மன்னிக்கிறவர்கள்; தங்கள் பிள்ளைகளை வழிநடத்துகிறவர்கள்; நீதியில் தங்கள் குடும்பங்களை நடத்துகிறவர்கள்; தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாயிருக்கிறவர்கள்.

இப்படி நாம் வாழும்போது, கர்த்தர் நம் தலையின்மேல் நீதியின் கிரீடத்தை வைக்கிறார். பவுல் சொல்லியவிதமாக அவன் நல்ல போராட்டத்தைப் போராடினான்; ஓட்டத்தை முடித்தான்; விசுவாசத்தைக் காத்துக்கொண்டான்; நீதியின் கிரீடம் அவனுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர், அவர் தரிசனத்தை விரும்புகிற யாவருக்கும் அதைக் கொடுக்கிறார் (2 தீமோத்தேயு 4:7,8). இரவும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற தெரிந்துகொள்ளப்பட்ட யாவருக்கும் நியாயம் செய்வதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். அவர் பொறுமையாயிருந்தாலும், நிச்சயமாகவே சீக்கிரத்தில் நியாயஞ்செய்வார். நீங்கள் அநியாயத்தை, பொய்யான குற்றச்சாட்டுகளை, துரோகத்தை, பொய்ச் சாட்சிகளை, பொறாமையை அனுபவித்தால், நேர்மையற்றவிதமாக நடத்தப்பட்டால் மனந்தளர்ந்துபோகாதிருங்கள். கர்த்தர், உங்கள் வாழ்வில் நியாயத்தையும் நீதியையும் நிலைநிறுத்துவார். அவர் கவலையை நீக்குவார்; உங்கள் காத்திருக்குதலுக்கு முடிவு உண்டாக்குவார்; உங்கள் ஆசீர்வாதங்களை திரும்ப தருவார். வேலை செய்யுமிடத்தில், படிப்பில், சமுதாயத்தில், ஊழியத்தில், ஸ்தாபனத்தில் - வாழ்க்கையின் எல்லா பகுதியிலும் கர்த்தர் நீதியை ஸ்திரப்படுத்துவார். உரிய பலனை உங்களுக்குத் தருவார். உங்களுக்கு விரோதமாக எழும்பும் எல்லா பொறாமையின் ஆவியும் தோற்கடிக்கப்படும்; உங்கள் பிள்ளைகள் எல்லா தீமையின் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவார்கள். அநியாயத்தின், வெட்கத்தின் கிரீடங்களுக்குப் பதிலாக நீதியின் கிரீடங்கள் சூட்டப்படும்.

நீதியின் கிரீடம் தரும் ஆசீர்வாதங்கள் எவை? வேதம், கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற நீங்கள் பாக்கியவான். உங்கள் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆஸ்தியும் ஐசுவரியமும் உங்கள் வீட்டிலிருக்கும்; உங்கள் நீதி என்றைக்கும் நிற்கும். செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; நீங்கள் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவர். இரங்கிக் கடன்கொடுத்து, உங்கள் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற நீங்கள் பாக்கியவான் என்று கூறுகிறது (சங்கீதம் 112:1-5).

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீதியில் நடக்கவும், நியாயத்தைச் செய்யவும், இரக்கத்தை சிநேகிக்கவும், உமக்கு முன்பாக தாழ்மையாயிருக்கவும் எனக்கு உதவும். என் தலையின்மேல் நீதியின் கிரீடத்தை வைத்திடும். எல்லா அநியாயத்தையும், பொய்யான குற்றச்சாட்டுகளையும், பொறாமையையும், துக்கத்தையும் என் வாழ்க்கையை விட்டு அகற்றும். என் குடும்பத்தில், வேலை செய்யுமிடத்தில், படிப்பில், ஊழியத்தில் நியாயத்தை நிலைப்படுத்தும். உம் வெளிச்சம் இருளில் பிரகாசிக்கட்டும். என் பிள்ளைகளை ஆசீர்வதித்து அவர்கள் சந்ததி பூமியில் பெலத்திருக்கப்பண்ணும். எங்கள் வீடுகளை ஐசுவரியத்தாலும், சமாதானத்தாலும், மனதுருக்கத்தாலும், நன்மையினாலும் நிரப்பிடும். காத்திருக்குதலின் காலத்தை முடிவடையச் செய்து, நாங்கள் இழந்த எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.