அன்பானவர்களே, இன்றைக்கு, "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" (யோசுவா 1:5) என்ற வாக்குத்தத்தத்தை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். ஒருவனும் உங்களுக்கு எதிராய் நிற்க இயலாது என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார். தாம் ஒருபோதும் உங்களை விட்டு விலகுவதில்லை; உங்களைக் கைவிடுவதுமில்லை என்று அவர் நிச்சயமாய் கூறுகிறார். அவர் உங்களைப் பாதுகாப்பார்; கண்ணோக்குவார்; உங்கள் தலையை உயர்த்துவார். ஆகவே, பயப்படாமல் தைரியமாயிருங்கள்.
முதலாவது, அவர் உங்களுக்கு ஞானத்தை அளிக்கிறார் (அப்போஸ்தலர் 6:10). விசுவாசத்தால் நிறைந்தவனாயிருந்த ஸ்தேவானின் சம்பவத்தை வேதம் காட்டுகிறது. அவனை விரோதித்தவர்களால், பரிசுத்த ஆவியால் பேசிய அவனது ஞானத்தை எதிர்க்க இயலவில்லை. அவர்களால் அவன் அறிவித்த சத்தியத்தை எதிர்த்து நிற்கவோ, அவனை மேற்கொள்ளவோ ஒருபோதும் முடியவில்லை.
இரண்டாவதாக, உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். உங்களுக்கு விரோதமாக ஆயுதங்கள் உருவாக்கப்படுவதை நீங்கள் காணலாம். திடன் கொள்ளுங்கள்! "உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்" (ஏசாயா 54:17) என்று வேதம் கூறுகிறது. இன்று இந்த சத்தியத்தில் நீங்கள் நிற்கலாம். மக்கள், உங்களுக்கு விரோதமாக எல்லா ஆயுதங்களையும் ஏவலாம். பொய்ச் சாட்சிகள் உங்களுக்கு விரோதமாக எழும்பலாம்; சிலர் உங்களுக்குத் துரோகம் பண்ணி, முதுகில் குத்தலாம். உங்கள் கடின உழைப்பை, தொழில் ரீதியான பங்களிப்பை தவறாய் காட்டலாம்; உண்மையை புரட்டலாம்; அவர்கள் செய்கைகளினால் கொடூரமான பின்விளைவுகளை நீங்கள் அனுபவிக்கலாம். உங்கள் குடும்பத்தை, பிள்ளைகளை பிரிக்கலாம்; உங்கள் வீட்டில் தேவையற்ற சண்டைகளை உண்டாக்கலாம். ஒரு பிரச்னைக்கு பிறகு இன்னொரு பிரச்னை வந்து மீண்டும் மீண்டும் இழப்பை ஏற்படுத்தலாம். உங்களுக்கு உரிய சொத்து, உங்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கலாம்; வரவேண்டிய பணம் தடுக்கப்பட்டிருக்கலாம். அடிப்படையற்ற வழக்குகளை உங்கள்மேல் சிலர் பதிவு செய்திருக்கலாம். குறிப்பாக, விவாகரத்து வழக்குத் தொடுத்து, உங்கள் வாழ்வை அழிக்கும்படிக்கு பொய்யான சாட்சிகளைக் கொடுக்கலாம். பல ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ள இயலாமல், அல்லது வேதனையான உறவிலிருந்து விடுபட முடியாமல், வஞ்சக குணமுள்ள தந்திரமான மக்களால் பாடுபட்டுக்கொண்டிருக்கலாம். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் ஆயுதம் வாய்க்காதேபோம் என்ற கர்த்தரின் வாக்குத்தத்தத்தை நினைவுகூருவோம். நியாயத்தில் உங்களுக்கு விரோதமாக எழும்பும் எல்லா நாவையும் நீங்கள் குற்றப்படுத்துவீர்கள். இதுவே கர்த்தருடைய ஊழியர்களின் சுதந்தரமும் அவரிடமிருந்து கிடைக்கும் நீதியுமாயிருக்கிறது.
மூன்றாவதாக, தேவன், எல்லா தீங்கையும் நன்மையாக மாற்றுவார். கர்த்தர், "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்," என்று நினைவுப்படுத்துகிறார் (ஆதியாகமம் 50:20). நீங்கள் விரோதத்தை எதிர்கொண்டாலும், தேவன் பெரிய நோக்கத்துடன் அதன் பின்னணியில் செயல்படுகிறார் என்பதற்கு இந்த வசனம் வல்லமையான நினைவுறுத்தல் ஆகும். யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்குத் தீமை செய்ய நினைத்தார்கள்; ஆனால், தேவன் அவை அனைத்தையும் நன்மையாக முடியப்பண்ணினார். கர்த்தர், யோசேப்பை ராஜாவைப்போன்று உயர்ந்த பொறுப்புக்கு உயர்த்தினார்; அதனால் அவனால் அநேக மக்களை காத்துக்கொள்ள முடிந்தது. கர்த்தர் அதே கிருபையை உங்களுக்குத் தருவார். தேவன்மேல் அன்புகூருகிறவர்களுக்கும், அவருடைய சித்தத்தின்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களுக்கும் சகலமும் நன்மையாக முடியும் என்று வேதம் கூறுகிறது (ரோமர் 8:28). துன்மார்க்கரால் அல்லது பிசாசால் உங்களுக்கு விரோதமாக தீமை திட்டமிடப்பட்டிருக்கலாம். ஆனால், கர்த்தர் எல்லாமும் உங்கள் நன்மைக்கேதுவாகவே நடக்கப்பண்ணுவார். இன்றே இயேசுவின் நாமத்தினால் இந்த ஆசீர்வாதம் உங்கள்மேல் இறங்குவதாக. எல்லா சூழ்நிலையும் நன்மைக்கானதாய் மாறுவதாக. கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதித்து நியாயத்தை நிலைப்படுத்துவாராக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, ஒருபோதும் என்னை விட்டு விலகமாட்டேன் என்றும், கைவிடமாட்டேன் என்றும் வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா சதியாலோசனை, பொய்யான குற்றச்சாட்டு, துரோகம், விரோதம் இவற்றுக்கு என்னை விலக்கிக் காப்பீராக. ஸ்தேவானை நிரப்பியதுபோல என்னையும் உம் தெய்வீக ஞானத்தாலும் பரிசுத்த ஆவியின் வல்லமையாலும் நிரப்பிடும். எனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகட்டும்; எல்லா உபத்திரவத்திலும் எனக்கு நியாயமும் விடுதலையும் அளிப்பீராக. யோசேப்புக்குச் செய்த வண்ணமே தீய நோக்கம் எல்லாம் நன்மையாக முடியப் பண்ணுவீராக. என்னை கனப்படுத்தும்; உம் நீதியை என் வாழ்வில் ஸ்தாபித்து என் தலையை உயர்த்திடும். என் குடும்பம் உம் பாதுகாப்பை, சமாதானத்தை, ஆசீர்வாதத்தை அனுபவிப்பதாக என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


