அன்பானவர்களே, இன்றைக்கு, "தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்" (சங்கீதம் 111:5) என்ற வசனத்தைத் தியானிப்போம். உங்கள் குடும்பத்தின் தேவைகளை எண்ணி திகைத்துப்போகிறீர்களா? "எப்படி எல்லாவற்றுக்கும் பணம் கட்டப் போகிறேன்? எப்படி செலவுகளைச் செய்யப்போகிறேன்? எப்படி என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளப்போகிறேன்?" என்று எண்ணுகிறீர்களா? நீங்கள், பெரிய பொருளாதார பாரத்தைச் சுமந்துகொண்டிக்கலாம்; எப்படி வாடகை செலுத்தப் போகிறேன்; பிள்ளைகளுக்கு வேண்டியவற்றை எப்படி கொடுக்கப்போகிறேன்; மருத்துவ செலவுகளை எப்படி சமாளிக்கப்போகிறேன்; அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும்? என்றெல்லாம் திகைத்துக்கொண்டிருக்கலாம். இந்த வசனம் தேவனே உங்களுக்கு எல்லாவற்றையும் அருளிச் செய்வார் என்று நிச்சயமாய் கூறுகிறது. வேதத்தில், "என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்" (மத்தேயு 6:31,32) என்று வாசிக்கிறோம். கர்த்தர் உங்கள்மேல் கரிசனையாயிருக்கிறார். நீங்கள் கடந்துசெல்லும் பாதையை அவர் பார்க்கிறார்; அவர் உங்களைப் பொறுப்பெடுத்துக்கொள்வார்.

சென்னையைச் சேர்ந்த சகோதரி லதாவின் குடும்பத்தில் இப்படியே நடந்தது. தேவன் தன் குடும்பத்தை எப்படி பொறுப்பெடுத்துக்கொண்டார் என்று அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். அவர்கள் அதிக வறுமையில் இருந்தார்கள். அவர்கள் தந்தை கொடிய நோயுடன் போராடிக்கொண்டிருந்தார். குடும்பம் பணக்கஷ்டத்தில் சிக்கியிருந்தது. சாப்பாடு கூட கிடைக்காத நிலையில் அவர்கள் அம்மா மிகவும் மனவேதனையடைந்தார்கள். அவர்கள் குடும்பத்தின் தேவை பெரிதாயிருந்தது; பிழைப்பதற்கே தவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உறவினர், இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை அறிமுகப்படுத்தினார்கள். Dr. பால் தினகரன் செய்தியளித்து மக்களுக்காக ஜெபித்த ஒரு கூட்டத்தில் அவர்கள் கலந்துகொண்டார்கள். அங்கு வழங்கப்பட்ட செய்தியால் சகோதரி லதா மிகவும் ஊக்கம் பெற்றார்கள்; ஜெப வேளையில் இணைந்து ஜெபித்தார்கள். அந்தக் கூட்டத்தின் வாயிலாக, அவர்கள் குடும்பத்தில் புது நம்பிக்கை பிறந்தது. தேவன், அவர்கள் வாழ்க்கையை பல வழிகளில் மறுரூபப்படுத்த ஆரம்பித்தார். அவர்கள் சகோதரருக்கு வேலை கிடைத்தது. தினசரி செலவுக்கு பணம் வர ஆரம்பித்தது. சகோதரியால் படிப்பை முடிக்க முடிந்தது. அவர்களுக்கும் அவர்கள் சகோதரர்களுக்கும் நல்ல வேலைகள் கிடைத்தன. வேலையில் சிரமம் வரும்போதெல்லாம் அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை தொடர்பு கொண்டு ஜெபிக்கும்படி வேண்டுவார்கள். ஜெபிக்கும்போதெல்லாம் அவற்றுக்குப் பதில் பெற்று, விடுதலையை அனுபவித்தார்கள். தொடர்ந்து, தேவன் சொந்த தொழில் தொடங்கும்படியான வாசலை திறந்தார். தொழிலை நடத்துவதற்கு ஓர் இடத்தையும் அளித்தார்; அவர்கள் முயற்சிகளை ஆசீர்வதிக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கடந்து, அவர்கள் தொழில் அதிகமாய் வளர்ந்தது; அவர்கள் இரண்டு கிளைகளையும் இரண்டு அலுவலகங்களையும் நிறுவினர். அவர்கள் பொருளாதார நிலையும் முன்னேற ஆரம்பித்தது. 2018ம் ஆண்டு, அவர்கள் சொந்தமாக கார் வாங்கினார்கள். அண்ணாநகரில் வீட்டையும் கட்டினார்கள். தேவன் அவர்கள் குடும்பத்தை முழுவதும் ஆசீர்வதித்து வறுமையிலிருந்து தூக்கியெடுத்தார். அவர்கள் தேவைகளையெல்லாம் அருளிச் செய்து, ஆசீர்வாதத்தை பன்மடங்காகப் பெருகப்பண்ணினார். இப்போது அவர்கள் ஆசீர்வாதத்தை அனுபவிக்கிறார்கள். ஒன்றுமில்லாமல் ஆரம்பித்த அவர்களை தேவன் பூரணமாய் பெருகப் பண்ணியுள்ளார்.

அன்பானவர்களே, ஒருவேளை இன்று நீங்களும் இதேபோன்ற சூழ்நிலையை கடந்து சென்று கொண்டிருக்கலாம். "நான் போராடிக்கொண்டிருக்கிறேன். என்னிடம் ஒன்றுமேயில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை," என்று கூறலாம். இன்று உங்கள் கவலைகளையெல்லாம் ஆண்டவரிடம் கொடுத்துவிடுங்கள். அவர் பொறுப்பெடுத்துக்கொள்வார். இந்தச் சாட்சி தேவனின் தயவையும் உண்மையையும் நினைவுப்படுத்துவதாக உள்ளது. உங்களிடம் இருப்பவற்றைக்கொண்டு ஆண்டவரை நம்பும்போது, அவர் உங்கள்பேரில் கரிசனை கொள்வார்; உங்கள் தேவைகளை அருளிச்செய்வார். உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்; ஆகவே, சந்தோஷமாயிருங்கள். சகோதரி லதாவின் குடும்பத்தை நினைத்தருளிய தேவன்தாமே உங்களை மறக்கமாட்டார்; அவரே உங்கள் குடும்பத்தை பொறுப்பெடுத்துக்கொள்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பிள்ளைகள் யாவர்மேலும் நீர் அக்கறையாயிருக்கிறீர் என்பதை உம் வசனத்தின் மூலம் நினைவுப்படுத்தியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்று அவர்கள் தேவைகள் யாவற்றை அருளிச்செய்திடும். அவர்கள் எவற்றில் குறைவுபட்டிருக்கிறார்களோ, தயவாய் உம் ஐசுவரியத்திலிருந்து அவற்றைச் சந்தித்திடும். அவர்களுக்குப் பொருளாதார ஆசீர்வாதங்களை அருளுவதோடு, வேலைவாய்ப்புக்கான வாசலையும் திறந்தருளும்; அவர்கள் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்திடும். அவர்கள் சம்பாத்தியத்தை பெருகப்பண்ணி, உம்மை கனப்படுத்தும் அவர்களை ஆசீர்வதித்திடும். அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் நினைத்தருளி, பொருளாதார போராட்டங்களிலிருந்து தூக்கியெடுத்து, ஒன்றிலும் குறைவுபடாமல் காத்தருளும். அவர்கள் பிள்ளைகளின் கல்விக்கான, மருத்துவ தேவைகளுக்கான, அன்றாட செலவுக்கான யாவற்றையும் அருளிச் செய்திடும். ஒவ்வொரு குடும்பமும் உம் நன்மையையும் உண்மையையும் அனுபவித்திடட்டும். உம் ஆசீர்வாதங்களை இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்கிறோம், ஆமென்.