எனக்கு அருமையான தேவ பிள்ளையே, "நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன்" (ஆதியாகமம் 17:2) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். ஆபிரகாம் நீண்டகாலமாக பிள்ளையில்லாதிருந்தான். ஆனாலும், அவன் ஜெபித்து, தேவன் தன்னை பூரணமாய் ஆசீர்வதிப்பார் என்று விசுவாசத்தோடு பற்றிக்கொண்டிருந்தான். "நான் உன்னை அநேக ஜாதிகளுக்கு தகப்பனாக்குவேன்," என்று தேவன், ஆபிரகாமிடம் கூறியதாக வேதத்தில் வாசிக்கிறோம் (ரோமர் 4:17,18). ஆபிரகாமுக்கு குழந்தையில்லாதிருந்தாலும், தேவன் அவனை பல தேசங்களுக்கு தகப்பனாக்கியிருப்பதாக கூறினார். மரித்தவற்றுக்கு ஜீவனை அளிக்கும், இல்லாதவற்றை இருக்கிறவைபோல அழைக்கும் தேவனை ஆபிரகாம் விசுவாசித்தான். பிள்ளையில்லாதவனாயிருந்த அவனை தேவன், அநேக தேசங்களுக்கு தகப்பனாக்கினார். எவ்வளவு பெரிய தேவன் நமக்கு இருக்கிறார்!

தேவன் உரைத்தவண்ணமே அவன் சந்ததி இருந்தது. நாம், வேதத்தை வாசிக்கும்போது ஆபிரகாமின் சந்ததி ஆசீர்வதிக்கப்பட்டதைப் பற்றிய விவரங்களை கண்டுகொள்கிறோம் (மத்தேயு 1:1-17). "ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு" என்று ஆரம்பிக்கிறது (மத்தேயு 1:1). மேலும், ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினான்கு தலைமுறைகளும், தாவீது முதல் பாபிலோனிய சிறையிருப்பு வரைக்கும் பதினான்கு தலைமுறைகளும், பாபிலோனிய சிறையிருப்பு முதல் கிறிஸ்து வரை பதினான்கு தலைமுறைகளும் என்று வாசிக்கிறோம் (மத்தேயு 1:17). எவ்வளவு சிலாக்கியம்! இயேசு கிறிஸ்து, ஆபிரகாமின் சந்ததியின் மூலமாக வந்தார். தொடக்கத்தில் ஆபிரகாம் எதுவுமே இல்லாதவனாயிருந்தான்; ஆனால், அவன் தேவனை விசுவாசித்து, அவரது வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டான். ஆகவேதான் தேவன் அவனை பரிபூரணமாய் ஆசீர்வதித்து, அநேக சந்ததிகளைக் கொடுத்தார்.

அவ்வண்ணமே, எனக்கு அருமையான பிள்ளைகளே, "எனக்கு குழந்தை இல்லை", "எனக்கு ஞானம் இல்லை", "எனக்கு ஆசீர்வாதம் இல்லை" என்றெல்லாம் கூறாதீர்கள். ஆபிரகாமைப்போல விசுவாசித்திடுங்கள். தேவனையும் அவரது வாக்குத்தத்தங்களையும் பற்றிக்கொள்ளுங்கள். அல்லேலூயா! இப்போதே நாம் ஜெபித்து, தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
எங்கள் அருமையான பரம தகப்பனே, உம் பரிபூரண ஆசீர்வாதங்களை விசுவாசித்து உம் சமுகத்தில் வந்திருக்கிறோம். ஆபிரகாம் உம்மை விசுவாசித்து, உம் வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்டதுபோல, நாங்களும் உம்மை நம்பி, உம் வார்த்தையைப் பற்றிக்கொள்வதற்கு உதவும். குழந்தையில்லாததால், நல்ல வேலையில்லாததால், ஞானமில்லாததால், ஆசீர்வாதங்களில்லாததால் உம்மை நோக்கிக் கூப்பிடும் உம் பிள்ளைகளைப் பார்த்தருளும். ஆண்டவரே, அவர்களை உம்மண்டை கிட்டிச்சேர்த்திடும். அவர்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்தி, ஆபிரகாமைப்போல அவர்களும் உம்மைப் பற்றிக்கொள்ள உதவிடும். ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்தருளி, அவர்கள் வாழ்வில் உம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும். உம் சித்தத்தின்படியே அவர்களை பூரணமாக ஆசீர்வதித்திடவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.