எனக்கு அருமையான தேவ பிள்ளை, இன்றைய வாக்குத்தத்தம், "நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு" (2 நாளாகமம் 15:7) என்று கூறுகிறது. இந்த அதிகாரத்தில் தேவனுடைய ஆவியானவர் அசரியாவின்மேல் இறங்கியதாக வாசிக்கிறோம். அவன் ஆசா ராஜாவிடம் சென்று, "நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்" என்று கூறுகிறான். "நீங்கள் கர்த்தரோடு இருந்தால் அவர் உங்களோடிருப்பார்" என்பதையே நாம் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டும். மற்றுமொரு முக்கியமான வாக்குத்தத்தம், "நீங்கள் அவரைத் தேடினால், அவர் உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டுவிட்டால், அவரும் உங்களை விட்டுவிடுவார்," என்பதாகும்.

அந்த வேத பகுதியில், கர்த்தருக்கு முன்பாக ஜனங்கள் மகா சத்தத்தோடு, கெம்பீரத்தோடு, எக்காளங்களையும் பூரிகைகளையும் ஊதி ஆணையிட்டார்கள். முழு யூதாவும், தங்கள் முழு உள்ளத்தோடும், ஆத்துமாவோடும் கர்த்தரை தேடியதால் சந்தோஷப்பட்டார்கள். அவர் அவர்களுக்கு எல்லா பக்கமும் இளைப்பாறுதலை கொடுத்தார் (2 நாளாகமம் 15:14,15) என்று வாசிக்கிறோம்.

அருமையானவர்களே, படித்துக்கொண்டிருக்கிறவர்கள், கடினமாய் உழைத்துக் கொண்டிருக்கிறவர்கள், தங்களிடம் ஒன்றுமில்லை என்று எண்ணுகிறவர்கள் அனைவரும் அதே வண்ணமாக கர்த்தரை தேடுவோம். "தகப்பனே, நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம்," என்று கூறுவோம். படிக்கிறவர்கள், "ஆண்டவரே,உம் பெலன், ஞானம், அறிவு எனக்குத் தேவை," என்று கூறுங்கள். உங்களுக்கு தேவையானவை அனைத்தையும் ஆண்டவர் அருளிச் செய்வார். குடும்பத்தில் இக்கட்டுகள் இருப்போர், ஆசீர்வாத குறைவென்று நினைப்போர், "ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன். உம்மிடம் வந்திருக்கிறேன். தயவு செய்து எனக்கு தேவையான ஆசீர்வாதத்தை தந்தருளும்," என்று கேளுங்கள். ஆண்டவர் நிச்சயமாகவே உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார்.

ஆசா ராஜாவும் அவன் ஜனங்களும் கர்த்தரை முழு மனதுடன் தேடியபோது, ஆசீர்வதிக்கப்பட்டதுபோல, நீங்களும் அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். இப்போது, ஜெபித்து தேவனின் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
எங்கள் அன்பு பரம தகப்பனே, நீரே எங்கள் ஒரே நம்பிக்கையாயிருக்கிறபடியால் உம் பாதத்திற்கு வருகிறோம். உம்மையே விசுவாசித்து, எங்கள் வழிகளையெல்லாம் உம் கரங்களில் ஒப்படைக்கிறோம். ஆண்டவரே, படித்துக்கொண்டிருக்கிற அனைவரையும் பெலப்படுத்தி, ஞானத்தையும், அறிவையும், புத்தியையும் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்தருளும். முழு மனதுடன் உம்மைப் பற்றிக்கொள்ள அவர்களுக்கு உதவிடும். உம்மை நோக்கிக் கூப்பிடும் ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசீர்வதித்து, அவர்கள் தேவைகளையெல்லாம் அருளிச்செய்யும். உமக்கு உண்மையாயிருக்கவும், எங்கள் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடவும் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தருளும். எங்களை ஜெபத்திற்குச் செவிகொடுத்து, எங்கள் படிப்பின்மேலும் குடும்பத்தின்மேலும் உம் பரிபூரணஆசீர்வாதத்தை பொழிவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா மகிமையையும் கனத்தையும் உமக்கே செலுத்தி இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.