அன்பானவர்களே, இன்று, "கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்" (நீதிமொழிகள் 14:26) என்ற வசனத்தைத் தியானிப்போம். தேவனை நம் கோட்டையாகக் கொள்வது எவ்வளவு பாக்கியம்! எதுவும் நிச்சயமில்லாத உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், தேவனுக்குள் நமக்கு திடநம்பிக்கை உண்டு. நாம் தேவனுக்குப் பயப்படும்போது, அவர் நமக்கு நம்பிக்கை தருகிறார்; நமக்குப் பிறகு நம் பிள்ளைகளுக்கும் அதே பாதுகாப்பு கிடைக்கும். வேதம், "உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்" என்று கூறுகிறது (நீதிமொழிகள் 10:9).
வேதம், "நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்," என்றும் கூறுகிறது (நீதிமொழிகள் 20:7). உத்தமமாய் நடக்கிறவர்களை தேவன் நேசிக்கிறார்; அந்த ஆசீர்வாதம் தலைமுறை தலைமுறையாய் தொடரும். வேதத்தில், "கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது" என்றும் எழுதப்பட்டுள்ளது (சங்கீதம் 103:17). நாம் ஆண்டவரை விசுவாசித்தால் நாமும் நம் வீட்டாரும் இரட்சிக்கப்படுவோம் என்றும் வேதம் கூறுகிறது. என் கணவரின் பெற்றோரும் என் பெற்றோரும் உத்தமமாய், நீதியாய் நடந்தார்கள். ஆகவேதான் நாங்கள் இன்று ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்; எங்களுக்குப் பிறகு எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்.
நீண்ட காலத்துக்கு முன்பு நடந்த வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என் கணவரும் அவர் தங்கையும் காரில் போய்க்கொண்டிருந்தனராம். என் கணவர் காரை ஓட்டிக்கொண்டிருந்தார். அன்று அமாவாசை. எங்கும் இருளாயிருந்தது. சாலையும் கறுப்பு. சாலையின் நடுவே ஒளிரும் எந்தக் குறியீடும் இல்லை. என் கணவர், காரை வேகமாக செலுத்திக்கொண்டிருந்தார். தார் டிரம்கள் சாலையில் வைக்கப்பட்டிருந்ததை அவர் பார்க்கவில்லை. அவையும் கறுப்பாக இருந்தன. அந்த டிரம்களின் முன்னர் சில போலீஸ் அதிகாரிகள் நின்றிருந்தனர். விரைவாக வந்துகொண்டிருந்த என் கணவர், போலீஸ் அதிகாரிகள்மேல் மோத இருந்தார். திடுக்கிட்டு திடீரென பிரேக்கை அழுத்தினார். போலீஸ் அதிகாரிகள், ஜன்னலை தட்டினர். என் கணவர், ஜன்னல் கண்ணாடியை திறந்து அந்த அதிகாரியை பார்த்தார். "உங்கள் அப்பா ஜெபிக்கிறவர். ஆனால், நீங்களோ எங்கள்மேல் மோதி கொல்லப் பார்க்கிறீர்கள்!" என்று அந்த அதிகாரி கூறினார். உடனே, அருகே அமர்ந்திருந்த என் கணவரின் தங்கை, "என்ன இது? நீங்கள்தான் சாலையைப் போட்டிருக்கிறீர்கள். சாலையில் எந்தக் குறியீடும் இல்லை. சாலையின் ஓரத்தில் விளக்கும் இல்லை. பிறகு எப்படி என் அண்ணனால் பாதுகாப்பாக ஓட்ட முடியும்?" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு புன்னகைத்த அந்த அதிகாரி, "உங்கள் அப்பாவால் இப்போது உங்களைப் போகவிடுகிறோம்," என்று கூறிவிட்டு, இனிமேல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினாராம். என் கணவர், "எங்கள் அப்பாவினால்தான் அன்று தப்பினோம்," என்று இப்போதும் இந்தக் கதையைக் கூறுவார். இதை வாசிப்பதற்கு உங்களுக்கு வேடிக்கையாக தோன்றலாம்; ஆனால், உண்மை அதுதான். என் கணவரின் தகப்பனார் ஜெபிக்கிறவராக இருந்ததால் அன்று என் கணவரும் அவரது தங்கையும் தப்பினார்கள். அதுபோன்றே, கர்த்தர் உங்களுக்கு அரணான கோட்டையாக இருப்பதோடு உங்கள் பிள்ளைகளுக்கும் அடைக்கலமாயிருப்பார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்குப் பயப்படவும், என் வாழ்நாளெல்லாம் உத்தமமாயும் நீதியாயும் நடக்கவும் உதவி செய்யும். எனக்கு அரணிப்பான கோட்டையாயிருந்து, என்னையும் என் குடும்பத்தினரையும் எல்லா ஆபத்திலிருந்தும் பாதுகாப்பீராக. உம் அன்பும் நீதியும் என் பிள்ளைகள்மேலும் பேரப்பிள்ளைகள்மேலும் இருப்பதாக. என் கணவரையும் அவர் தங்கையையும் அவர்கள் தந்தையின் ஜெபத்தினால் பாதுகாத்ததுபோல, பங்காளர்களின் ஜெபமும் நீதியான வாழ்க்கையும் அவர்கள் பிள்ளைகளுக்கு பாக்கியமாகவும், அடைக்கலமாகவும் மாறுவதாக. எங்கள் வீட்டாரையும் பாதுகாத்து, உம் வழிகளில் நடத்துவீராக. எங்கள் வாழ்க்கை உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வருவதோடு, உம் ஆசீர்வாதமும் தலைமுறை தலைமுறையாக தொடரவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


