அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" (புலம்பல் 3:22) என்ற இன்றைய வாக்குத்தத்த வசனம், தேவனுடைய மாறாத இரக்கத்தையும் கிருபையையும் நினைப்பூட்டுகிறது. இது, ஒவ்வொரு விசுவாசிக்கும் எவ்வளவு ஆறுதலான சத்தியம்!

தேவனுடைய இதே குணாதிசயத்தை வேதாகமம் முழுக்க பார்க்கிறோம். தண்டனையின் காலத்திலும் இக்கட்டின்போதும் தேவன் நமக்கு இரக்கம் காட்டுகிறார் (2 சாமுவேல் 24:14; 1 நாளாகமம் 21:13). தேவன், இரக்கமும் கிருபையுமுள்ளவர் என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது (நெகேமியா 9:31). அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு அவர் இரக்கம் தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது (லூக்கா 1:50). தேவையின்போது உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு கிருபாசனத்தண்டை சேரும்படி வேதம் நம்மை ஊக்கப்படுத்துகிறது (எபிரெயர் 4:16).

அன்பானவர்களே, இன்றைய பொழுதைக் குறித்துக் கவலைப்படுகிறீர்களா? இயேசுவிடம் வாருங்கள். தனியாக உங்கள் பாரங்களைச் சுமந்து வரவேண்டாம். ஜெபித்து, அவருடைய கிருபையைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவரது இரக்கம் இன்றும் உங்களைப் பின்தொடரும். அவருடைய மகத்தான அன்பினால், பாவத்தில் மரித்திருந்த நம்மை கிறிஸ்துவுடனே பிழைத்திருக்கும்படி செய்தார் என்றும், அவரது கிருபையினால் இரட்சிக்கப்பட்டோம் என்று வேதம் நினைவுப்படுத்துகிறது (எபேசியர் 2:4,5). ஆகவே, இன்று நம் இருதயங்களை ஆராய்ந்து பார்ப்போம். நாம் மெய்யாகவே இயேசுவின் கிருபையைச் சார்ந்து அவரது பாதத்தில் அமர்ந்திருக்கிறோமா அல்லது பயத்தாலும் கலக்கத்தாலும் நிறைந்திருக்கிறோமா? இப்போதும் உங்கள் இருதயத்தை ஆண்டவரிடம் திருப்புங்கள். அவரைப் பற்றிக்கொள்ளுங்கள்; கிருபையின்மேல் கிருபை பெற்றிடுங்கள். இன்று உங்களுக்கு உதவி செய்ய அவர் ஆயத்தமாயிருக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, மாறாத உம் இரக்கத்திற்காகவும் கிருபைக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். அனுதினமும் உம் சிங்காசனத்தண்டை தைரியமாக வருவதற்கு உதவி செய்திடும். என் இருதயத்தை விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால் கழுவி, என் வாழ்வை புதுப்பியும். எல்லா சூழ்நிலையிலும் என்னை உம் கிருபையால் நிரப்பி, பெலப்படுத்தும். உம் இரக்கம் என் வாழ்க்கையை மூடி, உம்முடைய பரிபூரண சித்தத்தில் என்னை நடத்துவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.