அன்பானவர்களே, இன்றைக்கு ஆண்டவரின் ஆசீர்வாதத்தை தேடி நீங்கள் வந்திருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். காலைதோறும் அவரது இரக்கங்கள் புதிதாயிருக்கின்றன. இன்றைக்கு அவரது புதிய இரக்கத்தைக் குறித்து அறிந்துகொண்டு அதைப் பெற்றுக்கொள்ளபோகிறோம். "உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்" (ஏசாயா 43:1) என்று கர்த்தர் கூறுகிறார். ஆம், நீங்கள் அவருடையவர்கள். அவர் உங்களைப் பேர்சொல்லி அழைத்திருக்கிறார். ஆகவே, குற்றவுணர்வு அவரை விட்டு உங்களைப் பிரிக்காதிருக்கட்டும். "நான் எவ்வளோ தவறு செய்துவிட்டேன்," என்று கூறாதிருங்கள். உங்கள் பாவம் பெரிதென்ற பொய்யை நம்பாதிருங்கள். நீங்கள் தமக்குச் சொந்தமானவர் என்று ஆண்டவர் கூறுகிறார். அவர் உங்களை அன்போடும் கிருபையோடும் பேர்சொல்லி அழைக்கிறார்.

இந்த வல்லமையான வசனம், அவர் நம்மை மீட்டுக்கொண்டார் என்றும், தம்முடையவர்கள் என்று அழைப்பதாகவும் கூறுகிறது. நாம் எப்பொழுதும் தேவனுக்குச் சொந்தமானவர்களாக இருப்பதற்காக அவரை ஸ்தோத்திரிப்போம். அது, அவருடைய கிருபை; அவருடைய அன்பு. "முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்" (எபேசியர் 2:13) என்று பவுல் நினைவுபடுத்துகிறார். என்ன ஒரு வாக்குத்தத்தம்! இயேசுவின் இரத்தத்தின் மூலம் நீங்கள் கிட்டிச்சேர்க்கப்பட்டீர்கள். பவுல் இதை அறிந்திருந்தார். அவர் ஆண்டவரின் ஜனங்களை துன்புறுத்தினார்; பாடுபடுத்தினார்; அவரை விசுவாசித்தவர்களை துரத்தினார். ஆனாலும் தேவனுடைய இரக்கத்திற்கு அவர் அப்பாற்பட்டவராயிருக்கவில்லை.

பவுல், இவை எல்லாவற்றையும் செய்திருந்தபோதிலும், ஆண்டவர் அவரை அழைத்து, புதிய பெயரைக் கொடுத்து, "பவுல், நீ என்னுடையவன்," என்று கூறினார். தம்முடைய இரத்தத்தினாலே ஆண்டவர் பவுலை கிட்டிச்சேர்த்தார். பவுல், புதிய மனுஷனாக மாறினார். அந்த தருணத்திலிருந்து தன் முழு உள்ளத்தோடும் பவுல், இயேசுவுக்காக ஓடினார். அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. இன்றைக்கு அதே மறுரூபமாகுதலை ஆண்டவர் உங்களுக்கு அளிக்கிறார். அன்பானவர்களே, எந்தக் குற்றமும் பெரிதானதல்ல. பழைய காலம் இருளானதல்ல. ஆண்டவர் உங்களை அழைக்கிறார். அவர் உங்களைப் பேர்சொல்லி அழைத்து மீட்கிறார்; உங்களை புதிய மனுஷனாக்குகிறார். இன்றைக்கு அவரிடம் உங்களை ஒப்படைப்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை பெயர் சொல்லி அழைத்து, உம்முடையவன்(ள்) என்று சொந்தம் கொண்டாடியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னை தகுதியற்றவன்(ள்) என்று நான் உணர்ந்தபோது, அன்பினிமித்தம் என்னிடம் வந்து, இயேசுவின் இரத்தத்தால் உமக்குக் கிட்டிச்சேர்த்தீர். என்னுடைய குற்றத்தை தயவாய் கழுவி, அவமானத்தின் எல்லா குரல்களையும் அமைதலாக்கி, நான் உண்மையிலேயே உமக்குச் சொந்தமானவன்(ள்) என்று நம்ப வைத்திடும். பவுலை மறுரூபப்படுத்தியதுபோல என்னையும் மறுரூபமாக்கி புதிய மனுஷனாக்கும் / மனுஷியாக்கும். உம்முடைய நோக்கத்தினால் என் வாழ்க்கையை நிரப்பும். இன்று என் பழைய வாழ்க்கையை, பயங்களை, தோல்விகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன். புதிய இரக்கங்களை பெற்றுக்கொள்கிறேன். என்னை ஒருபோதும் விட்டுவிடாதிருக்கிறதற்காக நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன், ஆமென்.