அன்பானவர்களே, "விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்" (1 கொரிந்தியர் 16:13) என்று வேதம் கூறுகிறது. ஆம், விசுவாசத்தில் உறுதியாயிருக்கும்படி உங்களைக் காத்துக்கொள்வதற்கான கிருபையை தருவதற்கு தேவன் விரும்புகிறார். நீங்கள் தைரியமாயிருக்கலாம்; திடமாயிருக்கலாம். ஆனால், எதைக் காத்துக்கொள்ளவேண்டும்? உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளவேண்டும். "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்" (நீதிமொழிகள் 4:23) என்று வேதம் கூறுகிறது. உங்கள் உள்ளமே வாழ்க்கை முழுவதையும் கட்டுப்படுத்துகிறது. இயேசுவையும் அவரது சீஷர்களையும், கை கழுவாமல் சாப்பிடுவதையும் சடங்காச்சாரங்களை கடைப்பிடிக்காதது குறித்தும் பரிசேயர்கள் குறைகூறியபோது, இயேசு, "உங்கள் கரங்கள் அசுத்தத்தைக் கொண்டு வரவில்லை. உங்கள் இருதயமே எல்லா பாவத்தையும் அசுத்தத்தையும் உங்கள் வாழ்க்கையில் கொண்டு வருகிறது," என்று கூறினார். இருதயத்திலிருந்தே தவறான எண்ணங்களும், பொல்லாத சிந்தனைகளும், அவதூறுகளும், இச்சையும், பொல்லாங்கும் புறப்பட்டு வரும். ஆகவேதான் இயேசு, "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20) என்று கூறுகிறார். ஆண்டவர், "என் பிள்ளையே, உன் உள்ளத்தை எனக்குத் தா. அதை என் வீடாக மாற்ற விரும்புகிறேன்," என்று கூறுகிறார். இயேசு, இருதயத்தினுள் இருக்கும்படி அதைக் காத்துக்கொள்ளுங்கள். கர்த்தர் தம் நினைவுகள் உயர்ந்தவை என்று கூறுவதால், உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய நினைவுகளே எல்லாவற்றையும் ஆரம்பிக்கட்டும். அவர் உங்களுக்குள் வரும்போது, அவருடைய உயர்ந்த எண்ணங்கள், உங்களை உயர்ஸ்தலங்களுக்கு உயர்த்தி, அவருடன் உன்னதங்களில் நடக்கும்படி செய்யும்.
இரண்டாவது, உங்கள் இருதயத்தை பொருளாசையிலிருந்து காத்துக்கொள்ளுங்கள். இயேசு, "அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" (லூக்கா 12:15) என்று கூறுகிறார். வாழ்க்கை, அதிகமான ஆஸ்திகளால் அல்ல; தேவனுடைய ஆசீர்வாதங்களும், சுபாவமும் நிறைந்ததாய் இருக்கவேண்டும். அவையே உண்மையான ஐசுவரியங்களாகும். வேதம், "நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே" என்றும் கூறுகிறது (எபிரெயர் 13:5). நாம் அடிக்கடி அந்த வாக்குத்தத்தத்தை உரிமையாக்குகிறோம். ஆனால், நம் ஆஸ்திகளை, நமக்கான பாதுகாப்பாக பார்க்கிறபடியால், தேவனுக்கு நம் வாழ்வில் இடமில்லாமற்போகிறது. இன்று, மனந்திரும்புங்கள். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், சந்ததிக்கும் கூடுதலாக வழங்கப்படும்.
மூன்றாவதாக, பதறிப்பேசாதபடி உங்கள் உதடுகளைக் காத்துக்கொள்ளுங்கள். வேதம், "தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்" (நீதிமொழிகள் 13:3) என்று கூறுகிறது. உங்கள் வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் தியானங்களும் தேவனுக்கு பிரியமானவையாக இருக்கவேண்டும்; அப்போது அவை மனுஷருக்கும் ஏற்புடையவையாய் இருக்கும். வெளிப்படும் ஞானத்தின் வார்த்தைகள், குடும்பத்திலும், தேசத்திலும், தேவனுக்கு முன்பாகவும் கனத்தைத் தரும். யாக்கோபின் நிருபம், "நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது" என்று கூறுகிறது. பொல்லாத ஆவி பிடித்திருந்த சிறுபெண் ஒருத்திக்காக ஜெபம் பண்ணும்படி ஒரு பிரசங்கியாரிடம் கொண்டு வந்திருந்தார்கள். பிரசங்கியார் அந்த ஆவியை வெளியே வரும்படி கூறியபோது, அந்தப் பெண்ணின் அம்மா, "பிசாசே" என்று அவளை சபித்ததாகவும், ஆகவே தன்னைத்தான் அழைத்ததாக எண்ணி புகுந்ததாகவும் சொல்லியது. நாம், குறிப்பாக குழந்தைகளைக் குறித்துப்பேசும்போது கவனமாக இருப்போம். உங்கள் பிள்ளையை, தேவனுடைய ஈவு, உங்கள் கணவரை தேவனுடைய சாயல் என்று அழைத்திடுங்கள். தேவன், உங்கள் வார்த்தைகளை நிறைவேறப்பண்ணுவார். நீங்கள் எவற்றைக் கூறுகிறீர்களோ அவற்றைப் பெற்றுக்கொள்வீர்கள்.
நான்காவதாக, அவிசுவாசத்திலிருந்து இருதயத்தைக் காத்துக்கொள்ளவேண்டும். வேதம், "விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்" (1 கொரிந்தியர் 16:13) என்று கூறுகிறது. மோசே, யோசுவாவிடம், "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை" என்று கூறினான் (யோசுவா 1:5). ஒருபோதும் பயத்தையும், சந்தேகத்தையும், அவிசுவாசத்தையும் அனுமதிக்காதீர்கள். அவை உங்களை அழித்துவிடும்; ஆண்டவர் உங்களோடு இருக்கமாட்டார். "விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்". யோசுவா, விசுவாசித்தான். ஆசாரியர்களை யோர்தானுக்குள் காலெடுத்து வைக்கும்படி கூறினான். ஆறு பிரிந்தது. இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் நுழைந்தார்கள்.
ஐந்தாவதாக, பிசாசின் வஞ்சகத்திலிருந்து இருதயத்தைக் காத்துக்கொள்ளவேண்டும். "சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே" (2 கொரிந்தியர் 2:11). சாத்தான், இயேசுவை சோதித்தான். ஆனால், இயேசு, தேவனுடைய வார்த்தையால் அவனை ஜெயித்தார். சாத்தான் போய்விட்டான் (மத்தேயு 4:1-4). பிறகு, பரிசுத்த ஆவியானவர் வல்லமையோடும் அபிஷேகத்தோடும் வந்தார். தேவதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். அதே ஆசீர்வாதம், நீங்கள் தேவனுடைய சித்தத்தை செய்யும்போது உங்கள்மேலும் வரும். ஒன்றும் உங்களுக்கு விரோதமாக நிற்க இயலாது. தேவ சித்தத்தை செய்கிறவர்கள் என்றைக்கும் வாழ்வார்கள். ஆம், உங்கள் ஊழியம், உங்கள் குடும்பம், உங்கள் பெயர், உங்கள் உடைமை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.
இறுதியாக, கள்ளத் தீர்க்கதரிசிகளிடமிருந்து இருதயத்தைக் காத்துக்கொள்ளவேண்டும். வேதம், "கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்" (மத்தேயு 7:15) என்றும், "நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்" என்றும் கூறுகிறது (1 யோவான் 4:1). மெய்யான தீர்க்கதரிசனம் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கும். இயேசு கிறிஸ்துவை இரட்சகர் என்று அறிக்கையிடாதவர்கள், சாத்தானையும், பொல்லாத மக்களையும் மகிமைப்படுத்துகிறவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளாயிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துவாராக. உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்; விசுவாசத்தில் உறுதியாய் நில்லுங்கள்; நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருப்பீர்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, இருதயத்தைக் காத்துக்கொள்ளும் கிருபையை எனக்குத் தந்தருளும். எனக்குள் இயேசு முழுவதுமாய் வாசம்பண்ணட்டும். எல்லா பொருளாசையையும், அவிசுவாசத்தையும், பதற்றமான வார்த்தைகளையும் என்னை விட்டு அகற்றும். உமக்குள்ளான விசுவாசத்தில் என்னை உறுதியாக்கி, தைரியப்படுத்தும். எல்லா வஞ்சகத்திலிருந்தும் கள்ளத்தீர்க்கதரிசிகளிடமிருந்தும் என்னை பாதுகாத்துக்கொள்ளும். என் வார்த்தைகளும் வாழ்க்கையும் உமக்கு கனம் சேர்க்கட்டும். அனுதினமும் உம்மில் ஸ்திரமாக நிற்கவும், முற்றும் ஜெயங்கொண்டவனா(ளா)க விளங்கவும் உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


