எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (மத்தேயு 1:21) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, இயேசு, நம் இரட்சகராக இந்த உலகிற்கு வந்தார். இந்த உலகத்தின் வேண்டாத எல்லா காரியங்களில் இருந்தும் அவர் நம்மை மீட்கிறார். அனுதினமும் நாம் பல உபத்திரவங்களை சந்திக்கிறோம். மோசேயும் இஸ்ரவேலரும் பல பாடுகளை கடந்து செல்லும்போது கர்த்தர் உதவினார். "நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவிசெய்தார். கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்" (யாத்திராகமம் 15:2; சங்கீதம் 118:13,14) என்று வேதத்தில் வாசிக்கிறோம். மெய்யாகவே அவர் நம் இரட்சகராயிருக்கிறார். நமது எல்லா உபத்திரவங்களிலுமிருந்தும், பாவ வாழ்க்கையிலிருந்தும் நம்மை அவரால் இரட்சிக்க முடியும்.
நீங்கள் எப்போதும் அவரை இரட்சகராக வைத்துக்கொள்ளவேண்டும். எல்லா போராட்டங்கள் மற்றும் உபத்திரவங்களிலுமிருந்து நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காக அவரையே நோக்கிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். ஆண்டவர், சீமோனிடம், "ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்" (லூக்கா 5:4) என்று கூறுகிறார். சீமோன், "ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்" என்று கூறுகிறான். அடுத்த வசனத்தில் ஆண்டவர் ஓர் அற்புதத்தைச் செய்தார். அவர்கள் அப்படிச் செய்தபோது, வலை கிழிந்துபோகத்தக்கதாக ஏராளமான மீன்களைப் பிடித்தனர். ஆண்டவரை உங்கள் இரட்சகராகக் கொண்டிருக்கும்போது, சகலவித ஆசீர்வாதங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.
தேவனுடைய வார்த்தையை நீங்கள் வாசித்து அவரது சத்தத்துக்குக் கீழ்ப்படியும்போது எல்லாவித உபத்திரவங்களினின்றும் நீங்கள் காக்கப்படுவீர்கள். ஆம், இயேசு நம் இரட்சகர். அவரை எப்போதும் நம்மோடு வைத்திருக்கவேண்டும். நாம் அப்படிச் செய்யும்போது அவரது ஆசீர்வாதங்கள் நம்மைச் சூழ்ந்துகொள்ளும். இப்போதும், உங்களை வாழ்க்கையை மறுபடியும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து, எப்போதும் உங்களோடிருக்கும்படி அவரை அழைத்திடுங்கள். அவர் உங்களோடு இருப்பதோடு மாத்திரமல்ல; பரிபூரண ஆசீர்வாதத்திற்குள் உங்களை நடத்தவும் செய்வார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் அருமையான இரட்சகரே, என்னை பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்காக இந்த உலகத்திற்கு வந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே என் பெலன், என்னை காக்கிறவர், என் இரட்சிப்புமானவர். உம் பலத்த கரத்தினால் என்னை தூக்கியெடுத்து, உம் வசனத்தை நம்பவும், எப்போதும் உம் குரலுக்குக் கீழ்ப்படியவும் போதித்தீர். மிகுதியான மீன்களைப் பிடிக்கும்படி சீமோனை ஆசீர்வதித்ததுபோல, என் கையின் பிரயாசங்களையும் ஆசீர்வதித்தருளும். அனுதினமும் உம் சமுகத்தில் நடக்கவும், உம் அன்புக்குச் சாட்சியாக வாழவும் எனக்கு உதவும். ஆண்டவரே, என் வாழ்க்கையை மறுபடியும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். தயவுசெய்து என் வழிகாட்டியாய், என் அடைக்கலமாய், என் நித்திய சந்தோஷமாய் இருப்பீராக என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


