அன்பானவர்களே, உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். ஆசீர்வாதமான இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, "அவர் (இயேசு) பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்" (லூக்கா 1:32) என்ற ஆச்சரியமான வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், இயேசு பெரியவராயிருக்கிறார். இயேசு கர்த்தர். அவர் ராஜாதி ராஜா. அவரே எல்லோரிலும் மிகவும் பெரியவராயிருக்கிறார். அவர் சகலவற்றிலும் போதுமானவராக, அனைத்து வல்லமையும் கொண்டவராக இருக்கிறார். ஆகவேதான் இயேசு, "வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" (மத்தேயு 28:18) என்று கூறியிருக்கிறார். கர்த்தர் அவரை பூமியிலுள்ள ராஜாக்களிலெல்லாம் பெரியவராக்கியுள்ளார். "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது" என்று வேதம் கூறுகிறது (வெளிப்படுத்தல் 19:16). நாம் இதை ஏற்றுக்கொண்டு அவரை மிகப்பெரியவராக தொழுதுகொள்ளவேண்டும். யாரையும் அவருடன் ஒப்பிட முடியாது.
இந்த உலகில் மக்கள் மகா அலெக்சாண்டர், மகா சார்லஸ் அல்லது மகா ஃப்ரடெரிக் என்று அழைக்கலாம். ஆனால், வாழ்ந்தவர்கள் அனைவரிலும் இயேசுவே பெரியவராயிருக்கிறார். வேதம், "உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்" என்று கூறுகிறது. நீங்கள் எப்போதும் இதை ஏற்றுக்கொண்டு மகா பெரியவரான தேவனை துதித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆகவேதான், யோவான்ஸ்நானன், "அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்," என்று கூறினான். தேவன் நம்மை எவ்வளவு அதிகமாக ஆசீர்வதிக்கிறாரோ, அவ்வளவு அதிகமாய், "ஆண்டவரே, நீர் பெரியவராகவேண்டும்; நான் சிறுக வேண்டும்," என்று கூறவேண்டும். நாம் நம்மையே உயர்த்தி, "நானே பெரியவன்," என்று கூற முடியாது. இயேசு, "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது," என்று கூறுகிறார். இந்த பெரிய இயேசுவினால்தான் நீங்கள் இந்த உலகத்தில் இருக்கிறீர்கள். இந்த பெரிய தேவனை தன் கருவில் சுமப்பதற்கு மரியாள் எவ்வளவு சிலாக்கியம் பெற்றிருக்கவேண்டும்!
அப்படியே, அன்பானவர்களே, இந்த பெரிய இயேசுவை சுமப்பதற்கான சிலாக்கியத்தை தேவன் உங்களுக்கு அளித்துள்ளார். இந்த பெரிய இயேசுவை உங்கள் உள்ளத்திற்குள் வரவேற்கும்போது, அவர் உங்கள் வாழ்க்கையில் சிறந்ததும் ஆச்சரியமானதுமான கிரியைகளைச் செய்வார். உங்களிடமிருந்து திருடப்பட்டவை திரும்ப அளிக்கப்படும்; உங்கள் வாழ்க்கையில் சிறந்த காரியங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, கிறிஸ்துமஸின் மகா பெரிய ஈவாக வந்தததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் மகா பெரியவரும், கர்த்தரும், ராஜாதி ராஜாவாக ஆளுகிறவருமாயிருக்கிறீர். எல்லாருக்கும் மேலான மகா பெரிய ஆண்டவராக, நான் உம்மை தொழுதுகொள்கிறேன். என் உள்ளத்தில் வாசம்பண்ணுவதை நீர் தெரிந்துகொண்டதற்காக நன்றி. என் வாழ்வில் உம் மகத்தான வல்லமை, பலத்தவற்றை செய்வதாக. நீர் மாத்திரமே செய்யக்கூடிய அற்புதங்களை என் வாழ்வில் நடப்பிப்பீராக. இழந்தவற்றையெல்லாம் திரும்ப தந்து, நான் எண்ணக்கூடாத அளவில் என்னை ஆசீர்வதிப்பீராக. உம் பேரிலான நன்றியறிதலாலும் சந்தோஷத்தாலும் என் உள்ளத்தை நிரப்பும். நித்தியமாய் என் வாழ்வில் ஆட்சி செய்ய என் மகத்தான ராஜாவாக இயேசுவாகிய உம்மை வரவேற்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


