அன்பானவர்களே, ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறார்; அவர் தம்முடைய வல்லமையான சமுகத்தால் நம்மை நிரப்பவும், ஜீவனுக்கேதுவான தம் வார்த்தைகளை நம்மோடு பேசவும் விருப்பமுள்ளவராயிருக்கிறார். இன்று, "உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்" (1 தெசலோனிக்கேயர் 5:24) என்ற வசனத்தை தியானிப்போம். ஆண்டவரே, நம்மை அழைத்திருக்கிறார். அவர் எதற்காக உங்களை அழைத்தாரோ, அதை செய்து முடிப்பார். இன்று நீங்கள் உங்கள் அழைப்பில் தடுமாறிக்கொண்டிருக்கலாம். நீங்கள், "இந்த மிகப்பெரிய பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றப்போகிறேன்? இந்த சவால்களை எப்படி மேற்கொள்ளுவேன்? என் தேவைகள் எங்கே சந்திக்கப்படும்? ஆண்டவரே, எனக்கு பெலன் அருளும்," என்று கூறலாம். அன்பானவர்களே, கவலைப்படாதிருங்கள். உங்களை அழைத்த ஆண்டவர் உண்மையுள்ளவர். அவர் தம் நோக்கத்தை உங்கள் வாழ்க்கையின் வாயிலாக நிச்சயமாக நிறைவேற்றுவார்.
இந்த அழைப்பை நிறைவேற்ற ஆண்டவர் மூன்று காரியங்களைச் செய்வார். முதலாவது, அதை நிறைவேற்றுவதற்கான பெலனை உங்களுக்கு அளிப்பார். உங்கள் தகுதியைப் பெலப்படுத்துவார்; தம் ஞானத்தையும், ஆவிக்குரிய வரங்களையும் அளிப்பார். பேதுருவை தேவ அபிஷேகம் நிறைத்து, முற்றிலும் மறுரூபமாக்கியது; அதே வல்லமை உங்கள் வாயிலாகவும் செயல்படும். வேதம், பேதுருவின் நிழல், தெருக்களில் மக்கள்மீது பட்டு அவர்களும் சுகம் பெற்றார்கள் என்று கூறுகிறது. உங்கள் வாயிலாகவும் தேவ வல்லமை பாயும். கூடாததாக காணப்படுகிறவற்றை இயற்கைக்கு அப்பாற்பட்ட தம் கிருபையினால் கூடும்படி அவர் செய்வார்.
இரண்டாவதாக, உங்கள் அழைப்பை நிறைவேற்றுவதற்கு தேவன் உங்கள் எல்லையெங்கும், குறிப்பாக விரோதிகள் உங்களுக்கு எதிராக எழும்பினாலும் பெருத்த சமாதானத்தை அருளுவார். எலிசா எழுந்து பலத்த சீரிய இராணுவம் பட்டணத்தைச் சூழ்ந்திருப்பதைக் கண்டபோது, பயப்படாதிருந்தான். மாறாக, கர்த்தரின் பரலோக சேனை தங்களைச் சூழ்ந்துகொண்டு பாதுகாக்கிறது என்பதை அறிந்து சமாதானமாயிருந்தான். அவ்வண்ணமே, தேவன் உங்கள் உள்ளத்தையும் சமாதானத்தினால் நிரப்புவார். எதிர்ப்பு எவ்வளவு பெரிதாக காணப்பட்டாலும், அவரது சமுகம், உங்களுக்குள் இருக்கும் எல்லா பயத்தையும் கலக்கத்தையும் அமைதிப்படுத்தும்.
நிறைவாக, உங்கள் அழைப்புக்கு வேண்டிய எல்லாவற்றையும் ஆண்டவர் அருளிச்செய்வார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு வனாந்தரத்தில் தண்ணீரும் உணவும் அருளி, பயணத்தின்போது அவர்கள் வஸ்திரங்கள் பழையதாய் போகாமல் காத்துக்கொண்டதுபோல, அவர் தொடர்ந்து உங்களுக்கும் அதிசயவிதமாக கொடுப்பார். அருளுகிறவரே உங்களுடன் இருக்கிறார். நீங்கள் கேட்பதற்கு முன்னரே அவர் எல்லா தேவைகளையும் அறிந்திருக்கிறார்; தம் மகிமையின் ஐசுவரியத்திலிருந்து உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார்.
இன்று நாம் வல்லமை, சமாதானம், அருட்கொடை என்ற மூன்று ஆசீர்வாதங்களையும் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்வோம். உங்களை அழைத்த ஆண்டவர், உங்கள் வாழ்க்கையில் தம் கிரியையை நிறைவுசெய்ய உண்மையுள்ளவராயிருக்கிறார். அற்புதங்கள் இப்போதும் நடக்கின்றன. நீங்கள் கேட்பவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்; உங்கள் அழைப்பை நிறைவேற்ற உண்மையாயிருப்பவரை துதித்திடுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பரிபூரண நோக்கத்திற்காக என்னை அழைத்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் அழைப்பையும் எதிர்காலத்தையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். இயற்கைக்கு அப்பாற்பட்ட உம் வல்லமையால் என்னை நிறைத்து, உம் ஆவியின் பெலத்தில் நடக்க எனக்கு உதவும். நீர் என்னிடம் ஒப்படைத்தவற்றை செய்து முடிப்பதற்கான ஞானத்தை, திறனை, கிருபையை அருளிச்செய்யும். உம் சமாதானம் என் இருதயத்தை ஆண்டு கொள்ளட்டும்; எல்லா பயத்தையும், கலக்கத்தையும், அதைரியத்தையும் அகற்றும். சவால்கள் எழும்பும்போது, நீர் எப்போதும் என்னோடே இருக்கிறீர் என்பதை நம்புவதற்கு உதவும். என் தேவைகள் எல்லாவற்றையும் பரிபூரணமாக அருளிச்செய்து, ஒருவரும் பூட்டக்கூடாத வாசல்களை திறந்திடும். என் வாழ்க்கையில் அற்புதங்கள் பின்தொடரட்டும்; என் வாயிலாக உம் நாமம் மகிமைப்படட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


