அன்பானவர்களே, இயேசு, உங்களுக்கு சுகத்தையும் மன்னிப்பையும் அருள விரும்புகிறார். ஆம், இரண்டுக்குமான கிரயத்தை அவர் ஏற்கனவே செலுத்திவிட்டார். இயேசு, மாம்சத்தில் வந்த தேவன். நம் வாழ்வில் சுகமளிக்கும் வல்லமையையும், மன்னிப்பின் வல்லமையையும் அருளுவதற்காகவே அவர் மனித ரூபம் எடுத்தார். ஆகவே, நீங்கள் மன்னிக்கப்படுவதற்கும் குணமாவதற்குமான நம்பிக்கை இயேசுவில் உண்டு. இன்றே இயேசுவிடம் வாருங்கள். வேதம், "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;...அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5) என்று கூறுகிறது. ஒவ்வொரு முறை நாம் பாவம் செய்யும்போதும், அது நம் வாழ்வை குத்துகிறது. பாவம், நம் ஆத்துமாவை, மனதை, நம் சரீரத்தையும் கூட காயப்படுத்துகிறது. தொடர்ந்து அழிவின் பழக்கங்களில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் சரீர சுகத்திலும் உணர்விலும் வேதனையான பின்விளைவுகளை அனுபவிக்கிறார்கள். பாவமான வழிகளில் வாழ்கிறவர்கள் தங்கள் உள்ளத்தில் குற்றவுணர்ச்சியை, பயத்தை, இளைப்பாறுதலின்மையை சுமந்து திரிகிறார்கள். பாவம் எப்போதும் குத்துகிறதாயிருக்கிறது.

தடை செய்யப்பட்ட பழத்தை ஏவாள் புசித்தாள்; பாவம் அவள் வாழ்க்கையைக் குத்தியது (ஆதியாகமம் 3:6). பிறகு அவள் அதை ஆதாமுக்குக் கொடுத்தாள். அவனும் தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனான். அதனால், அவர்கள் தேவ மகிமையை இழந்தார்கள். தாவீது, பத்சேபாள்மேல் இச்சை கொண்டான். அவள் கணவனை கொல்லுவதற்கு ஏற்பாடு செய்தான் (2 சாமுவேல் 11ம் அதிகாரம்). பாவம் குடும்பத்தை ஆழமாய்க் குத்தியது. பிறகு, தாவீது, தன்னை சுத்திகரிக்கும்படியும், பரிசுத்த ஆவியை தன்னிடத்திலிருந்து எடுத்துவிடாமல் இருக்கும்படியும் கர்த்தரிடம் கேட்டான் (சங்கீதம் 51). தேவன் அவன் வேண்டுதலுக்குச் செவிகொடுத்து, அவனை மன்னித்தார். ஆனால், பாவத்தின் பின்விளைவு தொடர்ந்து அவன் குடும்பத்தைப் பாதித்தது. அவன் பிள்ளைகளுக்குள் ஒன்றன்பின் ஒன்றாக துன்பமான காரியங்கள் நடந்தன.  

அன்பானவர்களே, இது உங்கள் குடும்பத்தில் நடக்கவே கூடாது. பாவம் நம்மை குத்துகிறது; ஆனால், நாம் மன்னிக்கப்படும்படியாக இயேசு குத்தப்பட்டார். நம் பாவங்களை நாம் அறிக்கையிட்டு அவர் நாமத்தில் மன்னிப்பைக் கேட்கும்போது, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவமும் நீங்க நம்மைச் சுத்திகரிக்கிறது. இயேசு குத்தப்பட்டதால், நாம் நம்முடைய மீறுதல்களிலிருந்து விடுதலையடைகிறோம்; மறுரூபமாய் வாழ்வதற்கான வல்லமையை பெற்றுக்கொள்கிறோம்.

இரண்டாவதாக, நம் அக்கிரமங்களுக்காக இயேசு நொறுக்கப்பட்டார். தேவ கிருபை, இஸ்ரவேலர்களிடமிருந்து விலகும்படியாக அவர்களை பாவத்துக்குள்ளாக வழிநடத்திய பிலேயாமைக் குறித்து வேதம் கூறுகிறது (வெளிப்படுத்தல் 2:14; 2 பேதுரு 2:15). பிலேயாமே நசுக்கப்பட்டுப் போனான். அதேவண்ணமாக, மற்றவர்கள் பாவத்திற்குள், இருளுக்குள் விழுவதற்கு காரணமாயிருப்போரின் வாழ்வுக்குள் ஆவிக்குரிய ஒடுக்குதல் வரும். சிலுவையில் இயேசு நமக்காக நொறுக்கப்பட்டார். இருள் அவரை சூழ்ந்துகொண்டது. அவர், "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கூப்பிட்டார். நாம் இருளின் எல்லா வல்லமையிலிருந்தும் விடுவிக்கப்படும்படி அவர் பாவத்தின், வேறு பிரித்தலின் பாரத்தினால் நொறுக்கப்படுவதை சகித்தார். மற்றவர்கள் இடறுவதற்கு அல்லது இருளடைய நீங்கள் காரணமானால், பாவம் உங்கள் வாழ்க்கைக்குள் நுழைந்திடும். இன்றே இயேசுவிடம் வாருங்கள்; அவரது மன்னிப்பை கேளுங்கள். அவர் உங்களை விடுவிப்பார்; தம் வெளிச்சமும் சமாதானமும் உங்கள் வாழ்வை நிரப்பும்படி செய்வார்.

மூன்றாவதாக, இயேசு நம் வியாதிகளுக்காக காயப்படுத்தப்பட்டார். அசுத்த ஆவியால் அலைக்கழிக்கப்பட்ட தன் மகனுக்காக ஒரு தகப்பன் இயேசுவிடம் வந்தார். அது அவனை தீயிலும் தண்ணீரிலும் தள்ளுவதாகக் கூறி இயேசுவின் இரக்கத்திற்காக வேண்டினார். இயேசு, அந்த ஆவியை கடிந்துகொண்டார்; பையன் குணமானான் (மத்தேயு 17:14,15). தம் ஊழியம் முழுவதும் இயேசு, வியாதிப்பட்டோரை குணமாக்கினார்; ஒடுக்கப்பட்டோரை விடுவித்தார். அவர் நம் நோய்களை சிலுவையில் தம்மேல் ஏற்றுக்கொண்டார்.
இன்றும் நாம் இயேசுவின் நாமத்தைக் கூப்பிடும்போது, அவர் தம் ஆணி பாய்ந்த கரங்களை நம்மை நோக்கி நீட்டுவார். அவர் நம் பாவங்களை மன்னிக்கிறார்; நம் மீறுதல்களை அகற்றுகிறார்; நம் நோய்களைக் குணமாக்குகிறார். எந்தப் பாரங்களை நீங்கள் சுமந்துகொண்டிருந்தாலும் இன்று இயேசுவிடம் கொண்டு வாருங்கள். அவர் மன்னிப்பதற்கு, சீர்ப்படுத்துவதற்கு, விடுவிப்பதற்கு, உங்களை முற்றிலும் குணமாக்குவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். இன்று அவரது ஆசீர்வாதத்தை பெறுவீர்களாக; வாழ்க்கையில் அவரது மறுரூபமாக்கும் வல்லமையை அனுபவிப்பீர்களாக.

ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, மன்னிப்பையும் சுகத்தையும் சீர்ப்படுத்தலையும் தேடி தாழ்மையுள்ள இருதயத்தோடு உம்மிடம் வருகிறேன். என் மீறுதல்களுக்காகக் காயப்பட்டதற்காக, என் அக்கிரமங்களுக்காக நொறுக்கப்பட்டதற்காக, நான் சுகம்பெற குத்தப்பட்டதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால் எல்லா பாவமும் நீங்க என்னை சுத்திகரித்து, நீதியில் நடப்பதற்கான பெலனை அருளிச்செய்யும். எல்லா பாரத்தையும், குற்றத்தையும், பயத்தையும், இருளையும் என் வாழ்விலிருந்து அகற்றுவீராக. உம் குணமாக்கும் கரம் என் சரீரத்தை, மனதை, ஆத்துமாவை தொடுவதாக. அசுத்த ஆவியின் வல்லமையிலிருந்து என்னை விடுவித்து, உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடும். உம்மை கனப்படுத்தும்படி வாழ்வதற்கும், உம் நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வரும்படியும் எனக்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.