அன்பானவர்களே, தேவனாகிய கர்த்தர், "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" (யாத்திராகமம் 15:26) என்று கூறுகிறார். எல்லா நோய்களையும் குணமாக்குவதற்கு தேவனுக்கு வல்லமை இருக்கிறது; மனமும் உள்ளது. இதைத்தான் வேதம், "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி..." (சங்கீதம் 103:2,3) என்று கூறுகிறது. ஆம், தேவனாகிய கர்த்தர், உங்கள் பாவங்களை மன்னிக்கவும், உங்கள் நோய்களைக் குணமாக்கவும் மனமுள்ளவராயிருக்கிறார். மனிதனுக்கு இன்னொரு மனிதனின் பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரம் கிடையாது. அவர்களுக்கு விரோதமானவற்றை செய்தவர்களை மன்னிக்கலாம்; ஆனால், அந்த மனிதரிலிருந்து பாவத்தின் வேரை பிடுங்க முடியாது. தேவன் மன்னிக்கும்போது, அத்தனை பாவங்களும் மன்னிக்கப்படுவதோடு பாவ சுபாவமும் அந்த மனிதரிடமிருந்து அகற்றப்படும். தேவன் நோயைக் குணமாக்கும்போது, அந்த நோய்க்கான காரணமும் தேவ வல்லமையால் அகற்றப்படும். தேவனே குணமாக்குகிறவர்; தேவனே மன்னிக்கிறவர். ஆகவேதான் நாம் தேவனிடம் ஜெபிக்கிறோம். பெதஸ்தாவில் ஜெப மையம் வைத்திருக்கிறோம். மே மாதத்தில், விடுமுறை நாட்களில் நீங்கள் பெதஸ்தாவுக்கு வந்து, மன்னிக்கும்படியும், நோயை குணமாக்கும்படியும், வேண்டியவற்றை அருளிச்செய்யும்படியும் தேவனிடம் ஜெபிக்கலாம். வேதம், "உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்" என்று கூறுகிறது (யாக்கோபு 5:14,15). ஆண்டவர் இயேசுதாமே, "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன...வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்," (மாற்கு 16:17, 18)என்று கூறியிருக்கிறார்.

ஆம், இயேசு, நீங்களும் நானும் நோயுற்றோர்மேல் கைகளை வைத்து தமது நாமத்தினால், அவர்கள் சுகம் பெறவும், ஆரோக்கியமடையவும் ஜெபிக்கவேண்டும் என்று விரும்புகிறார். ஆம், இது தேவனின் கட்டளை; இதையே நாங்கள் மக்களுக்குச் செய்கிறோம். மனுஷனால் இதை நம்ப முடியாமல் இருக்கலாம். இயேசுவின் பிள்ளையானால் மாத்திரமே இதை அவர்களால் நம்ப முடியும். மற்றபடி அவர்களால் நம்ப முடியாது. இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவும் முடியாது. இயேசுவின் பிள்ளைகளாகிய நமக்கு எவ்வளவு சிலாக்கியம் இருக்கிறது! இதையேதான் வேதமும் சொல்கிறது. ஆகவே, நாம் தேவனுடைய வார்த்தையை, இயேசுவைப் பற்றிகொள்வோம்; நாம் மக்கள்மேல் கைகளை வைக்கும்போது இயேசு வந்து, தம் கைகளை வைத்து அவர்களைக் குணப்படுத்துவார் என்று விசுவாசிப்போம். அவரே அற்புதத்தைச் செய்கிறவர். மக்களின் பாவங்களால் வியாதிகள் வருகிறபடியால் நோய்களைக் குணமாக்க தேவன் மனதுள்ளவராயிருக்கிறார். வியாதிப்பட்டவர்கள் அனைவருமே பாவிகளல்ல. இயற்கைக் காரணங்களாலும் வியாதிகள் வரலாம். பாவங்களாலும் வியாதிகள் வரலாம். ஒருவர், புகைப் பிடித்துக்கொண்டே இருப்பாரானால் அவர்கள் நுரையீரல்கள் கெட்டுப்போகும். மருத்துவர்கள் அப்படித்தான் கூறுகிறார்கள். ஒருவர், தொடர்ந்து மது அருந்திக்கொண்டே இருப்பாரானால் அவரது கல்லீரல் கெட்டுப்போகும். மருத்துவ அறிவியல் இப்படியே கூறுகிறது. அப்படியே சரீரத்துக்கு விரோதமாகச் செய்யும் பாவமோ, தவறான செயல்களோ வியாதியைக் கொண்டு வருகின்றன.

பிசாசின் வல்லமையும் நோயைக் கொண்டு வருகிறது. சாத்தானின் வல்லமையால் 18 வருடம் கூனியாயிருந்த ஒரு பெண்மணியின் வாழ்க்கையில் அதைக் காண்கிறோம். இயேசு, அவளைத் தொட்டுக் குணப்படுத்தினார். ஆகவே, வியாதி பிசாசின் வல்லமையினாலும் வருகிறது. நோய், பில்லிசூனியத்தினாலும், கீழ்ப்படியாமையினாலும் வருகிறது. ஆம், பல காரணங்கள் உள்ளன. ஆனால், ஒருவர் இயேசுவிடம் திரும்பினால், அவர் ஒவ்வொருவரும் குணம் பெறுவதற்கான கிரயத்தை ஏற்கனவே செலுத்திவிட்டமையால், சுகமடைவார். "அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5)என்று வேதம் கூறுகிறபடி, அவர், சிலுவையில் காயம்படும்படி தன் சரீரத்தை ஒப்புக்கொடுத்தார். இன்று நம்மை குணப்படுத்தும்படிக்கு, இயேசு தம் சரீரம் காயம்பட அனுமதித்தார் (மத்தேயு 8:17). உங்கள் ஆத்துமாவும், பிறகு உங்கள் சரீரமும் குணப்படும்படி இன்று நீங்கள் இயேசுவிடம் வரலாம். தேவன், "கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?" (எரேமியா 8:22)என்று கேட்கிறார். இயேசு, திரளான ஜனங்களைக் கண்டபோது மனதுருகினார்; அவர்கள் அவருடன் மூன்று நாட்கள் தங்கியிருந்தபோது அவர்களைக் குணப்படுத்தினார் (மத்தேயு 9:35,36). வேதம், "அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்," (லூக்கா 4:40)என்று கூறுகிறது. உங்களைக் குறித்து இயேசுவின் இருதயம் எப்போதும் அப்படியே எண்ணுகிறது.

ஜெபம்:
தகப்பனாகிய தேவனே, நீர் என்னை குணமாக்குகிறவராக இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தயவாய் என் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து, என்னை உள்ளாக சுத்திகரித்தருளும். என் சரீரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் தொட்டு, பரிபூரண சுகத்தை தந்தருளும். உம் வல்லமையால் எல்லா வியாதிகளின் வேரையும் அகற்றிப்போடும். ஆண்டவராகிய இயேசுவே, உம் சுகமளிக்கும் பிரசன்னம் எனக்குள் இப்போது பாய்ந்து செல்லட்டும். என் சரீரம், சிந்தை, ஆவி ஆகியவற்றை இப்போது பெலப்படுத்தும். என் வாழ்வில் உடைந்துபோயிருக்கும் எல்லாவற்றையும் சீர்ப்படுத்தும். இயற்கைக்கு அப்பாற்பட்ட உம் அதிசயங்களை நம்பும்வண்ணம் என்னை விசுவாசத்தினால் நிரப்பும். உம் மனதுருக்கம் இன்று எனக்குள் பரிபூரணத்தை கொண்டு வருவதாக என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.