அன்பானவர்களே, இயேசு, தம் இருதயத்தை உங்களுக்குத் தருவதற்கு விரும்புகிறார். மகிமையின் நம்பிக்கையான கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் அவர் தேவன்மேலும் மக்கள்மேலும் அன்பு கொண்ட தம் இருதயத்தை நீங்கள் கொண்டிருக்க நிச்சயமாய் உதவி செய்வார். வேதம், "நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்," (எரேமியா 31:33) என்று கூறுகிறது. நீங்கள் தேவனின் இருதயத்தைப் பெற்றிருப்பீர்கள். இன்று அவரை நோக்கிக் கூப்பிட்டு, "ஆண்டவரே, என் கடின இருதயம் அகற்றப்படட்டும். இயேசுவின் இருதயம் எனக்கு வேண்டும்," என்று கூறுங்கள். வேதம், "உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்," (எசேக்கியேல் 36:26) என்று கூறுகிறது. எல்லோரையும் குற்றப்படுத்தும் இருதயம், எளிதாக முறுமுறுக்கும் இருதயம் அகற்றப்படும். தேவன் உங்களுக்கு தம் சொந்த இருதயமான புதிய இருதயத்தை, புதிய ஆவியைக் கொடுப்பார்.

ஆகவேதான், வேதம், "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்," (வெளிப்படுத்தல் 3:20) என்று கூறுகிறது. உங்கள் இருதயத்தைத் திறந்து, "இயேசுவே, என் உள்ளத்துக்குள் வாரும்," என்று கூறுங்கள். அவர் உள்ளே வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்; மாம்சத்துக்குரியவை, பயம், பிசாசின் ஒடுக்குதல், மனச்சோர்வு, இழப்பின் பயம் எல்லாம் ஓடிப்போம். இயேசுவின் ஜீவன் உங்களுக்குள் இருக்கும். புயல், அலைகள் இவற்றின் நடுவில் இயேசு நின்று, "இரையாதே, அமைதலாயிரு," என்று கூறினார். அதே அதிகாரத்தை தேவன் உங்கள் இருதயத்துக்குள் வைக்கிறார். சூழ்நிலைகள் உங்களுக்கு விரோதமாக எழும்பலாம். உங்களுக்கு எதிராக சதியாலோசனைகள் செய்யப்படலாம். பொய்யான குற்றச்சாட்டுகள் உங்களைக் கீழே தள்ள முயற்சிக்கலாம். உங்கள் பெயரைக் கெடுக்கும்படியாக தவறான வார்த்தைகள் பேசப்படலாம். ஆனால், உங்களை அழைத்தவர் யாரென்றும் நீங்கள் இன்னாருடையவர் என்றும் அறிந்திருப்பதால் பயப்படமாட்டீர்கள்.

நீங்கள் ஒருபோதும் பொல்லாத மக்களுக்கோ, உபத்திரவமான சூழ்நிலைகளைக் கண்டோ அஞ்சமாட்டீர்கள். உலகம் உங்களுக்கு விரோதமாக பேசலாம். சமூக ஊடகம் பொய்களைப் பரப்பி, கணக்கற்றமுறை பார்க்கப்படலாம். ஆனால், உங்கள் இருதயம் சமாதானத்தால் நிறைந்திருக்கும். உங்கள் கண்கள், உங்கள் இருதயத்துக்குள் பிரவேசித்த, உலகத்தில் இருக்கும் பிசாசிலும் பெரியவரான இயேசுவின்மேல் வைக்கப்பட்டிருக்கும். அவர் உங்களைக் குறித்து, "என் இருதயத்துக்கு ஏற்றவனா(ளா)கக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன்(ள்) செய்வான்(ள்)," (அப்போஸ்தலர் 13:22) என்று கூறுவார். தேவன் ஏன் உங்கள்மேல் கோபமாயிருக்கவேண்டும்? அவரிடத்தில் தீமை கிடையாது. உங்கள் இருதயம் அவருடைய வீடாக இருக்கிறபடியாலும் நீங்கள் அவரது சித்தத்தை செய்கிறபடியாலும், எந்த அளவு அதிகமாக மக்கள் உங்களுக்கு விரோதமாக எழும்புகிறார்களோ, அந்த அளவு அதிகமாக தேவன் உங்களை உயர்த்துவார். அன்பானவர்களே, இன்று உலகத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். வேதம், "கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்," (1 கொரிந்தியர் 6:17) என்று கூறுகிறது. இந்த உலகில் உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? இயேசுவுடன் நடந்து, "இயேசுவின் பின்னே போக தீர்மானித்துள்ளேன். பின்னோக்கமாட்டேன்," என்று சொல்லுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இயேசுவின் ஆவியால் நிறைந்த சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டித்தருளும். எல்லா கடினத்தையும், பயத்தையும், பெருமையையும், உலக ஆசைகளையும் என்னிலிருந்து அகற்றியருளும். ஆண்டவரே, என் உள்ளத்தினுள்ளே வந்து அதை நீர் என்றென்றைக்கும் தங்கும் இடமாக்கியருளும். என்னை சுற்றிலும் வீசும் எல்லா புயலுக்கும் என்னை உபத்திரவப்படுத்தும் எல்லா சத்தத்துக்கும் மேலாக உம் சமாதானம் ஆளுகை செய்யட்டும். வலப்புறமும் இடப்புறமும் திரும்பாமல் உத்தமமாய் உம்மைப் பின்பற்ற உதவும். உம் சித்தத்தை செய்கிற, உம் இருதயத்துக்கேற்றவனா(ளா)க என்னை உருவாக்கும். எப்போதும் நீர் என்னோடு இருக்கிறீர் என்னை அறிந்து தைரியமாய் நடக்கும்படி என்னை பெலப்படுத்தவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.