அன்பானவர்களே, இன்றைக்கு, "உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்" (யாத்திராகமம் 23:25) என்ற அருமையான வாக்குத்தத்தம் தியானத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, அவரை சேவிப்பது நம் வாழ்வில் ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். கர்த்தரிடத்தில் நம்பிக்கையாகவும் மனமகிழ்ச்சியாகவும் இருக்கவேண்டும் என்று வேதம் போதிக்கிறது (சங்கீதம் 37:3,4). நாம் கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருக்கும்போது, அவர் நம் இருதயத்தின் விருப்பங்களையும் வேண்டுதல்களையும் அருளிச் செய்வார். கர்த்தர், இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்க பிரியமாயிருந்தார் (எண்ணாகமம் 24:1). தேவன், நம் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பதாக வாக்குத்தத்தம் அளிப்பதின் பொருள் என்ன? அவர் நம் அனுதின வாழ்க்கையை ஆசீர்வதிப்பதாகவும், நம் அன்றாட தேவைகளை அளிப்பதாகவும் பொருள்படும்.

உணவும் தண்ணீரும் நாம் வாழ்வதற்கு அவசியமானவை. கர்த்தர், நம் அன்றாட தேவைகளை அருளிச்செய்கிறார். தேவன் நல்லவராகவே இருக்கிறார். அவர் தினமும் காலையில் இஸ்ரவேல் மக்களுக்கு மன்னாவை அருளினார். அவர்களை ஆரோக்கியமாகவும் காத்துக்கொண்டார். வேதம், நாற்பது ஆண்டுகளாக அவர்கள் வஸ்திரம் பழையதாகவில்லை; கால்கள் வீங்கவில்லை என்று கூறுகிறது (உபாகமம் 8:4). தினமும் அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் அருளப்பட்டது. நம் தேவன் இந்த உலகில் எல்லோருக்கும் உணவும் தண்ணீரும் கொடுப்பதற்கு போதுமான வல்லமையுள்ளவராயிருக்கிறார். தேவனே நமக்கு அருளிச்செய்கிறவர். நாம் கர்த்தரை நம்பி அவரை தொழுதுகொள்ளும்போது, அவர்தாமே நமக்கு அப்பமும் ஜீவத்தண்ணீருமாக மாறுகிறார்.

இயேசுவே, தேவ அப்பமாக ஜீவனைத் தருவதற்கு பரலோகிலிருந்து உலகத்திற்கு இறங்கி வந்தார் (யோவான் 6:33). நித்திய ஜீவனுக்குக் காரணமாகும் ஜீவத்தண்ணீரை இயேசு தருகிறார் (யோவான் 4:14). ஆம், அவர்தாமே பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறார். ஆண்டவரை ஆராதிப்பதன் மூலமாக நாம் தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம். வேதத்தில், இயேசு தம் சீஷர்களுக்கு, "எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்" என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார் (மத்தேயு 6:11). ஜெபம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது. நாம் அனுதினமும் ஜெபிக்கும்போது, தேவனுடைய வார்த்தையை தினமும் வாசிக்கும்போது, ஆசீர்வாதம் நம் வாழ்க்கைக்குள் வரும்.

தேவன் நமக்கென்று ஆயத்தம் பண்ணியிருக்கிற ஆசீர்வாதத்தை ஒருபோதும் அலட்சியம் பண்ணக்கூடாது. எங்கள் பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தபோது, நான் தினமும் வேதத்தை வாசித்து ஜெபிக்கும்படி கூறுவேன். தேவனுடைய வார்த்தையை மனப்பாடம் செய்யாமல் போகவிடமாட்டேன். உள்ளத்தில் தேவ வசனத்தை வைத்திருப்பது ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் அவசியமாயிருக்கிறது. ஆண்டவருக்கு விரோதமாக பாவம் செய்யாமல் அது தடுப்பதோடு, அவருக்குப் பிரியமாயிருக்கவும் உதவும். ஆம், நாம் தேவனுக்குப் பிரியமாயிருக்கும்போது, அவர் நம் இருதயங்களின் விருப்பங்களை அருளிச்செய்கிறார். நான் சிறுமியாக இருந்தபோது, என் அம்மா தினமும் வேதத்தை வாசிக்கும்படி கூறுவார்கள். ஆனால், நான் அவர்களுக்காக வேகவேகமாக வாசித்துவிட்டு மூடிவிடுவேன். உண்மையில் அதில் எந்தப் பலனும் இல்லை. நாம் வேதத்தை வெறுமனே பிரித்து ஓரிரண்டு வசனங்களை வாசித்துவிட்டு போதும் என்று எண்ணுகிறோம்.

தேவனுடைய வார்த்தையை நாம் பிரியமாய் வாசிக்கும்போது, அவருடன் நேரம் செலவழிக்கும் சந்தோஷத்தை அனுபவிக்கும்போது, ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்கிறோம். தம் வசனத்தின் மூலமாக ஆண்டவர் அளிக்கும் வாக்குத்தத்தம், நமக்கு 'கேக்' போன்று உள்ளது. தீர்க்கதரிசன வார்த்தையை நாம் பேசும்போது, அது 'கேக்'கின் மேல் இருக்கும் 'கிரீம்'போல உள்ளது. அவரது ஆசீர்வாதம் நம் வாழ்வில் கூட்டப்படுகிறது. எந்த அளவு அதிகமாக தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறோமோ அந்த அளவு அதிகமாக அவரது ஆசீர்வாதங்கள் நம் வாழ்வில் பெருகும். அனுதினமும் கர்த்தரின் சந்தோஷம் நம் உள்ளங்களில் அதிகரிக்கவேண்டும்.

வேதம், இயேசுவே வார்த்தை என்று கூறுகிறது. வார்த்தையே மாம்சமாகியது (யோவான் 1ம் அதிகாரம்). ஆம், இயேசு, தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். அவரது வார்த்தையை அதிகமாய் வாசித்து, அவரது சமுகத்தை சந்தோஷமாய் அனுபவித்து, இயேசுவைப்போலாகிறோம். வேதம், நாம் மகிமையின்மேல் மகிமையடைந்து, அவருடைய சாயலுக்கு மறுரூபமாகிறோம் என்று கூறுகிறது (2 கொரிந்தியர் 3:18). நாம், மகிமையின்மேல் மகிமையும் பெலத்தின்மேல் பெலனும் பெறுகிறோம். பரலோக ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது, வெறுமனே அப்பத்தையும் தண்ணீரையும் பெற்றுக்கொள்வதைக் காட்டிலும் எவ்வளவு சிறந்ததாயிருக்கிறது! பரிசுத்த ஆவியின் வல்லமையின் வாயிலாக மெய்யான சந்தோஷம் ஆண்டவரிடமிருந்து வருகிறது. உணவும் தண்ணீரும் இல்லாமல் நம்மால் சில நாட்கள் உயிர்வாழவும் கூடும்; ஆனால், தேவன் இல்லாமல் ஒரே ஒரு நாள் கூட வாழ முடியாது. ஆம், நாம் ஆண்டவரை தொழுதுகொள்ளும்போது, அவரது ஆசீர்வாதம் நம் உணவின்மேலும் தண்ணீரின்மேலும் இருக்கும். இந்த ஆசீர்வாதம் சரீரபிரகாரமானது மட்டுமல்ல; ஆவிக்குரியதாகவும் உள்ளது.

ஜெபம்:
பரம தகப்பனே, உம் வார்த்தையின்படியே, உம் பிள்ளைகளுக்கு உணவையும் தண்ணீரையும் அளித்திடும். உலகப் பிரகாரமான தேவைகளைக் காட்டிலும், பரலோகத்தின் மெய்யான அப்பமும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற ஜீவத்தண்ணீருமான இயேசுவை அவர்களுக்கு அளிப்பீராக. இதை வாசிக்கும் ஒவ்வொருவரையும் உம் சமுகத்தால் நிரப்பி, உம் வசனத்தின்மேல் ஆழ்ந்த வாஞ்சையை அளித்திடும். அனுதினமும் உம்மிடம் ஜெபித்து உமக்குக் காத்திருப்பதற்கு அவர்களுக்கு உதவும். உம் ஜனங்கள்மேல் உம் அபிஷேகம் இரட்டிப்பாய் தங்கட்டும். அவர்களை உம் ஊழியத்தில் பயன்படுத்தி, பரிசுத்த ஆவியால் அளவின்றி நிரப்புவீராக. அவர்கள் பாத்திரம் ஆசீர்வாதங்களால் நிரம்பி வழியும்படி செய்து, அவர்கள் பிள்ளைகளையும் ஆசீர்வதித்தருளும். எல்லோருடைய வாழ்விலும் உம் ஆச்சரியமான வாக்குத்தத்தம் நிறைவேறும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.