அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது" (சங்கீதம் 145:9) என்று கூறுகிறது. கர்த்தர், உங்களுக்கு தம் தயவை காண்பிக்க விரும்புகிறார். கிருபையுள்ள அவர் உங்களை நிராகரிக்கவோ, புறம்பே தள்ளவோ மாட்டார். இரக்கத்தில் பரிபூரணரான அவர் உங்களை மன்னிக்கவும் தம் கருணையை உங்களுக்குக் காண்பிக்கவும் ஆயத்தமாயிருக்கிறார். ஆகவே, தைரியமாயிருங்கள்.
மிருக ஜீவன், மரங்கள் உள்பட பூமி முழுவதுமுள்ள தம் சிருஷ்டிகள் யாவற்றுக்கும் கர்த்தர் இரக்கம் காண்பிக்கிறார். தாம் படைத்த யாவற்றுக்கும் கருணை காண்பிப்பாரானால், உங்களுக்கு இரங்காமல் இருப்பாரோ? கண்டிப்பாக, இரங்குவார். அவர் இரக்கம் காண்பிக்கும்போது, தகுதியே இல்லாதபோதும் நமக்கு, தம் தயவையும் கிருபையையும் அளிக்கிறார். நம் சிருஷ்டிகர் எவ்வளவு மனதுருக்கமும் அன்பும் நிறைந்தவர்! அவரது நன்மையையும் பரிபூரண ஆசீர்வாதங்களையும் அனுபவிப்பது ஆச்சரியமானது.
ஆண்டவர் நன்றியறியாதவர்களிடமும் துரோகிகளிடமும் கருணையாயிருக்கிறார் என்று வேதம் நமக்கு நினைப்பூட்டுகிறது (லூக்கா 6:35). சர்வவல்லவராகிய நம் தேவன், கடந்த காலத்தை பாராமல் எல்லோருக்கும் நன்மை செய்கிறார். சிலுவையில் தொங்கியபோதும், இயேசு தம்மை அறைந்தவர்களுக்காக, "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று ஜெபித்தார். அவரது இரக்கமும் மனதுருக்கமும் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன! அதே தயவை உங்களுக்கும் காண்பிக்க அவர் விரும்புகிறார்.
ஒருவேளை, நீங்கள் உங்களைக் குறித்து, தகுதியற்றவராக அல்லது தேவனுக்கு உண்மையாயிராதவராக எண்ணலாம். கவலைப்படாதிருங்கள். இன்றே இயேசுவிடம் வாருங்கள்; மனந்திரும்புங்கள். ஆண்டவர், இரக்கத்தில் பரிபூரணமானவராக, உங்களை மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். வேதத்தில் சகேயு என்ற பெயருள்ள ஒரு மனுஷனைக் குறித்து வாசிக்கிறோம் (லூக்கா 19ம் அதிகாரம்). அவன் ஆயக்காரருக்கு தலைவனாயிருந்தான். லஞ்சம் பெற்று, அநியாயமாக ஆஸ்தியை சேர்த்தான். அவன் இயேசுவைக் காண விரும்பினாலும், மக்கள் குறைகூறுவார்கள் என்று பயந்தான். இயேசுவை பின்பற்றினால் மக்கள் கேலி செய்வார்கள் என்றும், அரசு அதிகாரி என்ற பதவியை இழக்கவேண்டியதிருக்கும் என்றும் பயந்தான்.
சகேயு, உயரம் குறைவாயிருந்தபடியால், பெரிய கூட்டத்தின் நடுவே அவனால் இயேசுவை பார்க்க இயலவில்லை. அவன் ஒரு மரத்தின்மேல் ஏறி அவரைப் பார்த்தான். இயேசு அவ்விடத்திற்கு வந்தபோது, அந்த மரத்தின் அடியில் நின்று, முன்னர் ஒருபோதும் சந்திக்காதபோதும், சகேயுவை பெயர் சொல்லி அழைத்தார். இயேசு, தேவனாயிருந்தபடியால், அவன் உள்ளத்தை அறிந்து, "சகேயுவே, சீக்கிரம் இறங்கி வா. இன்று நான் உன் வீட்டில் தங்கவேண்டும்," என்றார். இயேசுவைப் பின்பற்றுவதால் தன் வேலை போய்விடக்கூடும் அல்லது மக்கள் குறைகூறுவார்கள் என்று அஞ்சி, சகேயு தன்னை மறைத்திருந்திருக்கக்கூடும். ஆனால், இயேசு அவனை குறைகூறவோ, அவன் கடந்த காலத்தைக் குறித்து கேள்விகேட்கவோ இல்லை. அவர், அவன் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று தன் விருப்பத்தை மட்டும் வெளிப்படுத்தினார். சகேயு, மகிழ்ச்சியுடன் இயேசுவை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றான்; அவன் பயம் அகன்றுபோனது. போகும் வழியிலேயே அவன் தன் தவற்றை ஒப்புக்கொண்டு, "ஆண்டவரே, நான் அநியாயமாய் பணத்தை வசூலித்திருக்கிறேன். என்னுடைய ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். யாரையாவது ஏமாற்றியிருந்தால் நான்கு மடங்கு திரும்ப கொடுக்கிறேன்," என்று கூறினான்.
தன் நேர்மையற்ற செயல்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்ட அவன், அவற்றை சரி செய்துவிடுவதாகவும் வாக்குக்கொடுத்தான். இயேசு, "இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது," என்று கூறினார். ஆண்டவர், சகேயுவுக்கும் அவன் குடும்பத்தார் அனைவருக்கும் மறுரூபத்தை அளித்தார். அவர், அதே மறுரூபத்தை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கொடுப்பார். மனந்திருந்திய இருதயத்துடன் இயேசுவிடம் வந்த பாவம் செய்த பெண்ணைக் குறித்தும் வேதத்தில் வாசிக்கிறோம் (லூக்கா 7ம் அதிகாரம்). அவள், அவர் பாதத்தில் அமர்ந்து அழுதாள். கண்ணீரால் பாதங்களைக் கழுவி, தன் தலைமுடியால் அவற்றைத் துடைத்தாள். எல்லோரும் முன்பாக, அவள் நளதம் என்ற விலையுயர்ந்த தைலத்தை அவர் பாதத்தில் ஊற்றினாள்.
அவளைச் சுற்றிலும் இருந்தவர்கள், அவளை குறைகூறி, பாவி என்று கேலி செய்தபோதும், இயேசு அவளுக்கு இரக்கம் காண்பித்து, "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. சமாதானத்தோடு போ," என்றார். இயேசு அவளை முற்றிலும் மன்னித்து, அவளுக்கு புதிய தொடக்கத்தை அளித்தார். அவர், அவளது குற்றங்களை அகற்றி, கௌரவத்தை திரும்ப அளித்தார். நன்றியறியாதோருக்கும் கெட்டுப்போனவர்களுக்கும் கருணை காட்டும் அவர், உங்களுக்கும் இப்படியே செய்வார்.
ஆண்டவர், தாம் படைத்த யாரும் அழிந்துபோவதை விரும்புவதில்லை. எல்லோரும் மன்னிப்பை பெற்று, சுத்திகரிக்கப்பட்டு, தம் பிள்ளைகளாக மாறி, தம் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவேண்டும் என்றே விரும்புகிறார். சகலமும் அவரைக் கொண்டும், அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோசெயர் 1:16). ஆண்டவர், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (2 பேதுரு 3:9). இன்று அவருடைய வார்த்தைக்குச் செவிகொடுங்கள். மனந்திரும்பி இயேசுவின் பிள்ளையாகுங்கள். அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். உங்கள் பாவமான வழிகளை விட்டு, சுத்திகரிக்கப்படுங்கள். சகேயுவையும், இயேசுவிடம் வந்த பெண்ணையும்போல அவரது மன்னிப்பைப் பெற்று, சமாதானத்தோடு வாழுங்கள். இயேசு உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்கள் குடும்பத்தோடு தங்கியிருப்பார். ஆண்டவர்தாமே உங்கள் வீட்டாரை ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்:
தகப்பனே, இந்தத் தருணத்தில் எங்களை ஆசீர்வதித்தருளும். எங்கள் இருதயங்களைச் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக. பரிசுத்தத்தில் வளரவும், உமக்கும் மற்றவர்களுக்கும் முன்பாக நீதியில் நடக்கவும் எங்களுக்கு உதவும். சரியானவற்றை செய்யவும், உம் வழிகளில் நடக்கவும், உம் வசனத்துக்கு உண்மையாயிருக்கவும் வேண்டிய கிருபையை எங்களுக்கு அருளிச்செய்யும். எங்கள் பாவங்களை மன்னியும்; வாழ்வை மறுரூபமாக்கும்; எங்கள் குடும்பங்களில் உம் இரக்கமும் தயையும் தங்கியிருப்பதாக. உம் சமுகம் எப்போதும் எங்களோடு இருப்பதாக. இயேசுவின் நாமத்தில் இந்த ஜெபத்தை தாழ்மையோடு ஏறெடுக்கிறோம். ஆண்டவரே, எங்கள் ஜெபத்தை ஏற்றுக்கொண்டு எங்களோடு தங்கியிரும், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


